Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இரண்டாம் தரமானதா? முதல் தரமானதா?- ஒரு பார்வை

இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று பார்மெட்டுகளுக்கும் கேப்டன் விராட் கோலிதான், மேலும் இந்த மூன்று விதமான கிரிக்கெட் அணிக்கும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிதான். ஆனால் இப்போது இங்கிலாந்தில் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக முகாமிட்டுள்ளது. கொரோனா தடுப்புமுறைகள் பின்பற்றப்படுவதால் இந்தத் டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் தொடங்குவதால் வேறு எங்கும் பயணிக்காமல் இங்கிலாந்திலேயே தங்கியிருந்து போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. இதே நேரத்தில் ஏற்கெனவே இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் போடப்பட்ட ஒப்பந்தப்படி அந்நாட்டுடன் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா பங்கேற்க தீர்மானித்தது.

image

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் இருப்பதால் டி20, ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்தது பிசிசிஐ. அந்த அணிக்கு ஷிகர் தவானை கேப்டனாகவும், பயிற்சியாளராக முன்னாள் வீரரும் தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவராக இருக்கும் ராகுல் டிராவிட்டை நியமித்து, பயோ பபுள் முறை பின்பற்றப்பட்டு இலங்கைக்கு அனுப்பியது பிசிசிஐ. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் ஜூலை 13 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இலங்கைக்கு வந்திருப்பது இந்தியாவின் இரண்டாம் தர அணி என இலங்கையின் முன்னாள் வீரர் அர்ஜூனா ரனதுங்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.

image

இது குறித்து பேசிய அவர் "இரண்டாம் தர அணியை அனுப்பி, நம்மை அவமானப்படுத்தியுள்ளனர். தொலைக்காட்சி வருவாய்க்காக இதை ஒத்துக்கொண்ட நம் கிரிக்கெட் நிர்வாகத்தையே இதற்காக நாம் கண்டிக்க வேண்டும். இலங்கை கிரிக்கெட் அணி இப்போது தொடர் தோல்வியை சந்தித்து வந்தாலும், நமக்கென்று ஒரு மரியாதை கெளரவம் இருக்கிறது. அதை எந்தச் சூழலிலும் நாம் விட்டுத்தர கூடாது. அதனால் நம்முடைய சிறந்த கிரிக்கெட் அணியை இந்தியாவின் இரண்டாம் தர அணியுடன் விளையாட அனுமதிக்கக் கூடாது" என பேசியுள்ளார் ரனதுங்கா. 1996 ஆம் ஆண்டு இலங்கை உலகக் கோப்பை வென்ற அணிக்கு கேப்டனாக இருந்தவர் ரனதுங்கா.

இவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய இலங்கை கிரிக்கெட் வாரியம் "இலங்கைக்கு வந்துள்ள அணி இரண்டாம் கட்ட அணி இல்லை. இதில் உள்ள 20 வீரர்களில் 14 பேர்கள் ஏற்கெனவே மூன்று வடிவிலான போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி உள்ளனர். எனவே இலங்கைக்கு வந்துள்ளது இந்தியாவின் இரண்டாம் தர அணியல்ல" என பதிலடி கொடுத்துள்ளது. எதுவாக இருந்தாலும் அர்ஜூனா ரனதுங்கா வைக்கும் இந்தக் குற்றச்சாட்டு சரியானதா என சற்றே பின்னோக்கி பார்ப்போம்.

image

2000 ஆண்டின் தொடக்கத்தில்....

2000-ஆம் ஆண்டுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு என தனித்தனி அணிகளோ, கேப்டன்களோ கிடையாது. ஆனால் 2000 ஆம் ஆண்டுக்கு பின்பு கிரிக்கெட் உலகில் பெரும் மாற்றம் வந்தது. அதாவது டெஸ்ட் போட்டிகளுக்கு ஏதுவான ஓர் அணி, ஒருநாள் போட்டிகளுக்கு ஏதுவான ஓர் அணி என பிரிக்கப்பட்டது. இந்த மாற்றத்தை ஆஸ்திரேலியா, இந்திய கிரிக்கெட் அணிகள் உடனடியாக கையாளத் தொடங்கியது. இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை சவுரவ் கங்குலி டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என இரு அணிகளுக்குமே கேப்டனாக இருந்தார். ஆனால் அணியின் வீரர்களில் மட்டுமே மாற்றம் இருக்கும். உதாரணத்துக்கு டெஸ்ட்டில் அற்புதமாக விளையாடும் விவிஎஸ் லஷ்மன், பெரும்பாலும் இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற மாட்டார். இதேபோல ஒருநாள் போட்டிகளில் விளையாடும் யுவராஜ் சிங் டெஸ்ட்டில் இருக்கமாட்டார்.

image

பின்பு 2007-க்கு பின்பு ஒருநாள், டெஸ்ட், டி20 பார்மெட்கள் என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளாகியது. இந்திய டெஸ்ட் அணிக்கு அனில் கும்பளே கேப்டனாக இருந்தார். தோனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டார். இந்த அணிகளில் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட், ஒருநாள் அணிகளில் மட்டுமே விளையாடினர். டி20 போட்டிகளில் சீனியர் வீரர்கள் யாரும் விளையாடவில்லை. டி20க்கு என தனி அணி உருவாக்கப்பட்டு கேப்டனாக்கப்பட்டார் தோனி. வெகு சில சீனியர் வீரர்களை மட்டுமே வைத்து 2007 உலகக் கோப்பையை வென்றார் தோனி. பின்பு தோனி கிரிக்கெட்டின் மூன்று பார்மெட்களுக்கும் கேப்டனாக செயல்பட்டாலும், ஒவ்வொரு வகையிலான போட்டிகளுக்கும் வீரர்களின் மாறுபாடு இருக்கும்.

image

எனவே 2000-இல் தொடங்கிய இந்த பார்மெட்டை எப்படி இலங்கையின் "லெஜண்ட்" அர்ஜூனா ரனதுங்கா மறந்தார் என தெரியவில்லை. உலகக் கோப்பை வெற்றிக்கு பின்பு இலங்கை அரசியலில் இருந்ததால் "கிரிக்கெட் கோமா"வில் இருந்தாரா என்பதும் புரியவில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். பின்பு எதை வைத்து இலங்கைக்கு சென்றுள்ள இந்திய அணியை இரண்டாம் தர அணி என சொல்கிறார்? கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பன்ட், பும்ரா இல்லை என்றால் இந்தியா இரண்டாம் தர அணியாகிவிடுமா என்ன? இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் ஷிகர் தவான் 142 ஒருநாள் போட்டிகளிலும் 65 டி20 போட்டிகளிலும் விளையாடியவர். இலங்கை கிரிக்கெட் கேப்டன் குசால் பெரேரா 100 போட்டிகளில் மட்டுமே விளையாடியவர். இதில் எந்த அணி இரண்டாம் தரம்? மேலும் இலங்கை தொடர்ந்து பல்வேறு நாடுகள் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

இப்போது கூட இங்கிலாந்துடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரை இழந்து நாடு திரும்ப காத்திருக்கிறது. இலங்கை ஜாம்பவனாக இருந்தது ஒரு காலம், ஆனால் இப்போது அந்த அணிக்கு தேவையாக இருப்பது தீவிர அறுவைச் சிகிச்சை, அப்போதுதான் அந்நாடு வெற்றிப்பாதைக்கு திரும்பும். மாறாக இந்திய அணி இரண்டாம் தரமானதா அல்லது முதல் தரமானதா என்பதற்கான விடை தொடரின் இறுதியில் தெரிந்துவிடும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்