Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தகுதியான இல்லத்தரசிகளுக்கே ரூ.1,000 உதவித்தொகை: வாக்குறுதியில் பின்வாங்குகிறதா திமுக அரசு?

தகுதியான குடும்பங்களை கண்டறிந்த பிறகே ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
 
தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று தனது முதல் பட்ஜெட்டை திமுக அரசு தாக்கல் செய்துள்ளது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒரு முக்கிய அறிவிப்பாக, திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருந்த இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து உரையாற்றுகையில், தகுதியான குடும்பங்களை கண்டறிந்த பிறகே இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
 
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் கூறுகையில், ''தேர்தல் வாக்குறுதியில் தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்திருந்தது. ஆனால் இன்றைய பட்ஜெட் அறிவிப்பில் தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிய வரைமுறைகள் உருவாக்கப்படும் என்றும் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்த பிறகே அமல்படுத்தப்படும் என்றும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருக்கிறார். இது திமுக அரசின் பின்வாங்கும் பேச்சாக தெரியவருகிறது'' என்று கூறினார்.
 
திமுக செய்தித்தொடர்பாளர் ராஜீவ் காந்தி கூறுகையில், ''இதுவரைக்கும் நிதி அறிக்கை என்பது தொழில் சார்ந்த அறிக்கை என்கிற பார்வை இருந்தது. ஆனால் இந்த பட்ஜெட் அதுவல்ல.  ஒரு நிதிநிலை அறிக்கையில் அனைவரையும் திருபதிப்படுத்த முடியாது. ஆனால் யாரையும் சிரமப்படுத்தி விடக்கூடாது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடு சமூக நீதிக்கும் கவனம் செலுத்த வேண்டும்.
 
சமூக நீதிக்கு முதலீடு செய்வது வருமானமாக வருமா என்று பார்க்க முடியாது. அது மனிதகுல மேம்பாடாகத்தான் இருக்கும். சமூக நீதியையும் பொருளாதார நீதியையும் கொண்டு வந்திருக்கிற நிதிநிலை அறிக்கையாக இது திகழ்ந்துள்ளது. இது கொரோனா பேரிடர் காலம் என்பதால் பெரிய அளவில் சீர்திருத்தங்களை அரசு கொண்டுவரவில்லை. அனைத்துத் துறை தரப்பினரும் மீண்டு வந்த பிறகு நிதி சீர்திருத்தங்களை எதிர்பார்க்கலாம்'' என்கிறார் அவர். 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்