Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“தமிழ்நாட்டுக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும்” - முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் அம்மாநில அரசு முனைப்பாக உள்ளது. மேகதாது அணையால் தமிழ்நாட்டில் விவசாயம் பாதிக்கும் என்பதால் அத்திட்டத்தை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சட்டப்பேரவையில் இடம் பெற்றுள்ள 13 கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, பாரதிய ஜனதா சார்பில் நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், ரவிக்குமார், இடதுசாரி கட்சிகளின் சார்பில் முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் ஆகியோர்  பங்கேற்றனர்.

இதில், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு அனைத்து சட்டப்பேரவை கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் 3 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டுக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும். காவிரி கர்நாடகத்துக்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டிற்கு முழு உரிமை இருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதை கர்நாடகத்துக்கு மட்டுமல்ல, ஒன்றிய அரசுக்கும் உணர்த்த வேண்டும்.

மேகதாது அணை கட்டிவிட்டால் எப்படி தண்ணீர் வரும் என்பதே நமது கேள்வி. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்பதாலேயே இந்த அனைத்துக்கட்சி கூட்டம். மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை என கர்நாடகா கூறுவதில் துளி அளவும் உண்மை கிடையாது. மேகதாது அணை கட்டினால் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும்” எனப் பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்