Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனா, லாக்டவுன்; இதெல்லாம் வயித்துக்கு தெரியுமா?- மீளா துயரில் தனியார் பள்ளி ஆசிரியர்கள்

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமையை விரிவாக பார்க்கலாம்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கத்தை அறிவித்திருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஏழைய எளிய மக்கள் வேலையின்றி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இவர்களுக்கு தன்னார்வலர்களும், அமைப்புகளும், ஆதரவுக்கரம் நீட்டினர்.

இதையடுத்து கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில், பொது முடக்கத்தில் சில தளர்வுகளை அறிவித்து மக்களின் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இந்நிலையில். கொரோனா 3வது அலை வரும் அதனால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு தயக்கம் காட்டிவருகிறது.

இதனால் தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களில் பாதிக்கு மேற்பட்டோரை பள்ளி நிர்வாகம் வேலையில் இருந்து நிறுத்திவிட்டது. மீதமுள்ள ஆசிரியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே அளித்து வருகிறது. இதனால் தனியார் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகவே இருக்கிறது.

அரசு வேலை கிடைக்கும் கைநிறைய சம்பாதிக்கலாம் என்று ஆர்வத்தோடு படித்த ஆசிரியர்கள், அரசு வேலை கிடைக்காததால் கிடைத்த சம்பளத்தை பெற்றுக் கொண்டு தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

image

இந்நிலையில். பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. சுத்தமாக வருமானம் இன்றி தவித்த ஆசிரியர்கள் இந்த ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதன் மூலம் குறைந்த சம்பளமாவது கிடைக்கிறதே என்ற மன திருப்தியில் பணியாற்றி வருகின்றனர். தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது என்பதை அறிய மதுரை,திருச்சி,கோவை உட்பட பல மாவட்டங்களில் வசிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் பேசினோம்.

ஆனால். அவர்கள் சார் இதெல்லாம் எதுக்கு சார். ஸ்கூல் திறந்தால் மீண்டும் அதே பள்ளியில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். பேட்டியெல்லாம் கொடுத்தால் அந்த வேலையும் போய்விடும் தயவு செய்து வேண்டாம் என்றார்கள். ஆனால், மதுரையை சேர்ந்த நவீன்குமார், மயிலாடுதுறை மூபீஸ்கர், வேலூர் மதன் ஆகியோர், சார் நாங்கள் பணியாற்றும் பள்ளியின் பெயரை போடக்கூடாது அதேபோல எங்க போட்டோவும் தரமாட்டோம் என்ற கண்டிப்புடன் நம்மிடம் பேசினர்...

நவீன்குமார் (தனியார் பள்ளி ஆசிரியர்)

நான் பிரென்ச் மொழி பாடம் எடுப்பதால் தனியார் பள்ளியை மட்டுமே நம்பி இருக்க வேண்டியிருக்கிறது என பேச ஆரம்பித்தார் மதுரை நவீன்குமார். நான் படித்த படிப்பிற்கேற்ற வேலையை இங்கே தேடினேன் கிடைக்கவில்லை. அதனால் கேரள மாநிலம் கோட்டையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றுகிறேன். கொரோனாவுக்கு முன்பு 25,000 சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்ப ஆன்லைன் கிளாஸ் மட்டும் எடுப்பதால் பாதி சம்பளம்தான் தருகிறார்கள். இந்த போதாத சம்பளத்தை வைத்து வாழ்க்கை நகர்த்துவது சிரமம்தான். ஆனால் இந்த இழப்பு எனக்கு மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைவருக்குமானது அதனால் கொஞ்சம் மனசை தேர்த்திக் கொள்கிறேன்.

