ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவற்றின் நோக்கம் யானைகளை பாதுகாத்து வலசை பாதைகளை கண்டறிவதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 மேற்பட்ட யானைகள் சார்ந்த தன்னார்வ தொண்டு அமைப்புகள் யானைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
அமெரிக்காவை சார்ந்த வில்லியம் சாட்னர் என்பவர் யானைகளை மையப்படுத்தி return to the forest என்ற ஆவணப்படத்தை எடுத்து ஆகஸ்ட் 12,2012 ஆம் நாள் வெளியிட்டுருந்தார். அன்றைய தினத்தை வருடா வருடம் யானைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். பூமியில் டைனோசர்களுக்கு அடுத்து மிகப்பெரிய விலங்காக இருப்பவை யானைகள் . பெரிய உடல், அதித நியாபக சக்தி போன்றவை அவற்றின் பலம் ஆகும். கூட்டமாக இருக்கும் யானைகளை விட ஒற்றை யானை ஆபத்தாகும். இவ்வுலகத்தில் 24 வகையான யானைகள் இருந்திருக்கிறது என்றும் அதில் 22 வகையான யானைகள் அழிந்து விட்டதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. தற்போது ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகள் மட்டுமே உயிரிவாழ்கிறது. தென்னிந்தியாவை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைகளில் யானைகள் அதிகம் வாழ்கின்றன.
அடர்ந்த வனம் என்று சொன்னாலே மரம், செடி, கொடிகள், மூலிகை தாவரங்கள் மற்றும் அங்கு வாழும் உயிரினங்கள் தான். காடுகள் எப்போதும் மனிதனை சார்ந்து வாழ்வதில்லை. மனிதன் தான் காட்டினை சார்ந்து வாழ்கிறான். அங்கிருக்கும் வளங்களை எடுத்துக்கொண்டு அங்கு வாழும் உயிரினங்களுக்கே தீமை செய்கிறான். மனிதர்கள் செய்யும் தீமையால் யானைகள் ஊருக்குள் வருகிறது, மனித யானை மோதல்கள் நடக்கிறது. காட்டின் மிகப்பெரிய உயிர் யானைகள்; அவைகள் ஒரு நாளைக்கு 200 முதல் 250 கிலோ வரையிலான பசுமையான செடி, கொடிகளை ஒடித்து சாப்பிடுகிறது. மீதமுள்ள செடிகளை மற்ற விலங்குகளுக்கு விட்டுவிட்டு செல்கிறது. கிட்டத்தட்ட 25 முதல் 30 கிலோமீட்டர் வரை நடப்பவை. பெரும்பாலும் நீர்நிலைகள் நோக்கி நகரும் பழக்கம் கொண்டவை.
ஆதலால் காட்டில் வாழும் ஏனைய உயிரினங்களும் இவற்றின் வழித்தடத்தை பயன்படுத்தி கொள்கிறது. யானைகள் ஒரு நாளைக்கு 100 முதல் 130 லிட்டர் வரையிலான தண்ணீரை அருந்துகிறது. அவற்றின் செரிமாண மண்டலம் 60 சதவீத உணவை மட்டுமே செரிக்கும் இயல்புடையது. மீதமுள்ளவை கழிவுகளாக வெளியேறி விதைபரவலுக்கு காரணமாகிறது. இக்கழிவுகள் மூலம் விளையும் செடிகள் நல்ல ஊட்டம் பெற்று சத்தான மரங்களாக வளர்கிறது. யானைகள் ஓரிடத்தில் வாழ்பவை அல்ல. அதே சமயத்தில் ஒரே இடத்தில் இருந்தால் உணவு தட்டுப்பாடு மற்றும் உணவு சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டு விடும் நோக்கில் செழுமையான காட்டினை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும்.
