பாதுகாப்பான முறையில் இணையத்தை பயன்படுத்த வழிசெய்யும் வி.பி.என் (VPN) சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்திருக்கும் செய்தி, இந்திய இணைய வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சற்றே தெளிவுபட பார்ப்போம்.
பரவலாக எதிர்பார்க்கக்கூடியதுபோல, திருட்டுத்தனமாக திரைப்படங்களைப் பார்க்கவும், தடை செய்யப்பட்ட தளங்கள், கேம்களை அணுக வி.பி.என் சேவையை நாடும் பயனாளிகளைவிட, இந்திய தொழில்துறையினர் மற்றும் ஐடி வல்லுநர்களைதான் இந்த அறிவிப்பு அதிகம் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
சைபர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக என குறிப்பிடப்பட்டிருந்தாலும், இந்தப் பரிந்துரையானது இலக்கு தவறிய அம்பாக மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதை, தொழில்துறை மற்றும் இணைய வல்லுநர்கள் இது தொடர்பாக தெரிவித்துள்ள விமர்சனக் கருத்துகளில் இருந்தே புரிந்துகொள்ளலாம்.
மெய்நிகர் சேவை: இந்தப் பிரச்னையை புரிந்துகொள்ள நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையைப் பார்ப்பதற்கு முன்பு, முதலில் வி.பி.என் சேவை பற்றி தெரிந்துகொள்வது நல்லது. ஆங்கிலத்தில் 'விர்ச்சுவல் பிரைவெட் நெட்வொர்க்' என்பதே சுருக்கமாக வி.பி.என் என குறிப்பிடப்படுகிறது. தமிழில் மெய்நிகர் தனியார் வலைப்பின்னல் எனக் கொள்ளலாம்.
இந்த பதத்தில் இருந்து புரிந்துகொள்ளக்கூடியதுபோல, வி.பி.என். சேவை பொதுவெளியில் உள்ள இணையத்தை அணுக மெய்நிகரான ஒரு வலைப்பின்னலை உருவாக்கித் தருகிறது. பயனாளிகளுக்கும், இணையத்திற்கும் இடையில் அமையும் இந்த வலைப்பின்னல் வாயிலாக, வெளி உலகில் இருப்பவர்கள் அணுக முடியாத வகையில் என்கிரிப்ஷன் முறையில் தகவல்களையும், சேவைகளையும் அணுகலாம்.
தொழில்நுட்ப பதங்களை தவிர்த்து எளிமையாக கூறுவது என்றால், வி.பி.என் சேவை மூலம் இணையத்தை அணுகும்போது பயனாளிகள் தங்கள் அடையாளத்தை மறைந்துக்கொண்டு அனாமதேயமாக இணையத்தில் உலா வரலாம். பொதுவாக இணையத்தை பயன்படுத்தும்போது, இணைய சேவை நிறுவனங்களால் பயனாளிகளை அவர்களின் ஐபி முகவரி மூலம் அடையாளம் காணமுடியும். ஆனால், விபிஎன் சேவை, ஐபி முகவரியை மறைத்து வேறு ஒரு முகவரியை தோன்றச்செய்வதோடு, பயனாளிகள் தொடர்பான தகவல்களை திரட்டுவதையும் முறியடிக்கிறது.
இதன் காரணமாக, ஒரு பகுதியில் தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்வையிடவும், இத்தகைய சேவைகளை அணுகுவதை அரசு அமைப்புகள் அறியாமல் இருப்பதை தடுக்கவும் விபிஎன் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாலும், அடிப்படையில் இந்த சேவை வர்த்தக நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் இணையத்தை அணுகுவதற்காக உருவாக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தொடர்புடைய செய்தி: இணையத்தின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க ஜிம்மி வேல்ஸ் முன்வைக்கும் 3 பாடங்கள்!
தடைக்கு பரிந்துரை: ஐ.பி முகவரியை மறைக்கலாம், தடை செய்யப்பட்ட தளங்களை பார்க்கலாம் போன்ற அம்சங்களை மட்டும் கொண்டு வி.பி.என் சேவையை வில்லங்கமாக கருத முடியாது. இந்த சேவையின் வில்லங்கமான பயன்பாடுகள் இவை என்பதே உண்மை.
விபிஎன் சேவை பொதுவாக வர்த்தக அம்சமாக கருதப்பட்டாலும், நெட்ஃபிளிக்ஸில் படம் பார்க்கவும், பப்ஜி போன்ற தடை செய்யப்பட்ட கேம்ப்களை விளையாடவும் இணையவாசிகள் பலர் இந்த வசதியை நாடத் துவங்கியது, விபிஎன் பற்றி பலரையும் கவனிக்க வைத்தது. அதோடு, விஷயம் அறிந்த இணைய விஷமிகளும் விபிஎன் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, 'டார்க் வெப்' எனப்படும், ஆழ் வலையாக கருதப்படும் மறைக்கப்பட்ட இணையத்தில் உள்ள தளங்களை அணுக விபிஎன் கைகொடுக்கிறது.
இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், வர்த்தக நோக்கில் விபிஎன் சேவையை பல நிறுவனங்கள் வழங்கும் நிலையில், இலவசமாகவும் சில நிறுவனங்கள் விபிஎன் வசதியை அளித்து வருகின்றன. இணையவாசிகள் திருட்டுத்தனமாக படங்களை பார்க்க இந்த சேவைகளை நாடுகின்றனர் என்பது ஒரு பக்கம் எனில், இவை எந்த அளவு பாதுகாப்பானவை எனும் கேள்வி இன்னொரு பக்கம் இருக்கிறது.
