Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கோலி 'ஃபார்ம்', அஸ்வின் 'அவுட்'... இந்திய டெஸ்ட் அணி எப்படி? - ஒரு 'செக் லிஸ்ட்' பார்வை

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை புகழ்ப்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி 5-ஆம் நாளில் பெய்த மழைக் காரணமாக டிரா ஆனாலும், அந்தப் போட்டியில் இங்கிலாந்தை காட்டிலும் இந்தியா சிறப்பாக விளையாடி, போட்டியை தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது. என்னதான் சிறப்பாக இருந்தாலும், இந்திய அணியில் சில குறைகள் இருக்கிறது. எப்போதும் நன்றாக விளையாடிக்கொண்டு இருக்கும்போது அணியின் குறைகள் தெரியாது, ஆனால் சற்றே உற்றுநோக்கி பார்த்தால் இந்தியாவின் பிரச்னை பேட்டிங்கில் இன்னும் இருப்பது தெரிய வருகிறது.

image

முதல் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை இந்திய பவுலர்கள் அட்டகாசம். வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா அந்தப் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல முகமது ஷமி இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் அந்நாட்டு பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தார். இதேபோல முகமது சிராஜும், ஷர்துல் தாக்கூரும் தங்களது பங்குக்கு சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்தியாவின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான அஸ்வினுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை. ஆனால், பேட்டிங்கில் முக்கியமான கட்டத்தில் 56 ரன்களை எடுத்தார்.

image

பவுலிங்கை பொறுத்தவரை எந்தப் பிரச்னையும் இல்லை; எல்லாம் நன்றாகவே இருக்கிறது. ஆனால், பேட்டிங்கில்தான் சில கோளாறு இருப்பதாக தெரிகிறது. இந்தியாவின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், கேஎல் ராகுலும் களமிறங்கினர். அதில் ராகுல் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி 84 ரன்கள் எடுத்தார். ஆனால், ரோகித் சர்மா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் கடந்த சில இன்னிங்ஸில் தன் வழக்கமான பேட்டிங்கை வெளிப்படுத்த தவறி வருகிறார் ரோகித் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் தன் வலிமையான திறமையை மீண்டும் நிரூபித்தால் இந்தியாவுக்கு அது பெரும் பலமாக அமையும். இதேபோல இந்திய பேட்டிங்கின் நடுவரிசை தூணான புஜாராவும் தொடர்ந்து ஏமாற்றமளித்து வருகிறார். முதல் இன்னிங்ஸில் அவர் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

image

இதேபோல மிகவும் கிளாசான பேட்டிங்கை வெளிப்படுத்தும் ரஹானேவும் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். கடைசியாக 2020 இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் ரஹானே. அதன் பின்பு நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என எதிலும் அரை சதம் கூட தாண்டவில்லை அவர். ரஹானேவும் பார்முக்கு திரும்பினால் பேருதவியாக இருக்கும். ஏனென்றால், ரஹானே போன்ற திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உலகின் எந்த மைதானங்களிலும் ரன்களை ஈட்டும் திறன் படைத்தவர்கள். மேலும், டெஸ்ட் அணியின் துணை கேப்டன் என்பதால் அவரிடமிருந்து நேர்த்தியான ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளாக சதமடிக்க காத்திருக்கும் கோலி

டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதமடிக்க இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கிறார். அதவும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சன் பந்துவீச்சில் "டக்" அவுட்டாகி ஏமாற்றினார் கோலி. 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடைசியாக சதமடித்தார் விராட் கோலி. அதிலிருந்து இப்போது வரை தன்னுடைய அடுத்த சதத்தை பதிவு செய்ய காத்திருக்கிறார் விராட் கோலி. இப்போதுவரை 2019-இல் இருந்து 14 இன்னிங்ஸ் விளையாடியுள்ள கோலி 345 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பதுதான் சோகம். அடுத்து நடைபெறும் டெஸ்ட் போட்டியிலாவது கோலி சதமடிக்கவில்லை என்றாலும் பழைய "பார்முக்கு" திரும்பினாலே போதும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

image

எதிர்காலத்தில் இப்படியும் நடக்கலாம்...

ஒருவேளை லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியிலும் புஜாரா, ரஹானே ஆகியோரின் மோசமான பார்மினால் இந்தியா தோல்வியடைந்தால், 3-ஆவது டெஸ்ட்டில் பெரும் மாற்றம் இந்திய அணியில் நடக்கும். புஜாராவுக்கு பதிலாக பிருத்வி ஷா அல்லது சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்படலாம். ரஹானேவுக்கு பதிலாக ஹனுமா விஹாரிக்கும் வாய்ப்பு வழங்கலாம். ஹனுமா விஹாரி ஏற்கெனவே இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் அவருடைய பொறுமையான பேட்டிங் காரணமாக ஒரு டெஸ்ட் போட்டியை இந்தியா சிறப்பாக டிரா செய்தது. காலில் காயமடைந்தபோதும் அந்தப் போட்டியில் இந்தியாவை காப்பாற்றினார்.

image

அஸ்வின் vs ரவீந்திர ஜடேஜா

நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் அனுபவம் வாய்ந்த அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டது பல்வேறு விவாதங்களை கிளப்பியது. அந்தப் போட்டியில் பேட்டிங்கை மேலும் வலுப்படுத்த ஜடேஜா சேர்க்கப்பட்டார் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டது. எனினும், அந்தப் போட்டியில் ஜடேஜா விக்கெட் எடுக்கவில்லை என்றாலும், முதலுக்கு மோசமில்லை என்பதுபோல முதல் இன்னிங்ஸில் அரைசதம் விளாசினார். அப்படியே அஸ்வினின் பேட்டிங் ரெக்கார்டுகளை பார்த்தால் அவரும் மோசமில்லை என்றே தெரிகிறது. ஜடேஜா போல அதிரடியாக விளையாடவில்லை என்றாலும், அஸ்வினின் பேட்டிங் நுட்பம் மிகவும் நேர்த்தியானது.

image

அஸ்வின் இதுவரை 79 டெஸ்ட்களில் விளையாடி 2,685 ரன்களை எடுத்துள்ளார். அதில் 5 சதங்களும், 11 அரை சதங்களும் அடங்கும். அதேபோல ஜடேஜா 53 டெஸ்ட்களில் விளையாடி 2041 ரன்கள் எடுத்துள்ளார். அதில் மொத்தம் ஒரு சதமும், 16 அரை சதங்களும் எடுத்துள்ளார். ஆனால் 413 விக்கெட்டுகளை எடுத்து உலகின் நம்பர் 1 சுழற்பந்துவீச்சாளராக ஏற்கெனவே நிரூபித்துவிட்டார் அஸ்வின். வெளிநாட்டு பிட்சகளிலும் அஸ்வின் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் திறமையானவரே. ஆனாலும் வரும் போட்டிகளில் இந்தக் குழப்பத்தை கோலியும், ரவி சாஸ்திரியும் தீர்ப்பார்கள் என்றே நம்பலாம். ஏனென்றால் இருவரின் எதிர்காலத்துக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மிக முக்கியமானது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்