Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஸ்டார்ட் அப் இளவரசிகள்- 15 நுழைவுச் சீட்டு சேவையை ஜனநாயகமாக்கிய ஜூலியா

எந்த நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்து நடத்துவது எளிது என்பதை உறுதியாக நம்புபவர் ஜூலியா ஹார்ட்ஸ். இப்படி சொல்வது எளிது, ஆனால் சிறிய நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை ஏற்பாடு செய்து, நடத்தினால் தான் அதில் உள்ள கஷ்டங்கள் தெரியும் என்று நினைப்பவர்களுக்கு ஜூலியா நடத்தி வரும் இணைய சேவையை தெரிந்து கொண்டால், அவரை கொண்டாடி மகிழ்வார்கள். ஏனெனில் ஜூலியா சிறிய அமைப்புகளும், தனிநபர்களும் நிகழ்ச்சிகளை நடத்துவதை எளிதாக்கும் சேவையை ஈவண்ட்பிரைட் (Eventbrite ) இணையதளம் மூலம் வழங்கி வருபவர்.

பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்துபவர்களுக்கு சாத்தியமாகும் வசதிகளையும், அம்சங்களையும் ஈவண்ட்பிரைட் தளம் சிறிய நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கும் கிடைக்கச்செய்கிறது என்பது தான் இந்த தளத்தின் சிறப்பு. அதாவது நிகழ்ச்சி தொடர்பான தகவலை மற்றவர்களுக்கு தெரிவிப்பது முதல், நிகழ்ச்சிக்கான நுழைவு சீட்டுகளை (டிக்கெட்) இணையம் மூலம் விற்பது வரை அனைத்து வகையான வசதிகளையும் இந்த தளம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு சாத்தியமாக்குகிறது.

Q&A with Julia Hartz, CEO and Co-Founder, Eventbrite - nepal

டிஜிட்டல் யுகத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டை இணையம் மூலம் மேற்கொள்வது எளிதானது தான். இதற்கென பிரத்யேக மென்பொருள்களும், இணையதளங்களும் இருக்கின்றன என்றாலும், இவை பெரும்பாலும் பெரிய நிறுவனங்களுக்கானவை. சிறிய அமைப்புகளும், சிறிய நிறுவனங்களும் இத்தகைய மென்பொருள்களை பயன்படுத்துவது செலவுமிக்கது எனும்போது, தனிநபர்கள் பற்றி கேட்கவே வேண்டாம்.

ஆனால் இந்த நிலையை மாற்றி சாமானியர்களும் இணையம் மூலம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்திக் கொள்ளும் வகையில் ஈவண்ட்பிரைட் சேவை அமைந்துள்ளது. சொல்லப்போனால், இப்படி நிகழ்ச்சி ஏற்பாடு சேவையை ஜனநாயகமயமாக்க வேண்டும் என்பதே இந்த சேவையை துவக்கியதற்கான நோக்கம் என்று கூறியிருக்கிறார் ஜூலியா ஹார்ட்ஸ் (Julia Hartz). ஜூலியாவின் பயணம் பற்றியும், அவரது புதுமையான டிக்கெட் சேவை பற்றியும் விரிவாக தெரிந்து கொள்வோம்.

ஜூலியா தொழில்முனைவோராக வேண்டும் என்றோ, வர்த்தகத்தில் சாதிக்க வேண்டும் என்றோ எண்ணம் கொண்டிருக்கவில்லை. அவர் ஊடகத்துறையில் தான் ஆர்வம் கொண்டிருந்தார். ஊடகத்துறையில் இருந்து அவர் தொழில்முனைவு உலகிற்கு வந்தது தற்செயலானது என்றாலும், முன்னோடி ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை அவர் துவக்கி நடத்தி தனக்கான இடத்தை தேடிக்கொண்டிருக்கிறார். ஜூலியா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்து வளர்ந்தவர். பள்ளி படிப்பை முடித்ததும் அவர் பெப்பர்டைன் பல்கலைக்கழகத்தில் தொலைத்தொடர்பு துறையில் இளங்கலை பட்டம் பெற்ற பின், ஊடகத்துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.

Kevin & Julia Hartz to speak at Splash London, June 19

கல்லூரியில் படிக்கும் போதே, தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நிறுவனங்களில் பயிற்சி ஊழியர்களாக பணியாற்றி இருக்கிறார். கல்லூரி முடித்தவுடன் எம்டிவியில் அவருக்கு வேலை கிடைத்தது. எம்டிவியின் ஜூனியர் அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். அதன் பிறகு எப்.எக்ஸ் நெட்வொர்க்ஸ் எனும் நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. இதனிடையே கெவின் ஹார்ட்ஸ் என்பவர் ஜூலியாவுக்கு அறிமுகமானார்.

