Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மின் துறையில் போட்டிக்கு வழிவகுக்கும் மசோதா... மக்களவையில் அறிமுகமாகிறது

மின்சாரத் துறையில் போட்டியை ஏற்படுத்த வழிவகுக்கும் மின்துறை சீர்திருத்த மசோதாவை வரும் மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 19-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் மேற்கொள்ளப்பட உள்ள அலுவல்கள் குறித்த பட்டியலை மக்களவை வெளியிட்டுள்ளது. இதில் மின்துறையில் போட்டியை அதிகரிக்க வழி செய்வதுடன் வினியோக பணிகளுக்கு உரிமம் பெறும் முறையை கைவிடுவது உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட மின்சாரத் துறை சீர்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மேலும் 16 புதிய மசோதாக்களும் கொண்டு வரப்பட உள்ளன. இவை தவிர ஏற்கனவே கொண்டு வரப்பட்ட 3 அவசர சட்டங்களுக்கு மாற்றாக மசோதாக்களை தாக்கல் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே நாடாளுமன்ற தொடரில் எதிர்க்கட்சிகள் வைக்கும் புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில் தேவையான தயாரிப்புகளுடன் வருமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு துறைகளுக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில் இந்த அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.

இக்கூட்டத் தொடரில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தவறியது, ரஃபேல் முறைகேடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நாடாளுமன்ற தொடரில் முன்வைக்க வேண்டிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எம்.பி.ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்