மனிதர்கள் மட்டுமா காதலிப்பார்கள் ? மனிதனை தாண்டி ஒரு காதல் கதை இருக்கிறது தெரியுமா ? எந்த விதமான புனைவு இல்லாமல் பறவைகளின் காதலை பற்றி எழுதவேண்டுமானால் அதற்கு இருவாச்சி பறவையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
அடர்ந்த மலைக்காடுகளில் உள்ள உயரமான மரங்களில் வசிக்கும் இப்பறவை காதலுக்கே உரித்தானது. மஞ்சள், கருப்பு, வெள்ளை நிறங்களில் சற்றே பெரிய உருவம் கொண்ட பறவையாக இருக்கும். ஆண் பறவையும், பெண் பறவையும் ஒரு முறை இணை சேர்ந்து விட்டால் இறக்கும் வரை பிரியாமல் வாழும். காதலாகி, கருவாகி இனப்பெருக்க காலத்தில் கூட பிரியாமல் வாழ்வதே இப்பறவையின் தனி சிறப்பாகும்.
இணைசேர்ந்த பின் முட்டையிடுவதற்கு தகுந்த இடத்தை தேடும்போது பாதுகாப்பான இடங்களை தேர்ந்தெடுக்கிறது. பொந்தினுள் நுழையும்போது பெண் பறவையானது தனது இறகுகளையெல்லாம் உதிர்த்து மெத்தைபோல் செய்து 2 லிருந்து 3 வரை முட்டையிடுகிறது. ஆண்பறவையானது, அருகில் உள்ள ஆற்றங்கரையில் இருந்து எடுத்து வரும் மண்ணை தனது எச்சிலுடன் சேர்த்து உணவளிக்க மட்டும் சிறிய துவாரத்தை விட்டு சுவர் வைத்து மூடிவிடும். அப்படி உருவாக்கப்பட்ட சுவரானது விஷத்தன்மையுடன் இருக்குமாம்.பாம்புகள் மற்றும் இதர எதிரிகளிடம் இருந்து தற்காத்து கொள்ள இயற்கை கொடுத்த படைப்பு என்கிறார்கள்.
மேலும் கூட்டிலிருக்கும் இணைக்கும், குஞ்சுகளுக்கும் சத்து நிறைந்த பழங்கள், கொட்டைகள், சிறிய ஊர்வனங்கள் போன்றவற்றை உணவாக தருகிறது. இவற்றை பற்றிய அதிர்ச்சி தகவல் என்னவெனில் உணவு தேடச்செல்லும் ஆண் பறவை வேட்டையினாலோ அல்லது இதர காரணங்களாலோ உயிரிழந்து கூட்டிற்கு வரவில்லையென்றால் மொத்த குடும்பமும் அழிந்து விடும். அடர்ந்த மலைக்காடுகளில் வாழும் இப்பறவையானது மற்ற பறவைகளை காட்டிலும் சற்றே தனித்தே காணப்படுவது அது எழுப்பும் ஒலி மூலம் மட்டுமே. ஒரு ஹெலிகாப்டர் பறந்து வருவது போன்ற சத்தம் அப்பறவை வருவதற்கான அறிகுறியாகும். அழகே ஆபத்து என்பார்கள் அல்லவா அது உண்மை தான்.
இப்பறவையின் இறகுகள் மற்றும் இறைச்சிக்கு சர்வதேச சந்தையில் பெரும்மதிப்பு உண்டு. 40 ஆண்டுகள் வாழக்கூடிய இந்த பறவைகள் விதைப்பரவலுக்கு முக்கிய பங்காற்றுகிறது. இவை இல்லையெனில் மழைக்காடுகளில் முக்கியமான பத்துவகை மரங்கள் முளைக்காது என தாவர ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகம் முழுவது 54 வகையான இருவாச்சிகள் வாழ்கிறது .அதில் இந்தியாவில் 9 வாழ்கிறது என்றால் சிறப்பு வாய்ந்தவையாகத்தான் கூற வேண்டும் அல்லவா..!
கட்டுரை: ஆர்.கெளசல்யா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்