அரசு திவாலாகியுள்ளதால் வரிகளை கண்டிப்பாக உயர்த்தியே ஆக வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.
மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, "தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பின்வாங்கும் நோக்கம் இல்லை. முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பொருளாதாரம் தெரியாமல் வாய்க்கு வந்தபடி உளறி வருகிறார். அவரது உளரல்களுக்கு பதில் சொல்ல முடியாது. கடன் வாங்கி சொத்துக்களை பெருக்கினோம்” என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியவதற்கு நிதியமைச்சர் பதில் அளித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “பொருளாதாரம் வளர்ந்த மாநிலம் தமிழகம் என்பது உண்மை. ஆனால், தமிழக பொருளாதார வளர்ச்சிக்கும் பாண்டியராஜனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து எனக்கே தெரியவில்லை. 3 சதவீத மூலதனத்திற்கு மட்டுமே வாங்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கொள்கையை மறந்து 6 சதவீதம் மூலதனதிற்கு கடன் பெற்றுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் திட்டங்கள் துவங்க கடன் பெற்றும் பல திட்டங்களை துவங்கப்படாமல் ஊழல் நடைபெற்றுள்ளது. அது விரைவில் கண்டறியப்படும். ஜெயலலிதா ஆட்சியில் இந்த அளவிற்கு கடன் சுமை இல்லை. பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு நீதிக்கட்சி துவங்கி அதற்கு பல்வேறு நபர்கள் பாடுப்பட்டுள்ளனர்.
அரசு திவாலகியுள்ளதால் வரிகளை கண்டிப்பாக உயர்த்தியே ஆக வேண்டும். ஆனால், அது இப்போதா அல்லது பின்னரா என கனவு காண்போருக்கு பதில் சொல்ல முடியாது. அரசின் நோக்கம் வெளிப்படை தன்மைதான். அதன் அடிப்படையில் மட்டுமே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை உள்ளதை முன்னாள் முதல்வர் பழனிசாமி ஒப்புக்கொண்டு விட்டார். மக்களுக்கு எந்த வளர்ச்சியும் அதிமுக ஆட்சியில் நடைபெறவில்லை. ஜெயலலிதா அறிவித்த தொலை நோக்கு பார்வை திட்டம் 2023 - நோக்கம் நிறைவேறவில்லை” என்று தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்