Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆட்டோ, கார்களில் விதிகள் பின்பற்றப்படுகிறதா? கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவு

ஆட்டோ, கார்களிலுள்ள கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பதை குற்றமாக பார்க்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், 'மதுரையிலுள்ள பெரும்பாலான ஆட்டோக்கள் மோட்டார் வாகன விதியை பின்பற்றுவதில்லை. இருக்கைகளில் அதிகளவில் மாற்றம் செய்துள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். கட்டண மீட்டர் பொருத்துவதில்லை. அதிகளவு கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, மீட்டர் பொருத்தாத ஆட்டோக்களுக்கு தகுதிச் சான்று வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

image

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு,' ஆட்டோ மற்றும் கார்களில் உள்ள கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பதை குற்றமாக பார்க்க வேண்டும். ஏனெனில் பயணிக்கும் பொதுமக்களிடம் மோசடியாக அதிக கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது. வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்கும்போது இவை முறையாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மனுதாரரின் கோரிக்கை குறித்து மதுரையிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (ஆர்டிஓ) முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரைக்கு உட்பட்ட பகுதியில் ஆட்டோ மற்றும் கார்களில் கட்டண மீட்டர் முறையாக பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்யாமல் தகுதிச் சான்றிதழ் வழங்கக் கூடாது. விதிப்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதையும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதையும் ஆர்டிஓக்கள் உறுதிபடுத்த வேண்டும்.

image

கட்டண மீட்டர் பொருத்தியுள்ளனரா? அதிக ஆட்களை ஏற்றிச் செல்கிறார்களா? விதிகள் மீறப்படுகிறதா? என்பதையும் குறிப்பாக ஷேர் ஆட்டோக்கள் - மினி பஸ்களாகவும், மினிபஸ்கள் - பஸ்களாகவும் இயக்குவதை தடுக்க வேண்டும். மேலும் அதிக ஆட்களை ஏற்றுவதை கடுமையானதாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பான அறிக்கையை அவ்வப்போது போக்குவரத்து இணை ஆணையரிடம் வழங்க வேண்டும். இவற்றை இணை ஆணையர் கண்காணிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்