நல்லவேளை இன்னும் எனக்கு திருமணம் ஆகவில்லை அதனால் நான் தப்பித்தேன். கல்யாணம் ஆகியிருந்தால் யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை என்று சிரித்தவர் தொடர்ந்து... அப்பா சின்னதா ஒரு பேக்கரி வைத்திருக்கிறார் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் ப்ரவசிங் சென்டரில் வேலை பார்க்கும் அண்ணன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் வாழ்க்கை நகர்த்திக்கொண்டு வருகிறோம். கடைகள் திறந்திருப்பதால் இந்த வருமானம் இல்லையென்றால் இதுவும் இல்லை. அடுத்த வேளை சோத்துக்கே கஷ்டப்பட வேண்டியதுதான் என பெருமூச்சு விட்டார்.

image

மதன் (தனியார் பள்ளி ஆசிரியர்) 

வேலூர் தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மதனிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினோம்.... ஒரு டிகிரி முடித்த பின்பு ஆசிரியர் வேலைக்குச் செல்ல தேவையான படிப்பை படித்தால் அரசு உத்யோகமும் கிடைக்கும் கைநிறைய சம்பாதிக்கலாம் என்ற ஆர்வத்தில் ஆசிரியர் வேலையை தேர்ந்தெடுத்தேன். ஆனால், அரசு வேலை கிடைக்கவில்லை என்றாலும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறோம். விரும்பிய வேலை கிடைத்துவிட்டது என்ற நிறைவுடன் குறைவான ஊதியமாக இருந்தாலும் தனியார் பள்ளியல் வேலை செய்து வந்தேன்.

ஆனால் கொரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டதால் என்போன்ற தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. நான் வேலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக தற்காலிகமாக பணியாற்றி வருகிறேன். எனக்கு ஆரம்பத்துல் 9 ஆயிரம் சம்பளமாக கொடுத்தார்கள். பின்பு சிறிது சிறிதாக உயர்த்தி கொரோனாவுக்கு முன்பு 14 ஆயிரம் சம்பளமாக வாக்கிக் கொண்டிருந்தேன். அதன்பிறகு கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டதால் ஐந்தாறு மாதங்கள் சம்பளம் இல்லாமல் இருந்தது.

இந்த சமயத்துல எந்த வேலைக்காவது போயி சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. கொரோனா, பொதுமுடக்கம் இதெல்லாம் எப்படி சார் வயித்துக்கு தெரியும் வேளா வேளைக்கி அதுக்கு போட்டுக்கிட்டு தானே இருக்கணும். அதனால வேலை எதுவும் இல்லாததால் வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்றுவந்தேன். மூனே மூன்று நாட்கள்தான் அதுல எனக்கு 2 ஆயிரம் வருமானம் கிடைத்தது. அதைவைத்து குடும்பத்தை ஓட்டினோம்.

பெயிண்டிங் வேலைக்கு போனது என்னோட அப்பாவுக்கு தெருஞ்சு ஒருவாரம் ஏங்கிட்ட பேசவே இல்ல. ஏம்மா இதுக்காம்மா அவன இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வச்சேன் என்று எங்க அம்மா கிட்ட அப்பா புலம்பியிருக்கார். அப்புறமா நான் அவர்கிட்ட நிலைமையை விளக்கிச் சொன்னேன் அவர் ஏதுக்கவே இல்ல் என்ன செய்றது சார் 3 வயசுல சின்ன பையன்வேற இருக்கான். அவனுக்காக வேண்டியாவது ஏதாவது வேலைக்கி போயிதானே ஆகணும் என்றார் நாதழுதழுக்க.

