Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'குண்டர் தடுப்புச் சட்டம்' என்றால் என்ன?- குற்றத்தன்மை முதல் தண்டனை வரை: ஓர் எளிய விளக்கம்

சமூக வலைதளங்களில் தலைவர்கள்மீது அவதூறு பரப்பியது தொடங்கி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்தது வரையிலான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் வரையில் வரிசையாக அடுத்தடுத்து குண்டர்கள் தடுப்புச் சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது. சரி, குண்டர்கள் தடுப்புச் சட்டம் என்றால் என்ன? யாரையெல்லாம் இதன்கீழ் கைது செய்ய முடியும்? கைதானவருக்கு உள்ள வாய்ப்புக்கள் என்ன?
 
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டதுதான் இந்த குண்டர்கள் தடுப்புச் சட்டம். சட்ட விரோதமாக மதுவைத் தயாரிப்பது, விற்பனை செய்வது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் காரியங்களைச் செய்வது, வன்முறையைத் தூண்டுவது, கடத்தல் காரியங்களில் ஈடுபடுவது, வழிப்பறியில் ஈடுபடுவது போன்ற தவறான காரியங்களைச் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும், கடுமையான தண்டனைகளை வழங்கவும் ஏதுவாக வலுவானதொரு சட்டத்தைக் கொண்டுவர விரும்பினார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.
 
அரசு உயரதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் நடத்திய விரிவான ஆலோசனைக்குப் பிறகு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார் எம்.ஜி.ஆர். அந்தச் சட்டத்தின் முழுமையான பெயர், 'சட்டவிரோத மது தயாரிப்பாளர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வன்முறையாளர்கள், சட்டவிரோத பொருள் கடத்தல்காரர்கள், நில அபகரிப்பாளர்கள் தடுப்புச் சட்டம். சுருக்கமாக, வன்முறையாளர் தடுப்புச் சட்டம்'. இந்த வன்முறையாளர்களை 'குண்டர்கள்' என்று எளிமையாகச் சொல்லி, 'குண்டர் சட்டம்' என்றே இந்தச் சட்டம் அழைக்கப்படுகிறது.
 
2006-ஆம் ஆண்டில் திரையுலகினரின் வேண்டுகோளுக்கிணங்க திரைப்படங்களைத் திருட்டுத்தனமாக பதிவு செய்வது, சி.டி.க்களில் பதிவு செய்து விற்பதும் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
 
மேற்கூறிய குற்றம் (சட்டப் பிரிவுகள் 16, 17, 22, 45) எதையாவது செய்யக்கூடியவர் அல்லது செய்யக்கூடிய குழுவைச் சேர்ந்தவர் என்று கருதினாலே அவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க முடியும். நகர்ப்புறங்களில் காவல் துறை ஆணையரும், கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சியரும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் கொண்டவர்கள்.
 
image
இந்த சட்டத்தின்படி ஒருவர் கைது செய்யப்பட்டால், அவர் 12 மாதங்கள் தொடர்ந்து சிறையில் அடைக்க முடியும். அவரிடம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளத் தேவையில்லை, அவர்களுக்கு பிணையும் வழங்கப்படாது. அவர்களை விடுவிப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்தால், முன்கூட்டியே விடுவிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.
 
அதேநேரத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறினால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கலாம் என்றும் சட்டத்தின் ஷரத்து கூறுகிறது.
 
இந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் ஒருவர், தன்மீது குற்றமில்லை என்று நிரூபிக்க விரும்பினால் கைதானவர் சார்பில் வழக்கறிஞர் வாதிட இயலாது. அவர் சார்பாக அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான், முறையீட்டு குழுவைத்தான் அணுக வேண்டும். இந்த விசாரணை குழுவானது, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்டு அமைக்கப்படும். இந்த குழுவினர் விசாரித்து, சம்பந்தப்பட்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டது சரியா என்பது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்கும். அதைத்தொடர்ந்து அவர் மீதான நடவடிக்கை தொடரும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்