அமெரிக்க கலாச்சாரப்படி இருவரும் டேட்டிங் செய்து உறவை வளர்த்துக்கொண்டனர். ஆனால் இருவரும் வேறு வேறு நகரங்களில் வசித்தனர். தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டிருந்த கெவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் வசித்தார். ஜூலியா, பணி நிமித்தமாக லாஸ் எஞ்சல்ஸ் நகரில் வசித்தார். அங்கும் இங்கும் பறந்தபடி இருந்தவரும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கெவினோடு சேர்ந்து இருப்பதற்காக பிரான்சிஸ்கோ நகருக்கு குடிபெயர தீர்மானித்தார்.

புதிய யோசனை

சான்பிரான்சிஸ்கோவில் அவருக்கு கரெண்ட்டிவி இணைய நிறுவனத்தில் உடனே வேலை கிடைத்தது. ஆனால், சம்பளம் தான் இதற்கு முன் வாங்கியதை விட குறைவாக இருந்தது. அதை ஏற்றுக்கொள்வதா அல்லது வேறு வேலை தேடுவதா எனும் குழப்பத்தில் இருந்த ஜூலியாவிடம், கெவின் வேறு ஒரு யோசனையை முன் வைத்தார். ''வேறு ஒருவர் ஸ்டார்ட் அப்பிற்கு வேலை சென்று, உன் தகுதிக்கு குறைவான ஊதியத்தில் நீ வேலை செய்யக்கூடாது. என்னோடு சேர்ந்து நீ ஏதாவது செய்து, எந்த பணமும் சம்பாதிக்காமல் இருக்கலாம். நம்மிடம் உள்ள சேமிப்பை எல்லாம் போட்டு நிறுவனத்தை துவக்கலாம்” என்று கெவின் ஜூலியாவிடம் கூறினார்.

கெவின் இந்த யோசனை ஜூலியாவுக்கு புதிய குழப்பத்தையோ, தடுமாற்றத்தையோ ஏற்படுத்தவில்லை. மாறாக அவர் கெவின் கூறியதை கேட்டதும் சம்மதம் என்றார். அடுத்த நாளே தங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கான பணியை துவக்கிவிட்டனர். கெவின் ஹார்ட்ஸ், நாம் இருவரும் சேர்ந்து ஸ்டார்ட் அப் நிறுவனம் துவக்கலாம் என ஜூலியாவிடம் கேட்டத்தில் எந்த வியப்பும் இல்லை.

ஏனெனில், தொழில்நுட்ப ஆர்வம் கொண்டிருந்த கெவின் தொழில்முனைவை தான் லட்சியமாக கொண்டிருந்தார். சொந்தமாக ஸ்டார்ட் அப் துவங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இணையம் மூலம் பண பரிவர்த்தனை சேவை வழங்கிய பேபால் நிறுவனத்தின் ஆரம்ப முதலீட்டாளர்களில் ஒருவரான கெவினுக்கு இணைய பண பரிவர்த்தனையில் நல்ல அனுபவம் இருந்தது.

Banking for Innovators | Julia and Kevin Hartz, Founders of Eventbrite

ஸ்டார்ட் அப் ஆர்வம் , ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக முதலீட்டாளர்களை சந்தித்து பேசுவதற்கு முன்னோட்டமாக ஜூலியாவிடம் தனது ஐடியாவை எடுத்துக்கூறி, முதலீட்டாளர்களிடம் பேசுவது போல பேசிப்பார்ப்பது கெவினின் வழக்கம் என்று ஜூலியா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.  கெவின் இப்படி பேசும் போதெல்லாம் அவர் மீது காதல் மயக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

இன்னமும் திருமண பந்தத்தில் இணையாதவர்கள் தொழில்முனைவில் இணைய தீர்மானித்தனர். கெவின் அப்போது ஜூம் (Xoom) எனும் பெயரில் இணைய பண பரிவர்த்தனை சேவைக்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். புதிய நிறுவனத்தை துவக்குவது என தீர்மானித்ததும், இந்த பண பரிவர்த்தனை வசதியை அடிப்படையாக கொண்ட சேவையை துவக்கலாம்
என யோசித்தனர். இணைய பண பரிவர்த்தனை வசதியை மையமாக கொண்டு, நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனை இணையதளத்தை துவக்கலாம் எனும் யோசனையை ஜூலியா முன்வைத்தார்.

