நாகர்கோவிலை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஜாக்சன் ஹெர்பி எடுத்த இந்த புகைப்படம்தான் இணையத்தை ஆக்கிரமித்திருந்தது.
தமிழக அரசின் கொரோனா நிவாரண உதவித்தொகையாக, இரண்டாம் தவணையாக ரூ.2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் என்கிற ஏழை மூதாட்டி, ரூ.2 ஆயிரம் பணமும் மளிகைப் பொருட்களும் வாங்கிய மகிழ்ச்சி பிரவாகத்தில் சிரித்த சிரிப்பு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், நெட்டிசன்கள் உள்பட ஏராளமானோர் அந்தப் புகைப்படத்தை வைலராக்கி, ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதாக கொண்டாடித் தீர்த்தனர்.
நாகர்கோவிலை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஜாக்சன் ஹெர்பி எடுத்த இந்த புகைப்படம்தான் இணையத்தை ஆக்கிரமித்திருந்தது. நாகர்கோவில் மாநகராட்சி புகைப்படக்காரரான ஜாக்சன் ஹெர்பி, தனது துணிச்சலான செயல்பாடுகளால் கவனிக்கப்படுவர். கன்னியாகுமரி மாவட்டத்தை ஒக்கி புயல் தாக்கியபோது இவர் எடுத்த புகைப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி குமரி வந்திருந்தபோது பாதிப்பின் தீவிரத்தை விளக்க வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களில் இவர் எடுத்த படங்களும் அதிக அளவில் இடம்பெற்றிருந்தன.
இப்போது கூட கொரானா பெருந்தொற்றுக் காலத்தில் முழுவீச்சில் இறங்கி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஜாக்சன் ஹெர்பி. கொரோனா நோய் தோற்றால் இறந்தவர்களின் உடல்களை எப்படி மயானத்தில் எரிக்கிறார்கள் என்று கவச உடை அணிந்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டார். கொரோனா நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று கொரோனா வார்டிற்கு உள்ளே போய் அதையும் புகைப்படங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்தார். கொரோனா நோய்தொற்று இருப்பதை எப்படி ஆய்வகத்தில் ஆய்வு செய்கிறார்கள் என்கிற புகைப்படத்தையும் வெளிக்கொண்டு வந்தார்.
இப்போது வைரலான நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தை எடுத்த ஜாக்சன் அந்த பாட்டியிடம், "பாட்டி இந்த பணத்தை என்ன செய்யப் போறீங்க" என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பாட்டி இந்த பணத்தை வைத்து நல்லதாக சேலையும் தேவையான பொருட்களும் வாங்க போகிறேன்" என்று மகிழ்ச்சியில் நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்.
இதனிடையே தமிழ்நாடு அரசால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் நிவாரணத் தொகை ஜாக்சனுக்கு கிடைத்திருக்கிறது. அதிலிருந்து 2,000 ரூபாயை அந்த பாட்டியைத் தேடி அவரின் வீட்டிற்கு சென்று கொடுத்து உதவியிருக்கிறார்.
ஜாக்சன் ஹெர்பியிடம் பேசினோம். ''எப்போதும்போல எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் நாகர்கோவிலில் உள்ள கீழ கலுங்கடி பகுதியில் எடுக்கப்பட்டது. இந்த 2000 ரூபாயை வைத்து நல்ல சேலை வாங்குவேன் என்று இந்த பாட்டி கூறியது என் நெஞ்சை நெகிழ செய்தது.
சில தினங்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்றால் முழு ஊரடங்கு காலத்தில் தனது வறுமையின் காரணமாக மூன்று பெண் குழந்தைகளின் தாய் ஒருவர் சைக்கிளில் டீ வியாபாரம் செய்வது குறித்து புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தேன். இந்த பதிவைப் பார்த்த சென்னை பத்திரிகையாளர் மன்ற செயலாளர் பாரதி தமிழன் ரூ.5000 எனக்கு அனுப்பி வைத்து அந்த பெண்ணிடம் இந்த பணத்தை உடனடியாக கொண்டு சேர்க்குமாறு கூறியுள்ளார். மேலும் அந்த தாய்க்கு குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இரண்டு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை அனுப்பி வைத்தார். இப்படி நான் எடுத்த எடுத்த புகைப்படங்கள் கரையேற்றுவதை எண்ணி மனம் மகிழ்கிறது.
புகைபடக் கலைஞராக ஏராளமான கிண்டல்களையும், அவதூறுகளையும், கஷ்ட நேரங்களையும் எதிர்கொண்டிருக்கிறேன். 2,000 ரூபாய் சம்பளத்திற்காக 2 லட்ச ரூபாய் மதிப்புடைய கேமராவை தூக்கிக்கொண்டு அலைந்திருக்கிறேன். வெட்டிங் போட்டோகிராபர் ஆகி லட்சக்கணக்கில் என்னால் சம்பாதிக்க முடியும். ஆனால் புகைப்பட பத்திரிகையாளராக சாதிப்பதுதான் எனது லட்சியம்.
இயற்கையையும் உழைப்பையும் தடுக்க யாராலும் முடியாது. வெறுமனே பேசிக் கொண்டிருந்தால் வெற்றியும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும். வேடிக்கை பார்ப்பவர்களுக்கு வேர்வையின் வலிமை தெரியாது. துணிந்து களம் காண்பவன் மட்டுமே காலத்தால் அழிக்க முடியாத காவியமாக மாறுவான்.
நான் இந்த புகைப்படத் துறைக்கு வரக் காரணமாக இருந்த என்னுடைய மாமா ஹெல்த் இன்ஸ்பெக்டர் மதன் குமாருக்கு நன்றி கூற விரும்புகிறேன். அதேபோல் தமிழ்நாடு பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா, நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் ஆணையரான சரவணன் சார், தற்போதைய ஆணையர் ஆஷா அஜித் மேடம், நாகர்கோவில் ஆர்டிஓ மயில்... இப்படி பல்வேறு அதிகாரிகள் என்னை ஊக்கப்படுத்தி வருகின்றனர். வேலம்மாள் பாட்டி புகைப்படத்தை பகிர்ந்த அனைவருக்கும் என் நெகிழ்ச்சியான நன்றி’’ என்கிறார் அவர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்