நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுள் ஒன்று ஃபேக்டரிங் ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா (Factoring Regulation (Amendment) Bill, 2021). இதன் முக்கியத்துவம் குறித்து, இதன்மூலம் சிறு, குறு நிறுவனங்களுக்கு கிடைக்க கூடிய நன்மை குறித்து சற்றே தெளிவாகப் பார்ப்போம்.
ஒரு தொழிலின் முக்கிய நோக்கமே வருமானம்தான். ஆர்டர் கிடைத்துவிட்டால் பொருள் அல்லது சேவையை வழங்கிவிடுவோம். ஆனால், சரியான நேரத்தில் பணம் கிடைக்காது. சரியான நேரத்தில் பணம் வந்தால்தான் அடுத்த வேலையை நிறுவனங்கள் செய்ய முடியும். கடனை அடைப்பது, சம்பளம் கொடுப்பது என நிறுவனங்கள் செய்ய வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. நம் உடம்பில் ரத்த ஓட்டம் இருப்பதுபோல நிறுவனங்களில் பணப்புழக்கம் இருந்தால்தான் சரியான முடிவுகளை எடுக்க முடியும்.
கடைகளில் காசு கொடுத்து பொருட்களை நாம் வாங்குவோம். ஆனால், சிறு நிறுவனங்களை பொருள்/சேவை கொடுத்து பில் அனுப்பி காத்திருந்து பணத்தை பெறுவார்கள். இந்தக் காத்திருப்பு காலத்தை குறைப்பதுதான் ஃபேக்டரிங் (Factoring).
பணத்துக்காக காத்திருக்காமல் அந்த பில்லினை வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்திடம் கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்வதுதான் இங்கே ஃபேக்டரிங் எனப்படுவதாகும். வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் சில சதவீத தள்ளுபடியில்தான் அந்தப் பணத்தை கொடுப்பார்கள் என்றாலும், மூன்று மாதத்துக்குப் பிறகு ரூ.100 கிடைப்பதை விட தற்போது ரூ.95 கிடைப்பது தொழிலுக்கு நல்லது. இதனைதான் ஃபேக்டரிங் என அழைக்கிறோம்.
ஃபேக்டரிங் என்பது கடன் கிடையாது. நமக்கு வரவேண்டிய சொத்தினை (பில்) கொடுத்து பணத்தை பெறுகிறோம். இரண்டாவது நாம் தள்ளுபடி கொடுத்து பணத்தை பெறுகிறோம். வட்டியாக கணக்கிட்டால் பெரிய சதவீதம் வரும். ஆனால், கடன் பெறும் தகுதியை எட்டாத நிறுவனங்களுக்கு தள்ளுபடியில் உடனடியாக பணம் கிடைக்கும் என்றால், அவர்களின் நிதி நிலைமை மேம்படும்.
சட்ட திருத்தம் என்ன? ரிசர்வ் வங்கி உருவாக்கி இருக்கும் Trade Receivables Discounting System தளத்தில் பதிவு செய்துகொள்வதன் மூலமாக ஃபேக்டரிங் சேவையை பெறமுடியும். சிறு, குறு நிறுவனங்கள் இந்தத் தளத்தில் பதிவு செய்துகொள்வதன் மூலம் ஃபேக்டரிங் பெறமுடியும். ஆனால், இதுவரை 7 பெரிய வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) மட்டுமே இந்த வசதியை கொடுத்து வந்தன. தற்போது அனைத்து வங்கிகள் மற்றும் என்பிஎப்சிகள் ஆகியவை ஃபேக்டரிங் மூலம் சிறு, குறு நிறுவனங்களுக்கு பில்லினை அடிப்படையாக வைத்து பணம் கொடுக்கலாம் என புதிய சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், முன்பு ரூ.500 கோடி டர்ன் ஓவருக்கு மேல் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த வசதி இருந்தது. தற்போது ரூ.250 கோடிக்கு மேல் டர்ன் ஓவர் இருக்கும் நிறுவனங்களும் இந்தத் தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.
ஃபேக்டரிங் என்பது கடன் கிடையாது. பில்லினை கொடுத்து முன்கூட்டியே நிறுவனங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளும். அந்த பணத்தை வசூலிக்கவேண்டிய பொறுப்பு, வங்கி அல்லது நிதி நிறுவனத்துக்கு சென்றுவிடும். ஒருவேளை வசூலிக்க முடியாவிட்டால் வங்கிகளின் வாராக்கடன் பட்டியலில் இந்த ஃபேக்டரிங் இணைந்துவிடும். அதனால், இங்கு பணத்தை பெரும் நிறுவனத்தை விட பணத்தை கொடுக்கும் நிறுவனம் முக்கியமானதாகும்.
இது தொடர்பாக நவரத்னா பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சொக்கலிங்கம் பழனியப்பனிடம் பேசியபோது, "ஃபேக்டரிங் மூலமாக சிறு மற்றும் குறு நிறுவனங்களின் 'கேஷ் ஃப்ளோ' (Cash flow) உயரும். தவிர, சிறு நிறுவனங்களுக்கு இருக்கும் நிதி சார்ந்த பொறுப்புகளை கடன் வாங்கமலே சரிசெய்ய முடியும்" என்றார்.
- வாசு கார்த்தி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்