Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வானதன் மூலம் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.
 
அதிமுக சார்பாக, மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால், தங்களுடைய எம்.பி. பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அவ்விரு இடங்களும் காலியானதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இவ்விரு காலியிடங்களில், வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் 2022, ஜூன் மாதம் மற்றும் கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் 2026, ஏப்ரல் மாதம் முடிவடையும்.
 
இந்நிலையில், அந்த 2 காலி இடங்களுக்கு அக்.4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, இரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலுக்கு திமுக வேட்பாளர்களாக கனிமொழி சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இத்தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செப்.15-ம் தேதி தொடங்கியது. கனிமொழி சோமு, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் இருவரும் கடந்த 21ஆம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான கி.சீனிவாசனிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
 
இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவின் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் தேர்வானதன் மூலம் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. 
 
 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்