சோனியா காந்தி கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளதாகவும், ராகுல் காந்திக்கு கொரோனா 'பாசிட்டிவ்' இருந்ததால், அவர் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை எனவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, கொரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு குறித்து தொடர்ந்து மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்களை காங்கிரஸ் தெரிவிக்குமா? என பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சோனியாகாந்தி கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தி விட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி கடந்த மே 16-ம் தேதி தடுப்பூசி போட்டுக் கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், அவருக்கு கொரோனா பரிசோதனை முடிவில் 'பாசிட்டிவ்' என்று வந்திருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு, மூன்று மாதங்களுக்கு பிறகே தடுப்பூசி போட வேண்டும் என்பதால் ராகுல் காந்தி தடுப்பூசி போட காத்திருக்கிறார். ராகுல் காந்தி விரைவில் தடுப்பூசி எடுத்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்