பள்ளிகள் நடைபெறும்போது டியூசன் எடுத்தேன். அதன் மூலம் சிறிது வருமானம் கிடைத்தது. அந்த பணம் சிறிய தேவை பெரிதும் உதவியது. கொரோனா நோய் பரவல் அச்சத்தால் டியூசனும் எடுக்க முடியவில்லை. அந்த வருமானமும் இல்லாமல் இருந்தேன். ஆனால், இப்ப பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றதால் இப்போது 9 ஆயிரம் சம்பளமாக கொடுக்கிறார்கள். சம்பளமே இல்லாமல் இருந்ததற்கு இந்த சம்பவமாவது கிடைக்கிறதே என்ற திருப்தியோடு வேலை பார்த்துக்கிட்டிருக்கேன் என்றார்.

image

மூபீஸ்கர் (தனியார் கல்லூரி விரிவுரையாளர்)

என்னோட ஆசிரியர்களை பார்த்து நானும் ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணத்தில் ஆசிரியர் வேலைக்கு படித்தேன். என பேச ஆரம்பித்தார் மயிலாடுதுறை மூபீஸ்கர். நான் வரலாற்றுத்துறை ஆசிரியர், வரலாற்றுத்துறை மாணவனுக்கு சமூகத்தில் என்ன மரியாதை இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறேன். கொரோனா வருவதற்கு முன்புவரை 6ஆயிரம் சம்பளமாக பெற்றேன். என்னது 6 ஆயிரமா என்ற நம்மிடம், என்ன சார் பண்றது பிடித்த வேலையா போயிருச்சு, எனக்கு 15ஆயிரத்தில் வேற வேலையெல்லாம் வந்துச்சு ஆனா, இது புடுச்ச வேலையா இருப்பதால் சம்பளம் குறைவாக இருந்தாலும் பார்த்து வருகிறேன்.

தமிழ்நாடு முழுவதும் தனியார் கல்லூரிகளில் குறைவான சம்பளம்தான் கொடுக்குறாங்க சார். கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டே ஒரு விடுதியில் நைட் சிப்ட் வேலை பாக்குறேன் சார். இப்ப எனக்கு இரண்டு வேலையும் இல்ல சார். அதனால் இப்ப விவசாய கூலி வேலைக்கு போய்க்கிட்டு இருக்கேன். இதுல ஒரு நாளைக்கு 500 ரூபாய் கிடைக்குது. இந்த வேலையும் ஒரு நாளைக்கு இருக்கும் இரண்டு நாளைக்கு இருக்காது. கூட்டிக் கழித்து பார்த்தால் கல்லூரியில் கிடைத்த சம்பளம்தான் இங்கேயும் கிடைக்கும் என சிரித்தவர் தொடர்ந்து....

இப்ப இருக்குற சூழ்நிலையில் எந்த வேலை கிடைத்தாலும் பார்க்கிறேன். லோடு இறக்குவது. நெல், அரிசி மூட்டை இறக்குறது. வீட்டுக்கு நான் சம்பாதித்து கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கு அதனால மரம் வெட்டக் கூட போவேன். ஏதாவதொரு கூலி வேலைக்கி போயிருவேன். நம்பல நம்பியிருக்குற குடும்பதை நான் தானே காப்பாத்தணும் அதனால உடல் உழைப்பு தொடர்பாக எந்த வேலை வந்தாலும் செய்வேன். இப்ப கூட ஒரு கல்யாணத்துல சப்ளையர் வேலைக்கு போயிருந்தேன். 1000 பேருக்கு நம்ம கையால உணவு பரிமாறிய மன நிறைவோட 500 ரூபாய் சம்பளமும் கிடைத்தது. அதோடு எனக்கு மூன்று வேளையும் சாப்பாடும் கிடைத்தது.

இன்னும் எனக்கு கல்யாணம் ஆகல. இந்த சம்பளத்தை வைத்துக் கொண்டு கல்யாணம் ஆகும் என்ற நம்பிக்கை இல்லை. நானும் அரசு வேலைக்கு தொடர்ந்து முயற்சி செய்துகொண்டு தான் இருக்கிறேன். இதுல நான் படித்தது வரலாறு அதுவும் தமிழ் மீடியம். ஆனால் தேர்வுகள் அனைத்து ஆங்கிலத்தில் வருகிறது. நான் எப்படி எழுதி பாசாகுறது. இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன் என்றார் நம்பிக்கையுடன்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்