அப்படி செல்கின்ற சமயத்தில் விபத்துகளும், யானை-மனித மோதல்கள் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் வலசை பாதையில் ஏற்படும் இடர்பாடுகளே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக அவற்றின் வலசை பாதை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலை ஒடிசா வரை பயணிக்கிறது. 40 , 50 வருடத்திற்கு முன்னர் எல்லாம் அதிக எண்ணிக்கையிலான யானைகள் வலசை சென்று கொண்டிருந்தன. தற்போது ஜவ்வாது மலையில் ஒரே ஒரு யானை மட்டும் இருப்பது வருத்தம் அளிக்கும் செய்தியாக உள்ளது. நகரமயமாக்கல் ,மக்கள் தொகை அதிகரிப்பு போன்றவற்றால் மக்கள் காடுகளை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றனர்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை காப்பு காடுகளில்தான் பெருமளவு மத வழிப்பாட்டு தளங்கள், கல்வி கூடங்கள், கட்டிடங்கள், ரிசார்ட்டுகள், செம்மண் சூளைகள், சிமெண்ட் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால் அங்குள்ள மக்கள் சிறிது சிறிதாக தன் வாழ்விடங்களை அமைத்துக்கொள்ள மேற்கு நோக்கி , அதாவது மலையடிவாரங்களை நோக்கி நகர ஆரம்பித்து விட்டார்கள். 1998 ஆண்டுக்கு முன்பு வரை கோவையில் யானை மனித எதிர்கொள்ளல் நடக்கவில்லை. ஆனால் தற்போது இந்தியாவில் அதிகம் நடக்கும் யானை மனித மோதலில் கோவையே முதன்மை இடமாக இருக்கிறது. 1999 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 191 யானை மனித மோதல்கள் நடந்துள்ளன.
இரு புறத்திலும் இழப்புகள் இருந்தாலும் யானைகளே அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. புராணங்கள், இதிகாசங்கள், கடவுள் என நினைத்த யானைக்கும், மக்களுக்கும் இடையேயான தொடர்பு நீடித்து கொண்டே இருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை மனிதர்கள் யானைகளை கொன்று வருவதை மட்டும் நிறுத்தவே இல்லை. சமவெளிகளில் பரந்து கிடந்த ஒரு கூட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் அடைத்து வைத்து இருப்பது அவ்ற்றிற்கு இழைக்கும் அநீதியாகும். Wildlife trust of india வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்தியாவில் மட்டும் அதிகளவு ஆசிய யானைகள் வாழ்வதாக தெரிவித்து இருக்கிறது. மேலும் 101 வலசை பாதைகள் இருப்பதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.2017 ஆம் கணக்கெடுப்பின்படி 27,312 யானைகள் இருந்துள்ளன.
இது உலகளவில் ஆசிய யானைகளின் எண்ணிக்கை 55% அதிகமாகும். சமூக பழக்க வழக்கம் கொண்ட யானைகள் அவற்றின் வாழ்விட எல்லை சுருங்க சுருங்க நம் எல்லைக்குள் வர ஆரம்பிக்கிறது. அவற்றை துரத்த சத்தம் எழுப்புவதும், பட்டாசுகள் வெடித்து துரத்தவதும்,பொக்லைன் போன்ற இயந்திரங்களால் அப்புறப்படுத்துவதுமாக துன்புறத்தி கொண்டிருக்கிறோம்.நம் மக்கள் இது போன்ற செயல்களை செய்ய, அணைடைய நாடான சீனாவின் யுனான் மாகாணத்தில் 17 யானைகள் பல மாதங்களுக்கு மேலாக அப்பகுதியில் நடமாடுவதை தொடர்ந்த நிலையில், மனிதர்கள் உடனான மோதலை தடுக்க 1.50 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை அப்புறப்படுத்தி இடம்பெயர வைத்துள்ளது.
மேலும் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட அதிகாரிகள் ட்ரோன் கேமராக்கள் மூலம் அங்குள்ள யானைகளை கணகானித்து வரும் செய்தி நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரோக்கிய காடுகளின் அளவுகோளே யானைகள் ஆகும். அவற்றை பாதுகாக்க விட்டாலும் பராவாயில்லை. தயவு செய்து தொந்தரவு செய்ய வேண்டாம்…!
கட்டுரையாளர்: ஆர்.கெளசல்யா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்