Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'ஆப்' இன்றி அமையா உலகு 4: eSkillIndia - உங்கள் தனித்திறன்களை மேம்படுத்த உதவும் செயலி!

இன்றைய சூழலில் பல்வேறு பணிகளையும் ஒரே நேரத்தில் கையாளும் 'மல்டி டாஸ்கிங்' திறமையாளர்களுக்கே பெரும்பாலும் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஏதேனும் ஒரு பிரிவில் மட்டும் நிபுணத்துவம் மிக்க நபர், கூடுதலாக அவர் பணியாற்றும் துறை சார்ந்தவற்றில் தனது திறமைகளை மேம்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. இதனை 'தக்கன பிழைத்து வாழ்தல்' (Survival of The Fittest) எனவும் சொல்லலாம். இந்த சர்வைவல் உத்திதான் கடும் போட்டி மிகுந்த உலகில் ஒருவரைப் பிழைத்திருக்க உறுதுணைபுரிகிறது.

image

அதுவும் தற்போதைய கொரோனா பேரிடர் சூழல் பலரது வாழ்க்கையையும் மாற்றி அமைத்துள்ளது. வாழ்க்கை முறை தொடங்கி வேலை வரை அதன் தாக்கம் எதிரொலிக்கிறது. இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க தனித்திறன்களை மேம்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதற்கு உறுதுணையாக இருக்கிறது 'இ-ஸ்கில் இந்தியா' (eSkillIndia) செல்போன் செயலி. 

தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) இந்த அப்ளிகேஷனை டெவலப் செய்துள்ளது. திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குவதன் மூலம் இளைஞர்கள் தொடங்கி பல தனி நபர்களும் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொண்டு, அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்வது, இருக்கின்ற வேலையை தக்க வைத்துக் கொள்ளவும் இந்தத் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் உதவுகின்றன. இதில் தேசத்தின் வளர்ச்சியும் அடங்கியுள்ளது. 

image

இந்த செயலியைப் பயன்படுத்துவதன் அவசியம் என்ன?

மத்திய மற்றும் மாநில அரசுகளின் திறன் மேம்பாட்டு கழகத்தின் நேரடி பயிற்சி மையங்கள் இயங்கி வந்தாலும் கொரோனா பேரிடர் சூழல், அதனை அணுகுவதில் நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிக்கல்களை களைய உதவுகிறது 'eSkillIndia' மொபைல் அப்ளிகேஷன். இந்த செயலியின் மூலம் இணைய வழியில் பல்வேறு துறை சார்ந்த தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளலாம். இதற்கு தேவையானது எல்லாம் ஆர்வம் என்ற மூலதனம் மட்டுமே. 

இந்த அப்ளிகேஷன் இலவசமாகவும், சிறிய அளவிலான தொகையினை செலுத்தியும் திறன் வளர்ப்பு பயிற்சிகளில் சேர்ந்து பயன் பெறலாம் என வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி திறன்களை வளர்த்துக் கொள்ளலாம். இது தவிர தமிழ், கன்னடம், தெலுங்கு மாதிரியான மொழிகளிலும் சில திறன் வளர்ப்பு பயிற்சிகளை பெறலாம். 

image

எந்தெந்த துறைகளில் திறன் வளர்ப்பு பயிற்சிகள்?

'இ-ஸ்கில் இந்தியா' அப்ளிகேஷனைப் பயன்படுத்தி விவசாயம், ஆட்டோமோட்டிவ், வங்கி - நிதி சேவை - காப்பீடு, அழகியல், கட்டுமானம், மின்னணுவியல், சுகாதாரம், மேலாண்மை, ஊடகம், பிளம்பிங், சில்லறை வர்த்தகம், டெலிகாம், டெக்ஸ்டைல்ஸ், சுற்றுலா மற்றும் இதர துறைகள் சார்ந்த பயிற்சிகளைப் பெறலாம்.

பல நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சிகளின் (கோர்ஸ்) கீழ் பயிற்சி பெறலாம். வீடியோ டுட்டோரியல் மற்றும் ஸ்லைட் ஷோ பிரசென்டேஷன் மூலமாகவும் பல்வேறு பயிற்சிகளை பெற்று தனித் திறனை வளர்த்துக்கொள்ள முடிகிறது. 

image

இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவது எப்படி?

கூகுள் பிளே ஸ்டோர் மூலமாக இந்த eSkillIndia செயலியை போன்களில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். சிம்பிளான லே-அவுட் டிசைனை கொண்டுள்ளது. இன்டர்நெட் இணைப்புடன் மட்டுமே இந்த அப்ளிகேஷனை இயக்க முடியும். ஃபோனில் இதனை இன்ஸ்டால் செய்ததும் பயனர் விவரங்களை பதிவு செய்ய வேண்டியிருக்கும். மொபைல் எண், மின்னஞ்சல் விவரம் மாதிரியானவை கேட்கப்படுகிறது. அதனைக் கொடுத்து இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த தொடங்கலாம். 

பயனர்கள் அவரவருக்கும் பிடித்த பயிற்சிகளில் தங்களை இணைத்துக் (Enroll) கொள்ளலாம். ஒரே நேரத்தில் பல்வேறு பயிற்சிகளில் பயனர்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம். அதை பயனர் தனக்கு விருப்பமான நேரத்தில் பயன்படுத்தி திறனை வளர்க்கலாம். வெற்றிகரமாக பயிற்சிகளை முடிப்பவர்களுக்கு சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. 

image

எனினும், ஒரு பயிற்சியில் இணையும்போதே அதன் விவரங்களை ஒன்றுக்கு இரண்டு முறை விவரமாக படித்துக்கொள்வது நல்லது. ஏனெனில், சில பயிற்சிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. இவை அனைத்தையும் அப்ளிகேஷனில் உள்ள பயனர் கணக்கு டேக் மூலம் தெரிந்துகொள்ளலாம். எத்தனை பயிற்சிகளில் இணைந்துள்ளோம், எத்தனை பயிற்சிகளை முடித்துள்ளோம், புக்மார்க் செய்யப்பட்ட பயிற்சிகள் குறித்த விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். 

image

இப்போதே இதனை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்து உங்களது தனித் திறன்களை வளர்த்துக் கொள்ள முயலுங்கள்.

இந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்ய இணைப்பு > https://play.google.com/store/apps/details?id=nsdc.eskillindia

வலைதள முகவரி: https://eskillindia.org/

| முந்தைய அத்தியாயம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 3: 'அப்னா' - உழைக்கும் மக்களுக்கு வேலை தேட உதவும் எளிய செயலி!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்