Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐந்து நாள்களில் 7 பேர் சுட்டுக் கொலை... குறிவைக்கப்படுவது யார்? - காஷ்மீர் நிலவரப் பார்வை

கடந்த சில நாள்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவி வரும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. யாரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்பது விவாதப் பொருள் ஆகியுள்ள சூழலில், காஷ்மீரில் என்ன நடந்து வருகிறது என்பதை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

ஜம்மு - காஷ்மீரில் இருந்து வரும் தகவல்கள் மீண்டும் இந்திய மக்கள் மத்தியில் கவலைகளை அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து நாள்களில் மட்டும் பொதுமக்களில் 8 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதுவும் ஒரேநாளில் அடுத்தடுத்து மூன்று கொலைகள் நடந்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாயன்றுதான் இந்த மூன்று கொலைகளும் நடந்துள்ளன. ஸ்ரீநகரில் உள்ள இக்பால் பார்க் என்ற இடத்தில் பல வருடங்களாக மருந்து கடை நடத்தி வருபவர், 70 வயதான மாக்கன் லால் பிந்த்ரூ என்பவர். காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த பிந்த்ரூ திடீரென சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவர் இறந்த அடுத்த ஒரு சில நிமிடங்களில் பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த சாலையோர வியாபாரி பஸ்வான் என்பவர் படுகொலைச் செய்யப்பட்டார். இதே நேரத்தில் பந்திபோரா பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியரான முகமது ஷஃபி லோனே என்பவரும் கொலையுண்டு கிடந்தார். அடுத்தடுத்த மூன்று கொலைகள் காஷ்மீரில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், இந்தக் கொலைகளுக்கு மூன்று நாள்கள் முன்னர்தான் மஜித் அகமது கோஜ்ரி மற்றும் முகமது ஷஃபி தர் என்ற இருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றிருந்தனர்.

இதனிடையே, வியாழக்கிழமை இந்த சம்பவங்களை மிஞ்சும் வகையில் மற்றொரு படுகொலை சம்பவம் நிகழ்ந்தது. ஸ்ரீநகர் அருகே இட்கா சங்கம் என்ற பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று இருக்கிறது. கொரோனா காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டாலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்த நிலையில், வியாழக்கிழமை ஆசிரியர்கள் வந்திருக்க, அங்கு புகுந்த தீவிரவாதிகளால் சுக்விந்தர் கவுர், தீபக் என்ற இரு ஆசிரியர்கள் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியர்கள் இருவரும் மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் இறந்துபோயினர்.

image

இந்துக்களை குறிவைத்து கொலையா?  - இறந்தவர்களில் ஆசிரியர்கள் இருவர் உட்பட பலர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மை மக்களான சீக்கிய மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், இந்துக்களை குறிவைத்து தீவிரவாதிகள் கொலை செய்து வருகிறார்களா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏனென்றால் இந்தக் கொலைக்கு பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து செயல்படும் `எதிர்ப்பு முன்னணி' என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக காஷ்மீர் முதன்மை காவல்துறை அதிகாரி தில்பாக் சிங் தெரிவித்திருந்தார். இது, மதச்சாயம் எழுப்ப காரணமாக அமைந்தது.

ஆனால், மதச்சாயம் எழுப்பப்படுவதை மறுத்துள்ளார் ஜம்மு - காஷ்மீர் காவல்துறை தலைவர் விஜயகுமார். ``2021-ல் மட்டும் 28 பொதுமக்கள் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் ஐந்து பேர் காஷ்மீரைச் சேர்ந்த இந்துக்கள், இருவர் மற்ற மாநிலத்தைச் சேர்ந்த இந்துக்கள். மற்ற அனைவரும் இஸ்லாமியர்கள்தான். இதனால், இதில் மதச்சாயம் பூசப்படுவது தேவையில்லாதது" என்றுள்ளார்.

விஜயகுமார் இப்படி தெரிவித்தாலும், கடந்த ஐந்து நாள்களில் நடந்த கொலைகள் மாநிலத்தில் சிறுபான்மையிராக இருக்கும் இந்துக்களான காஷ்மீர் பண்டிட் மற்றும் சீக்கிய இன மக்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருவதாக அந்த இரு சமூக மக்கள் மத்தியில் புதிய அச்சம் எழுந்துள்ளது. இந்த அச்சம் காரணமாக, இந்த சமூகங்களைச் சேர்ந்த பல குடும்பங்கள் தங்களின் பூர்விக நிலங்களை விட்டுவிட்டு தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

image

திரும்புகிறதா 1990 வரலாறு? - காஷ்மீர் பண்டிட் சங்கர்ஷ் சமிதியின் தலைவர் சஞ்சய் டிக்கூ சமீபத்திய கொலைகள் தொடர்பாக 'தி பிரின்ட்' தளத்திடம் பேசுகையில், ``1990களில் மாநிலத்தின் பண்டிட் மற்றும் சீக்கிய இன மக்களை குறிவைத்து நடந்த தாக்குதலில் குறைந்தது 50 பேர் மடிந்தனர். தொடர்ந்து நடந்த தாக்குதலால், காஷ்மீரி பேசும் இந்துக்களான காஷ்மீரி பண்டிட்கள் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறி பக்கத்து மாநிலங்களில் தஞ்சம் புகுந்தனர். இப்படி சென்ற குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 800 வரை இருக்கும்.

இதன்பின் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் மற்றும் பாஜக இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் தாய் நிலத்துக்கு திரும்ப வைக்கும் முயற்சியை எடுத்தனர். இதற்காக அவர்களுக்கு அரசு வேலை போன்ற சலுகைகள் வழங்கப்பட்டன. இந்த முயற்சிகள் காரணமாக 50,000 பண்டிட்கள் வரை மீண்டும் தங்கள் இடங்களுக்கு திரும்பினர். ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் அவர்களை மீண்டும் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. தற்போதைய பதற்றத்தால் குடியேறியவர்களில் 2000 பேர் வரை மீண்டும் பள்ளத்தாக்கை காலி செய்துள்ளனர் என்பது எனக்கு கிடைத்த தகவல்" என்று கூறியுள்ளார்.

காஷ்மீரில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஜம்மு காஷ்மீர் கவர்னரை சந்தித்து பேச இருக்கிறார். தீவிரவாதிகளை ஒடுக்குவது தொடர்பாக இந்தச் சந்திப்பில் இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொலைகளுக்கு காரணமான தீவிரவாதிகளை பிடிக்க நிபுணர்கள் அடங்கிய அதிரடிப் படையை உள்துறை காஷ்மீருக்கு அனுப்பியிருந்தது. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை பிரிவு தலைவர் தபன் தேகா தலைமையில் இந்த நிபுணர் குழு காஷ்மீர் சென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- மலையரசு

தகவல் உறுதுணை: The Print

| வாசிக்க > லக்கிம்பூர் வன்முறையின் தாக்கம்: உ.பி. தேர்தலில் யோகிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?! |

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்