Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வாரம் முழுவதும் கோயில்களை திறக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களை வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் திறக்க தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இதை எதிர்த்து வாரம் முழுவதும் கோயில்களை திறக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம்.

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்களில் திருக்கோயிலை திறக்க வலியுறுத்தியும் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களை திறக்க வலியுறுத்தியும் ராமநாதபுரம் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் முரளிதரன் தலைமையில் ராமேஸ்வரம் கோயில் அருகாமையில் 500க்கும் மேற்பட்ட பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

image

நாமக்கல்: தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களையும் வாரத்தின் 7 நாட்களும் திறந்து வழிபாட்டுக்கு அனுமதிக்க வலியுறுத்தி நாமக்கல்லில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பூங்கா சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, முன்னாள் எம்.பி. கே.பி.இராமலிங்கம், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அனைத்து இந்து வழிபாட்டு தளங்களிலும் வாரத்தின் 7 நாட்களும் வழிபாடு நடத்திடும் வகையில் கோயில்களை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

image

மதுரை: வாரத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கக் கோரி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன்பாக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு கோபுர வாசலில் நடைபெற்ற இந்த போராட்டம் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மதுரை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பஜாவினர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தஞ்சாவூர்: வாரத்தின் அனைத்து நாட்களிலும் தமிழகத்தில் உள்ள கோயில்களை திறக்க வேண்டும். கோவில் நகைகளை உருக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தஞ்சை பெரிய கோவில் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறையைச் சேர்ந்த பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 400 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

image

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலை வாரத்தின் இறுதி நாட்கள் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்கள் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கக் கோரியும் அத்தினங்களில் கோயிலை திறக்க வலியுறுத்தியும் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தலைமையில் திருச்செந்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். அதேபோல் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா, சூரசம்காரம், ஆகியவை வழக்கம் போல் நடைபெற தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்