Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டி20 உலகக் கோப்பை: சர்வதேச அணிகளின் ரன் குவிப்பு மந்தமாக இருக்க ஆடுகளம் காரணமா?-ஓர் அலசல்

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் ஓமன் மற்றும் அமீரக மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. முதல் சுற்றில் 12 போட்டிகளும், சூப்பர் 12 சுற்றில் 2 போட்டிகளும் முடிந்துள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வரும்  சர்வதேச கிரிக்கெட் அணிகளின் ரன் குவிப்பு மந்தமாக இருக்க ஆடுகளம் காரணமா? என்பதை அலசுவோம். 

image

இதுவரை நடந்துள்ள போட்டிகள்!

இதுவரை நடந்துள்ள 14 போட்டிகளில் 5 போட்டிகள் அபுதாபியிலும், 6 போட்டிகள் ஓமனிலும், 2 போட்டிகள் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்திலும், ஒரு போட்டி துபாயிலும் நடைபெற்றுள்ளது. 

இந்த 14 போட்டிகளில் ஒரு அணி அதிகபட்சமாக எடுத்துள்ள ரன்கள் 181. வங்கதேச அணி, ஓமன் மைதானத்தில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக அதனை எடுத்துள்ளது. குறைந்தபட்ச ஸ்கோர்  44. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக நெதர்லாந்து அணி அந்த குறைந்தபட்ச ரன்களை எடுத்திருந்தது. 

image

அபுதாபி மைதானத்தில் இலங்கை அணி 171 ரன்களை எடுத்தது இப்போதைக்கு இந்த தொடரில் இந்த மைதானத்தில் ஒரு அணி எடுத்துள்ள அதிகபட்ச ரன்களாக உள்ளது. அதை தவிர்த்து ஒப்பீட்டளவில் முதல் சுற்று மற்றும் சூப்பர் 12 (இதுவரை நடந்து முடிந்துள்ள) போட்டிகளை வைத்து பார்த்தால் சராசரியாக 130 ரன்களை தான் அனைத்து அணிகளும் எடுத்து வருகின்றன. சூப்பர் 12 போட்டிகள் அனைத்தும் அபுதாபி, ஷார்ஜா, துபாய் என அமீரகத்தில் உள்ள மூன்று மைதானங்களில் மட்டுமே நடைபெறுகின்றன. 

சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா, அபுதாபி மைதானத்தில் விளையாடின. அதில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 118 ரன்களை எடுத்திருந்தது. அந்த சுலப இலக்கை ஆஸ்திரேலிய அணி விரட்டியது. இருந்தும் 2 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில்தான் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

image

துபாய் மைதானத்தில் இரண்டாவது சூப்பர் 12 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. பவர் ஹிட்டர்கள் அதிகம் நிறைந்த அணி வெஸ்ட் இண்டீஸ். 14.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் 55 ரன்களுக்கு இழந்திருந்தது அந்த அணி. இங்கிலாந்து அணியின் பவுலர் ரஷீத் 4 விக்கெட்டுகளை வீழத்தியிருந்தார். இங்கிலாந்து அணி 8.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 55 ரன்களை எடுத்திருந்தது. 

எப்போதுமே டி20 கிரிக்கெட் போட்டி என்றால் அதில் பேட்ஸ்மேன்களின் கை கொஞ்சம் ஓங்கி இருக்கும். இந்த நிலையில் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அமீரக ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது சவாலாகி உள்ளது. 

அமீரக மைதானங்கள் ஒரு பார்வை!

image

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி கிரிக்கெட் ஸ்டேடியம் என்று அழைக்கப்படும் இந்த மைதானத்தில் மொத்தமாக முப்பதாயிரம் பார்வையாளர்கள் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ளன. பல்நோக்கு மைதானமான இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் அதிகம் நடத்தப்பட்டுள்ளன. 

இதுவரை மொத்தம் 62 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. முதலில் பேட் செய்த அணிகள் 34 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 143 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் 121 ரன்களாகவும் உள்ளது. இந்த மைதானத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிகபட்ச ரன்கள் 211. குறைந்தபட்சம் 55. இதை வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு உலகக் கோப்பையில் பதிவு செய்திருந்தது. வெற்றிகரமாக 183 ரன்கள் சேஸ் செய்யப்பட்டுள்ளது. 

அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி உட்பட பெரும்பாலான போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி 192 ரன்களை குவித்து சாம்பியன் பட்டம் வென்றதும் இந்த மைதானத்தில்தான். 

image

ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்!

உலகின் மிகச் சிறந்த ஸ்டேடியங்களில் ஒன்றாக இந்த மைதானம் திகழ்கிறது. அதிக அளவிலான ஒருநாள் போட்டிகளை இந்த மைதானத்தில் நடத்தியதற்காக கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளது. 

இதுவரை 241 ஒருநாள் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ளது. 1998-இல் ஆஸ்திரேலிய பந்து வீச்சை, சச்சின் டெண்டுல்கர் வெறி கொண்டு வேட்டையாடியதும் இந்த மைதானத்தில் தான்.

மொத்தம் 15 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. முதலில் பேட் செய்த அணிகள் 9 போட்டிகளில் வென்றுள்ளன. சராசரியாக முதலில் பேட் செய்யும் அணி 141 ரன்களும், இரண்டாவதாக பேட் செய்யும் அணி 125 ரன்களும் எடுக்கும். அதிகபட்சமாக ஒரு அணி குவித்துள் ரன்கள் 215. குறைந்தபட்ச ஸ்கோர் 44. வெற்றிகரமாக 140 ரன்கள் மட்டுமே சேஸ் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் முடிந்த ஐபிஎல் போட்டிகளில் முடிவுகளும் லோ-ஸ்கோரிங் மேட்சாக தான் இருந்துள்ளன.  

image

ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானம் - அபுதாபி!

அபுதாபியில் அமைந்துள்ள இந்த மைதானத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் இருபதாயிரம் பேர் ஒரே நேரத்தில் போட்டிகளை இந்த மைதானத்தில் காணலாம். 

இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 2006 இல் விளையாடிய ஒருநாள் போட்டிதான் முதல் போட்டியாகும். 

இதுவரையில் மொத்தம் 52 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 29 போட்டிகளில் இரண்டாவதாக பேட் செய்த அணி வென்றுள்ளது. இந்த மைதானத்தின் குறைந்தபட்ச சராசரி ஸ்கோரை பொறுத்த வரையில் முதல் இன்னிங்ஸ் 139 ரன்கள். இரண்டாவது இன்னிங்ஸில் 128 ரன்கள். அதிகபட்ச ரன்கள் 225. குறைந்தபட்ச ரன்கள் 87. 166 ரன்கள் மட்டுமே சேஸ் செய்யப்பட்ட அதிக ரன்கள். 

இந்தியா சூப்பர் 12 சுற்றில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் அபுதாபியில் விளையாடுகிறது. மற்ற அனைத்து போட்டிகளும் இந்தியாவுக்கு துபாயில் தான் நடைபெறுகிறது.  

2021 ஐபிஎல் சீசனில் இந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 235 ரன்களை குவித்திருந்தது. 

image

“அமீரகத்தில் ஆடுகளங்கள் மிகவும் ஸ்லோவாக உள்ளன. டி20 உலகக் கோப்பை நேரத்தில் இது சங்கடத்தை கொடுக்கலாம்” என ஐபிஎல் தொடரின் போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார். 

2021 சீசனில் அமீரகத்தில் விளையாடப்பட்ட 31 ஐபிஎல் போட்டிகளில் மூன்று மைதானங்களிலும் ரன் குவிக்கப்படும் ரன் ரேட் ஸ்டேட்கள் முற்றிலுமாக மாறி நிற்கின்றன. அமீரகத்தில் நிலவும் தட்பவெட்ப நிலையும் இதில் பெரிய பங்கு வகிக்கிறது.  

இப்படி அனைத்தும் பாதகமாக இருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் DEW ஃபேக்டர் இரண்டாவதாக பேட் செய்யும் அணிக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாலை 7.30 மணி அளவில் தொடங்கும் போட்டிக்கு பெரிய அளவில் கைகொடுக்கலாம். இப்படி சொல்ல பல இருந்தாலும் கிரிக்கெட் விளையாட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் இந்த மந்தமான ரன் குவிப்பு பாணி மாறும் என நம்புவோம். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்