Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல்:ஆதரவாளர்கள் முட்டிபோட்டு போராட்டம்

சிவசங்கர் பாபாவிற்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரை விடுதலை செய்யக்கோரி பக்தர்கள் முட்டிபோட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த ஜூன் 16-ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் சிவசங்கர் பாபா. தற்போது வரை சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
image
கைதுக்குப் பிறகு சிவசங்கர் பாபாவுக்கு இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதனை சுட்டிக் காட்டி அவருக்கு ஜாமீன் கோரி வருகிறது சிவசங்கர் பாபா தரப்பு. இருப்பினும் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
40 சாட்சியங்களின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியரான பாரதி சீனிவாசன், நடன ஆசிரியர் சுஷ்மிதா, தீபா ஆகிய 3 பேர் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.  இதற்கிடையில், சிவசங்கர் பாபா தனக்கு ஆண்மை இல்லையென்றும், தான் எப்படி பாலியல் தொந்தரவுகளில் ஈடுபட முடியும் என்றும் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இதே காரணத்தை கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
image
இதனைத்தொடர்ந்து நேற்று, வெளிநாட்டைச் சேர்ந்த மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பெங்களூரு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியின், பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவலும் முடிவடைய உள்ளது.
ஆகவே இன்றைய தினம் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா முன்னிலையில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது இருக்கும் மூன்று போக்சோ வழக்குகளுக்கான நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் மட்டுமே, அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 17-ம்தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
image
இதற்கிடையில் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே, சிவசங்கர் பாபாவை நோக்கி சிலர் ‘அவர் மிகவும் நல்லவர். அவர்மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது. அவரை விடுதலை செய்யுங்கள்’ எனக் கோரிக்கை விடுத்து, முட்டிபோட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே பக்தர்களை போராட்டம் வேண்டாம் என பாபா கேட்டக்கொண்டார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து பாபாவை சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்