தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பாக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளார்
தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் தொடர்ந்து இந்த கருத்தை முன்வைத்து வந்தார். இது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் தொடர் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார். பிற மாநிலங்களில் நிதிநிலை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கைகளை ஒப்பிட்டு, தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை தயார் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
120 பக்கங்களை கொண்ட இந்த வெள்ளை அறிக்கையில், மாநிலத்தின் கடன் விவரங்கள், மின்சார வாரியம், போக்குவரத்து, மருத்துவம், உள்ளாட்சித் துறை சார்ந்த அரசு நிறுவனங்களின் வரவு செலவு திட்டம் உள்ளிட்டவை இடம்பெறும். கடந்த அதிமுக அரசு எப்படி வருவாய் இலக்கை அடைய தவறியது என்பது குறித்த காரணங்களும் அதில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2001 - 2002 ஆம் நிதியாண்டில் அப்போதைய நிதியமைச்சர் பொன்னையன், அதற்கு முந்தைய 5 ஆண்டு திமுக ஆட்சியில் நடைபெற்ற வரவு செலவு தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்