Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

செங்கல்பட்டு: மழையால் இடிந்த வீடு... பெற்றோரை இழந்து வாடிய குழந்தைகளுக்கு தொடரும் சோகம்

புற்றுநோயால் தாய் தந்தையை கடந்த வருடம் இழந்திருந்த பள்ளிக்குழந்தைகள் இருவர், வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் தங்கியிருந்த வீட்டையும் இழந்துள்ளனர். செய்வதறியாமல் தவிக்கும் இந்த பள்ளி சிறுவர்கள், அரசிடம் உதவிகோரி நிற்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியையடுத்த மேலக்கண்டை கிராமத்தில் பட்டாபிராமன் - பாஞ்சாலி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு வர்ஷா மற்றும் ஜீவானந்தம் ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு பாஞ்சாலி புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து அவரது கணவர் பட்டாபிராமும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்து உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் குழந்தைகள் இருவரும், தங்களின் பெற்றோரை அடுத்தடுத்து இழந்து தவிப்புக்கு உள்ளாகினர்.

image

இரு குழந்தைகளில், வர்ஷா மதுராந்தகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார், ஜீவானந்தம் அங்குள்ள ஆரம்பப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகின்றார். தற்போது குழந்தைகள் இருவரும் பட்டாபிராமனின் சித்தி (பாட்டி) பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார்கள். குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பாட்டியும், வயது மூப்பின் காரணமாக எந்த வேலையும் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். வருமானம் ஏதும் இல்லாததால் அருகில் இருக்கும் நபர்கள் மூலம் கிடைக்கும் சிறு சிறு உதவிகள் மற்றும் ரேஷன் கடையில் கிடைக்கும் அரிசி ஆகியவற்றை வைத்தே இவர்கள் மூவரும் வாழ்க்கையை ஓட்டிவருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வந்த வடகிழக்கு பருவமழை எதிரொலியாக அவர்கள் தங்கிக் கொண்டிருந்த வீட்டில் பல பகுதிகள் இடிந்து சேதம் அடைந்தன. சின்ன குடிசையில் வாழ்ந்து வந்தவர்கள் தற்போது செல்வதற்கும் இடமின்றி தவித்து வருகின்றனர். முதலில் தாய் தந்தையை இழந்த குழந்தைகள், பின் மூன்று வேளை உணவையும், தற்பொழுது தங்கும் வீட்டையும் இழந்து செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். குடும்ப சூழ்நிலையை கருத்தில்கொண்டு, தற்பொழுது 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி வர்ஷா, பள்ளி முடிந்த பின் வேலைக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் வேலைக்கு செல்லாவிட்டால், குடும்பத்திற்கு எந்தவித வருமானமும் கிடைப்பதற்கு வழி இல்லை என்பதால், மாணவியும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிவருகிறார்.

தொடர்புடைய செய்தி: புதிய தலைமுறை செய்தி எதிரொலி: தருமபுரியில் வீட்டை இழந்தவருக்கு வீடு வழங்க உத்தரவு

தற்பொழுது வறுமையின் பிடியில் வாழும் இவர்களின் வறுமையைப் போக்க, அரசு தரப்பிலிருந்து தங்களுக்கு தங்குவதற்கு வீடும், உணவுக்கு உதவியும் கேட்கிறார்கள். அரசு தங்களுக்கு உதவுவதன் மூலம், தங்களால் படிப்பில் கொஞ்சமேனும் கவனம் செலுத்த முயலும் என சொல்கின்றனர் குழந்தைகள் இருவரும். கைகொடுக்குமா அரசு?

- உதயகுமார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்