Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கால் தடத்தை பின்தொடர்ந்து T23 புலியை தேடும் ’டிராக்கர்ஸ்’ -யார் இவர்கள்? என்ன செய்வார்கள்?

நான்கு பேரைக் கொன்ற புலியை பிடிக்கும் ஆப்ரேஷன் T23-யில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் TRACKERS எனப்படும் விலங்குகளின் கால் தடங்களை பின்தொடர்ந்து கண்டறிவதில் திறமை பெற்றவர்கள். TRACKER-கள் என்பவர்கள் யார் ? அவர்களது பணி என்ன ? விரிவாக பார்க்கலாம்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் 4 பேரைக் கொன்ற T23 புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான பணிகள் 19 வது நாளாக தொடர்கிறது. புலியை தேடத் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை களத்தில் பணியாற்ற கூடியவர்களில் முக்கியமானவர்கள் TRACKER-கள் எனப்படும் வன விலங்குகளின் கால்தடத்தை பின்தொடர்ந்து கண்டறிவதில் வல்லமை பெற்ற குழுவினர். முதுமலை வனப்பகுதியில் வசிக்கக்கூடிய பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் முதுமலை புலிகள் காப்பகத்தில் வேட்டை தடுப்பு காவலர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

image

மனித - விலங்கு மோதல்கள் எங்கு நடந்தாலும் அதனை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு இவர்களுக்கு உள்ளது. யானைகள் அல்லது புலிகளை பிடிக்கும் பணிகளில் இவர்களது பணி முதன்மையானதாக இருக்கும். அந்த வகையில் தற்போது ஆப்ரேஷன் T23 யிலும் இவர்களது பங்கு முக்கியமானதாக உள்ளது. T23 புலியை பிடிக்கும் பணி கடந்த 24ஆம் தேதி துவங்கிய நிலையில், புலி நடமாட்டம் உள்ள வனப்பகுதிக்குள் முதல் நபராக இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களே செல்வார்கள்.

அப்படி வனப்பகுதிக்குள் செல்லும் இவர்கள் அங்கு பதிந்து இருக்கும் புலியின் கால்தடம், மரத்தில் பதிந்துள்ள புலியின் நகக் கீரல்களை கண்டறிந்து, அது அவர்கள் தேடி செல்லும் புலிதானா என்பதை உறுதி செய்வார்கள். T23 புலியின் கால் பாத அளவு 15 X 15 என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்கள் கண்டறிந்த கால்தடத்தை முதலில் அளந்து பார்ப்பார்கள். பின்னர், தாங்கள் தேடும் புலியின் கால்தடம் அது என உறுதி செய்த பிறகு கால்தடத்தை பின்தொடர்ந்து புலி இருக்கும் இடத்தை உறுதி செய்வார்கள்.

image

புலி இருக்கும் இடம் உறுதி செய்யப்பட்ட பின் அந்த தகவல் உயரதிகாரிகளுக்கு அளிக்கப்படும். அதன் பின்னரே வன கால்நடை மருத்துவர்கள் அந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு மயக்க ஊசி செலுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். வனப்பகுதிக்குள் செல்லும் அதிகாரிகளையும் அதேநேரம் மயக்க ஊசி செலுத்தும் குழுவினரையும் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று பார்த்து கொள்வது இவர்களின் பொறுப்பு.

இப்படி புலியை பிடிக்கும் பணியில் ஈடுபடும் இவர்கள் கடுமையான ஆபத்துகளுக்கு மத்தியில் தினமும் பணியாற்றி வருகிறார்கள். வனப்பகுதிக்குள் முதல் நபர்களாக செல்லும் இவர்கள் வனவிலங்கு தாக்குதலுக்கு ஆளாக அதிக வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் தங்களின் அனுபவங்களை கொண்டு வன விலங்குகள் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.

image

புலியை பிடிக்கும் பணிக்காக அதிநவீன தொழில்நுட்பங்களை வனத்துறை பயன்படுத்தியது. 3 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. 65 தானியங்கி கேமராக்கள், 6 டிரோன் கேமராக்களும் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் இவை அனைத்துமே புலியை கண்டறிவதில் வனத்துறையினருக்கு பெரிய அளவில் உதவிட வில்லை. இறுதியாக வனத்துறை TRACKER-களின் திறமையை முழுவதுமாக நம்பியிருக்கிறது. நேற்று கூட புலி பதுங்கியிருந்த புதர் பகுதிக்குள் சென்று உறுதி செய்தவர்கள் இவர்கள் தான்.

மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வனவிலங்குகளை பிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இவர்களுக்கு எதிர்காலத்தில் துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வன ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர். குறிப்பாக வனவிலங்குகளுக்கு மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கிகளை எவ்வாறு கையாள்வது என பயிற்சி அளித்தால், எதிர்காலத்தில் இவர்கள் மூலம் எளிதாக பிரச்னைகுரிய வனவிலங்குகளை பிடித்துவிட முடியும் எனவும் கூறுகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்