Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கிழக்கு திசை டூ மேற்கு திசை... கோவாவில் காலூன்ற முற்படும் மம்தா... ஏன்?!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இப்போது 2022 கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார். மேற்கு வங்க மாநிலத்திற்கு அப்பால் திரிணாமூல் காங்கிரஸ் கோவா மீது கவனம் செலுத்துவதன் பின்புலம் தொடர்பாக விரிவாகப் பார்ப்போம்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக அடைந்திருக்கும் வெற்றியால் தேசிய அளவில் தனது பாய்ச்சலை எடுத்து செல்லவிருக்கிறார் மம்தா. முதலில் அசாம், திரிபுரா என இந்தியாவின் கிழக்கு மாநிலங்களை மட்டும் கவனம் செலுத்தி வந்தவர், இப்போது முதல்முறையாக இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். இந்தியாவின் மிகச் சிறிய மாநிலமான கோவா மீது தனது பார்வையை திருப்பியுள்ளார் மம்தா.

அடுத்த வருடம் பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் கோவா மாநிலத்தை தற்போது திரிணாமூல் தனது இலக்காக கொண்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை கோவாவில் போட்டியிடுவது இது முதல்முறை கிடையாது. கோவாவின் முன்னாள் முதல்வர் வில்ஃப்ரெட் டி சூசா தலைமையில் 2012-ல் 20 இடங்களில் போட்டியிட்டது திரிணாமூல். ஆனால் ஒன்றில்கூட வெற்றிபெற முடியவில்லை. மேலும், அந்த தேர்தலில் திரிணாமூல் வாக்கு வங்கி 2 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருந்தது. 2014 மக்களவைத் தேர்தலில் கோவாவின் மற்றொரு முன்னாள் முதல்வர் சர்ச்சில் அலெமாவோ தெற்கு கோவா தொகுதியில் திரிணாமூல் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதன்பின் சொல்லிக்கொள்ளும்படி கோவாவில் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையில், மீண்டும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார் மம்தா.

கோவா மீது கவனம் ஏன்? - இந்தமுறை கோவா மீது மீண்டும் ஆர்வம் காட்ட மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி முக்கியப் பங்கு வகிக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. சமீபகாலமாக பாஜக அபிஷேக் பானர்ஜியை குறிவைத்தே செயல்படுகிறது. குறிப்பாக மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு பிறகு அவர் மீது இருந்த வழக்கை தூசிதட்டியது அமலாக்கத்துறை. இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக சந்தேகப்படும் அபிஷேக், பாஜகவை பழிவாங்கும் முனைப்பில் அக்கட்சிக்கு குடைச்சல் கொடுக்க தீர்மானித்தே இதுபோன்று செயல்பட தொடங்கியுள்ளார் எனக் கூறும் அரசியல் ஆய்வாளர்கள், `கோவாவில் காங்கிரஸ் வலுவிழந்து வருவதாக திரிணாமூல் கணக்கு போடுகிறது. இதனால் காங்கிரஸுக்கு மாற்றாக தங்களை முன்னிலைப்படுத்த கோவாவில் போட்டி என்ற முடிவை எடுத்துள்ளது திரிணாமூல்" என்றும் கூறியுள்ளனர்.

image

அதற்கேற்ப, சில நாட்கள் முன் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் அபிஷேக் பானர்ஜி பேசுகையில், “பாஜக இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நாங்கள் செல்வோம். அவர்களை எதிர்த்துப் போராடுவோம். மூன்று ஆண்டுகளில் பாரதிய ஜனதாவை இந்தியாவை விட்டு வெளியேற்றுவோம். அதுதான் எங்களது குறிக்கோள்" என்றுள்ளார். அபிஷேக் மட்டுமல்ல, மம்தாவும் சில தினங்கள் முன் கோவாவில் போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தினார்.

திரிணாமூல் மாநிலங்களவை எம்.பி டெரெக் ஓ பிரையன் மற்றும் மக்களவை எம்.பி. பிரசுன் பானர்ஜி உட்பட டிஎம்சியின் மூத்த நிர்வாகிகள் ஏற்கெனவே கோவாவில் அரசியல் நிலைமையை மதிப்பிடுவதற்காக முகாமிட்ட நிலையில் இப்போது மம்தாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக மாறியிருக்கும் ஐபேக் பிரசாந்த் கிஷோர் தனது குழுவை கோவாவுக்கு அனுப்பியிருக்கிறார்.

200 பேர் வரை இருப்பதாக சொல்லப்படும் இந்தக் குழு கோவாவின் அரசியல் சூழ்நிலையைப் பற்றி ஆராய்ந்து வருவதுடன் மாநிலத்தின் முக்கிய எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோருடன் தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. கோவாவைச் சேர்ந்த எழுத்தாளரும், முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான என் ஷிவ்தாஸ், சில எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சிலர் ஐபேக் குழுவுடன் தொடர்பில் இருப்பதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'-வுக்கு தகவல் தெரிவித்துள்ளார். கோவாவின் மூத்த தலைவரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான லூய்சின்ஹோ ஃபெலிரோ உடன் திரிணாமூல் பேசிவருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் மம்தா விசிட்! - தங்கள் கட்சி போட்டியிடப்போவதை உறுதிப்படுத்திய மம்தா, விரைவில் கோவா செல்லவிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. என்றாலும் முதலில் அபிஷேக் பானர்ஜி கோவா செல்லவிருக்கிறார் என்றும், அதன்பின்னே மம்தா செல்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கோவா முதல்வர் முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் பாஜக மாநில தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே இருவரும், திரிணாமூல் கட்சியை வரவேற்று இருப்பதுடன், “ ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் எந்த மாநிலத்திலும் தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு, அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கோவா நன்கு அறியப்பட்ட மாநிலம் என்பதால் அனைவரும் கோவாவுக்கு வருகிறார்கள். மம்தா மட்டுமல்ல, அனைவரும் வரலாம். எவரும் போட்டியிடுவதை எங்களால் தடுக்க முடியாது. திரிணாமூல் கட்சியும் மற்ற கட்சிகளை போன்றே. அவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் எந்த வித்தியாசமும் ஏற்படப்போவதில்லை" என்றுள்ளனர்.

- மலையரசு

தொடர்புடைய செய்திக் கட்டுரை: பாஜக Vs காங்கிரஸ் @ கோவா... - இந்தியாவின் மிகச் சிறிய மாநிலத்தில் கடும் போட்டி ஏன்?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்