Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர் கஜேந்திர செகாவத்தை இன்று சந்திக்கிறார் துரைமுருகன்

மேகதாது அணை கட்டுவதை ஏற்க முடியாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

கர்நாடகாவுடன் காவிரி, தென்பெண்ணை ஆறுகள், கேரளாவுடன் முல்லைப் பெரியாறு அணை என தமிழகத்தின் நதிநீர் பிரச்னைகள் தீர்வே இல்லோமல் சென்று கொண்டிருக்கின்றன. காவிரியில் கர்நாடகம் நீர் திறப்பதை மேலாண்மை ஆணையம் உறுதி செய்திருந்தாலும், மாதந்தோறும் வழங்கும் நீரை கர்நாடகம் திறந்துவிடுவதில்லை. இதுதவிர தமிழகத்துக்கு நீர் திறந்து விடுவதை தடுக்கும் நோக்கிலே மேகதாதுவில், கர்நாடகம் அணை கட்ட முயற்சிக்கிறது. அணைக்கு ஒப்புதல் கேட்டு கர்நாடக முதலைச்சர் எடியூரப்பா எழுதிய கடிதத்துக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இந்த சூழலில் டெல்லியில் தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தை சந்தித்துப் பேசுகிறார். அப்போது மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற கருத்தை அவர் வலியுறுத்த உள்ளார். தென்பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியில் கர்நாடகம் அணை கட்டியது குறித்தும் ஆலோசிக்க உள்ள துரைமுருகன், நடுவர் மன்றம் அமைக்கவும் கோரிக்கை வைக்க உள்ளார்.

இதுதவிர, முல்லைப்பெரியாறு அணை விவகாரம் குறித்தும் மத்திய அமைச்சருடன் விவாதிப்பார் எனத் தெரிகிறது. மேலும், நதிநீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த மனுவையும் மத்திய அமைச்சரிடம் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்