இந்த நிலையில்தான் நாடாளுமன்ற நிலைக்குழு, விபிஎன் சேவையை தடை செய்ய வேண்டும் என பரிந்துரைத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மாநிலங்களவையில் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில், உள்துறை அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைக்கசத்துடன் ஒருங்கிணைந்து, இணைய சேவை நிறுவனங்களுடன் இணைந்து விபிஎன் சேவைகளை முடக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிய வேண்டும் என தெரிவித்துள்ளது.
"சைபர் பாதுகாப்புகளை மீறி, சைபர் குற்றாவளிகள் அனாமதேயமாக இருக்க வழி செய்யும் விபிஎன் சேவைகள் மற்றும் இருண்ட வலையினால் உண்டாகும் சவால்களை குழு கவலையோடு குறிப்பிடுகிறது. இப்போதையை நிலையில் விபிஎன் எளிதாக தரவிறக்கம் செய்யப்படலாம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபிஎன் சேவைகளை நிரந்தரமாக முடக்குவதற்கான வழிகளையும் கண்டறிய வேண்டும் என குழு பரிந்துரைத்துள்ளது.
பாதிப்பு என்ன? - சைபர் குற்றவாளிகளை தடுக்கும் வகையில் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளலாம் என்றாலும், நடைமுறையில் இந்தத் தடை பரவலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றே அஞ்சப்படுகிறது.
அதிலும், குறிப்பாக கொரோனா பொதுமுடக்க சூழலில், வீட்டில் இருந்தே அலுவலக பணிகளை மேற்கொள்ள வர்த்தக நிறுவன ஊழியர்கள் பாதுகாப்பிற்காக விபிஎன் சேவையை நாடுவது வழக்கமாக உள்ள நிலையில், இத்தகைய தடை பெரும் பாதிப்பை உண்டாக்கலாம் என கருதப்படுகிறது.
பொதுவெளியிலான இணையத்தில் தகவல்களுக்கும், தரவுகளுக்கும் பாதுகாப்பில்லை என்பதால் வர்த்தக நிறுவனங்கள், விபிஎன் சேவையை பயன்படுத்துகின்றன. வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பாதுகாப்பிற்காக என்கிரிப்ஷன் அம்சத்துடன் பயன்படுத்தும் அவசியம் இருப்பதாலேயே இந்த வசதி நாடப்படுகிறது.
இந்நிலையில், விபிஎன் சேவைக்கு மொத்தமாக தடை விதிக்கப்பட்டால், அது விபரீதமான விளைவையே ஏற்படுத்தும். "இந்த எண்ணமே விநோதமானது, மோசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்கிறார் இணைய வல்லுநரான அமிதாப் சிங்கால்.
"விபிஎன் சேவைகளை முடக்கும் எண்ணம், விநோதமானது மற்றும் அபத்தமானது. கோவிட் சூழலில் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டிய நிலையில் பல நிறுவனங்கள் விபிஎன் சேவையை பயன்படுத்துகின்றன. விபிஎன் சேவைக்கு தடை விதிப்பது தவறான முன்னுதாரணமாகி, பாதுகாப்பான வர்த்தக சேவைக்கான இணைய வழியை பாழாக்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
விபிஎன் சேவைக்கு தடை விதிப்பது இணைய சமநிலை நோக்கத்தையும் பாதிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இது தனியுரிமைக்கும் கேடாக அமையும் என்கின்றனர். விபிஎன் சேவை இணையத்தின் ஓர் அங்கமாக கருதுப்படுகிறது. இதை மொத்தமாக தடை செய்வது, இணைய சமநிலைக்கான அடியாக அமையும் என்று இணைய சுதந்திர அறக்கட்டளையின் ரோகின் கார்க் எச்சரிக்கிறார். இணைய சமநிலை என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான திறந்த இணையத்தை உறுதி செய்வது எனும் நிலையில், மற்ற நாடுகளில் உள்ள நிறுவனங்கள் விபிஎன் வசதியை பயன்படுத்தும் நிலையில், இந்திய நிறுவனங்கள் அந்த வாய்ப்பை இழப்பதன் விபரீதத்தை புரிந்து கொள்ளலாம்.
மாற்று வழி: ஏற்கெனவே சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகளில் விபிஎன் தடை செய்யப்பட்டிருந்தாலும், சீனாவில் இந்தியா இந்த பட்டியலில் சேர்வது விரும்பதக்கதல்ல என்கின்றனர். மேலும், இது இணைய சுதந்திரத்தையும் பாதிக்கும் என்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக விபிஎன் சேவையை தடை விதிப்பது தவறான முடிவாக அமையும் என எச்சரிக்கும் வல்லுநர்கள், வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்படும் விபிஎன் சேவைகள் மீது கை வைக்காமல், லாகின் தேவைப்படாத தன்மை கொண்ட விபிஎன் சேவைகள் மீது கட்டுப்பாடு கொண்டு வரலாம் என்கின்றனர்.
சைபர் பாதுகாப்பு என்பது எப்போதுமே சவாலானதாகவே இருக்கும். அவற்றை எதிர்கொள்ளும் தொழில்நுட்ப வழிகளை கண்டறிவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், விபிஎன் தடை அதில் ஒன்றல்ல என்கின்றனர்.
- சைபர்சிம்மன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்