டிக்கெட்மாஸ்டர் போன்ற இணையதளங்கள், பெரிய நிறுவனங்கள் நிகழ்ச்சிகள் நடத்த தேவையான அனைத்து வசதிகளையும் இணையம் வாயிலாக அளித்து வந்ததை கவனித்தவர், இதே போன்ற சேவை சாமானியர்களுக்கு இல்லாததை உணர்ந்திருந்தார். எனவே, எல்லோரும் எளிதாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அவற்றுக்கான டிக்கெட் விற்பனை சேவையையும் வழங்க தீர்மானித்தனர். இப்படி தான் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய உதவும் இணையதளமாக 2006-ம் ஆண்டில், ஈவண்ட்பிரைட் துவங்கியது. ஏற்கனவே இணையவழி பண பர்வர்த்தனைக்கான மேடை அவர்களிடம் இருந்ததால் இந்த தளத்தை அமைப்பது எளிதாக இருந்தது. ( ஆரம்பத்தில் மோலிகிராட் எனும் பெயரில் தான் இந்த தளத்தின் பெயர் அமைந்திருந்தது. பின்னர் தான்
ஈவண்ட்பிரைட் என பெயர் மாற்றப்பட்டது).

ஈவன்பிரைட் தளம் துவங்கப்பட்ட காலத்தையும் இங்கே மனதில் கொள்ள வேண்டும். புத்தாயிரமாண்டிற்கு பிறகு இணையத்தில், பயனாளிகள் பங்கேற்க வழி செய்த இரண்டாம் வலை தளங்களின் அலை பெரிதாக வீசிக்கொண்டிருந்தது. வலை 2.0 என குறிப்பிடப்படும் இந்த இணைய நிகழ்வின் ஒரு அங்கமாக சமூக வலைப்பின்னல் தளங்களும் அமைந்திருந்தன. இந்த தளங்களின் தொடர்ச்சியாக இவற்றின் தாக்கத்தோடு உருவான ஈவண்ட்பிரைட் தளம், இணையம் மூலம் எவர் வேண்டுமானாலும் நிகழ்ச்சிகளை திட்டமிட்டு நடத்துவதை எளிதாக்கியது.

இதை தான், டிக்கெட் சேவையை ஜனநாயகமயமாக்குவது என ஜூலியா குறிப்பிடுகிறார். எல்லாம் எளிமை சிறிய அளவில் என்றாலும் ஒரு நிகழ்ச்சியை நடத்த மிகுந்த திட்டமிடல்தேவை. நிகழ்ச்சியை திட்டமிடுவது தவிர, அதை விளம்பரம் செய்வதற்கும் மெனக்கெட வேண்டும். டிக்கெட் விற்பனை செய்யும் விருப்பம் இருந்தால் இன்னும் கஷ்டம். இந்த நிலையை மாற்றி, நிகழ்ச்சி நடத்த விரும்பும் எவரும், அதற்கான திட்டமிடலை எளிமையாக மேற்கொள்ள ஈவன்ட்பிரைட் வழி செய்தது. ஒரு இமெயில் கணக்கு துவக்குவதற்கு தேவைப்படுவதை விட சில கூடுதலான செயல்கள் மூலம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய முடிந்தது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இந்த தளத்தில் நுழைந்து தங்கள் பெயரையும், நிகழ்ச்சிகான விவரத்தையும் சமர்பித்தால் போதும், அந்நிகழ்ச்சிக்கான இணைய வடிவத்தை உருவாக்கி கொண்டு விடலாம். அதன் பிறகு, நிகழ்ச்சிக்கான தகவல்களை இமெயில் அனுப்பி வைப்பது போன்றவற்றை இந்த தளமே பார்த்துக்கொள்ளும் என்பதோடு, டிக்கெட் விற்பனையையும் இந்த தளமே கவனித்துக்கொள்ளும் வசதி அளிக்கப்பட்டது.

சிறிய அமைப்புகளுக்கும், சாமானியர்களுக்கும் இந்த தளம் வரப்பிரசாதமாக அமைந்தது. அவர்கள் அதிக சிக்கல்கள் இல்லாமல், இந்த தளம் வாயிலாக நிகழ்ச்சிகளை திட்டமிட்டு அவற்றுக்கான டிக்கெட்களையும் விற்க முடிந்தது. இதற்காக அவர்கள் தனியே கட்டணம் செலுத்த வேண்டியிருக்கவில்லை. தனியே எந்த மென்பொருளையும் நிறுவ வேண்டியதில்லை. எளிதான நிகழ்ச்சியை நடத்திவிட்டு, டிக்கெட் விற்பனை செய்திருந்தால் அதன் கட்டணத்தில் ஒரு சிறிய தொகையை மட்டும் இணையதளத்திற்கு அளிக்க வேண்டியிருந்தது. சுருக்கமாக சொல்வதாக இருந்தால், நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கான சுயசேவை தளமாக அது அமைந்திருந்தது.

இந்த எளிமையை பலரும் விரும்பி ஈவண்ட்பிரைட் தளத்தை பயன்படுத்த துவங்கினர். எந்த நிகழ்ச்சியையும் நடத்தலாம் எனும் வசதியை பயன்படுத்தி பலரும் பலவிதமான நிகழ்ச்சிகளை நடத்த துவங்கினார். சேவை அமைப்புகளும், தன்னார்வ நிறுவனங்களும் இந்த தளத்தை தங்களுக்கு ஏற்ற சேவையாக கருதினர். இதன் காரணமாக, புதிய நிகழ்ச்சிகளை கண்டறிய விரும்புகிறவர்களும் இந்த தளத்திற்கு படையெடுத்தனர்.

பெண்கள் முன்னோடி ஈவண்ட்பிரைட் தளத்தில், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற நிகழ்ச்சிகளை கண்டறியலாம் எனும் எண்ணம், இந்த தளத்தின் ஆதரவை அதிகரிக்கச்செய்தது. மேலும் பார்வையாளர் பரப்பு அதிகரித்தது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் உதவியது. இப்படி தான் ஈவண்ட்பிரைட் தளம் வேகமாக வளர்ந்தது. சமூக வலைப்பின்னல் தளமான ஃபேஸ்புக் பிரபலமான போது அதனுடன் இணைந்து செயல்பட்டு ஈவண்ட்பிரைட் தளம் தனது வீச்சை மேலும் அதிகமாக்கி கொண்டது.

இந்த தளம் துவங்கப்பட்ட பிறகு ஜூலியாவும், கெவினும் கணவன், மனைவியாயினர். தொழில்நுட்ப உலகின் வெற்றிகரமான தம்பதியாக விளங்குகின்றனர். சமூக தன்மை கொண்ட நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வரும் இந்த தம்பதி, மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றனர். பணிகளையும், பொறுப்புகளையும் பகிர்ந்து கொண்டு நிறுவனத்தை இவர்கள் திறம்பட நிர்வகிப்பது பரவலாக பாராட்டப்படுகிறது. இருவர் இடையிலான புரிதலே இதற்கு அடிப்படை எனலாம். நிறுவனத்தை துவக்கிய பிறகு, தான் பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருந்தபோது, முதல் ஊழியராக நியமித்த பொறியாளரை வரவேற்க நிறுவனத்தை திறப்பதற்காக கெவின் ஓடிச்சென்றதை அவர் நெகிழ்ச்சியுடன் பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்துள்ளார். தங்கள் நிறுவனம் இருந்த நிலையை பார்த்து அந்த முதல் ஊழியர் தான் தவறு செய்துவிட்டோமே என நினைத்திருக்கலாம் என்றும் அவர் நகைச்சுவையுடன் கூறியிருக்கிறார்.

ஆனால் ஆரம்ப சோதனைகளை எல்லாம் சமாளித்து நிறுவனம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. கெவினை சந்திக்கும் வரை தன்னை தொழில்முனைவோராக கருதியதில்லை என்று கூறும் ஜூலியா, இந்த பயணத்தை அவர் எளிதாக்கினார் என்றும் நெகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார். மேலும் நிறுவனத்தில் இருவர் பங்கையும் தெளிவாக உணர்ந்திருக்கின்றனர். கெவின் தொழில்நுட்ப மனிதர் என்றால் செயல்பாடு தனது பலம் என்கிறார் ஜூலியா. துவக்கத்தில் நிறுவன தலைவராக கெவின் செயல்பட்ட நிலையில் நிறுவன வளர்ச்சிக்கு ஏற்ப ஜூலியா அதன் சி.இ.ஓ பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இருவரும் ஒரே வேலையை செய்யாமல் இருப்பதே தங்கள் நிர்வாகத்தின் வெற்றி ரகசியம் என்கிறார் ஜூலியா.

இருவரும் ஒரே ஸ்பிரெட் ஷீட்டில் வேலை செய்வதாக இருந்தால் மவுசுக்காக சண்டையிட வேண்டியிருக்கும் என இந்த கருத்தி மென்பொருள் உதாரணத்துடன் அவர் சுவார்ஸ்யமாக கூறுகிறார். ஈவண்ட்பிரைட் நிறுவனத்தை சிறப்பாக வழிநடத்துவதற்காக தொழில்நுட்ப உலகின் செல்வாக்கு மிக்க பெண்மணிகளில் ஒருவராக கருதப்படும் ஜூலியா தனது நிறுவனம் பாலின சமத்துவம் மிக்க முன்னோடி நிறுவனமாகவும் இருப்பதை உறுதி செய்திருக்கிறார். நிறுவனத்தில் ஆண்களுக்கு, நிகரான அளவில் பெண்களும் பணியாற்றுகின்றனர். மேலும் இளம் தலைமுறையினர் பணியாற்ற விரும்பும் நிறுவனங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

-சைபர்சிம்மன்

முந்தைய அத்தியாயம் : ஸ்டார்ட் அப் இளவரசிகள் 14: காட்சி விளக்கங்களை சமூகமயமாக்கிய ராஷ்மி சின்ஹா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்