Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்திய கிரிக்கெட் அணியின் ‌தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணமும் சில கேள்விகளும்?

இந்திய கிரிக்கெட் அணி ஒமைக்ரான் திரிபு கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. செஞ்சூரியன், ஜோகானஸ்பேர்க், கேப்டவுன், Paarl என நான்கு மைதானங்களில் இந்த தொடர் நடக்கிறது. இதனை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாம்பியனான நியூசிலாந்து அணியை இந்தியா அண்மையில் டெஸ்ட் தொடரில் வீழ்த்தி உள்ளது. இருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணியின் இந்த ‌தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் சில கேள்விகளை எழுப்பி உள்ளது. 

image

அது, ‘நம்ம இந்திய கிரிக்கெட் அணிக்கு என்னதான் ஆச்சு?’ என சோக கீதம் (Pathos) பாடும் அளவிற்கு அணிக்குள் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக சொல்லப்படுகிறது. கோலியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன்சி பதவி? ரஹானே - புஜாராவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா? மயங்க் அகர்வால் - கில் - ஷ்ரேயஸ் ரோல் என்ன? என ஒரு நீண்ட பட்டியலே உள்ளது. அது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக அலசுவோம். 

கோலியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன்சி பதவி?

அண்மையில் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார் விராட் கோலி. இந்த நிலையில் அவரது ஒருநாள் கிரிக்கெட் கேப்டன்சி பதவி என்னவாகும் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இதுவரை இந்திய அணியை 95 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வழிநடத்தி உள்ளார் கோலி. அதில் 65 போட்டிகளில் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. அவரது சக்சஸ் ரேட் 70.43 சதவிகிதம். இந்த நிலையில்தான் அவரது கேப்டன்சி பதவி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

image

2023-இல் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியை வழிநடத்த புதிய கேப்டனை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமிப்பதாக இருந்தால் அதனை உடனடியாக செய்தாக வேண்டும் என்ற குரல் ஒருபக்கம் எழுந்துள்ளது. அப்போதுதான் உலகக் கோப்பைக்கு சரியான அணியை அந்த கேப்டனால் தேர்வு செய்ய முடியும். டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை வழி நடத்தி வரும் ரோகித் ஷர்மாவிடம் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பும் ஒப்படைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. 

image

ரஹானே - புஜாராவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா? 

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா, பும்ரா, ஷமி, ரிஷப் பண்ட் மாதிரியான வீரர்கள் தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம் பிடிப்பார்கள். அதனால் பிசிசிஐ-க்கு இந்த சுற்றுப்பயணத்திற்கான அணியை தேர்வு செய்வதில் பெரிய தலைவலி இருக்கும் என சொல்லப்படுகிறது. 

image

அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சீனியர் வீரர்களாக உள்ள புஜாரா மற்றும் ரஹானேவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஹானேவின் சமீபத்திய ஃபார்ம் அதற்கு காரணமாக அமையலாம். மறுபக்கம் புஜாராவின் உடற்தகுதி இந்த கேள்வியை எழுப்புகிறது. 

மயங்க் அகர்வால் - கில் - ஷ்ரேயஸ் ரோல் என்ன? 

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வால், ஷூப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். விக்கெட் கீப்பர் சாஹாவும் சிறப்பாக விளையாடி இருந்தார். ரோகித், ராகுல் மாதிரியான வீரர்களின் வருகை மயங்க் அகர்வால் மற்றும் கில் தொடக்க வீரர்களாக விளையாடுவதை தடுக்கக்கூடும். இதில் ஷ்ரேயஸ், மிடில் ஆர்டரில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. புஜாராவுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் கில், புஜாராவின் பேட்டிங் ஆர்டரில் களமிறங்க வாய்ப்புகள் உள்ளது. மயங்க் அகர்வாலுக்கு முழங்கை பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் லேசான காயமாக இருந்தால் அவரும் ஆடும் லெவனில் இடம் பிடிக்க போட்டி போடுவார். 

image

அதே போல இஷாந்த் ஷர்மா இந்த தொடருக்கான டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவரது இடத்தில் இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

இவர்களை தவிர சூர்யகுமார் யாதவ், ஹனுமா விஹாரி மாதிரியான வீரர்களும் டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பதற்கான ரேஸில் உள்ளனர். கொரோனா பரவல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு பிரதான அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களுடன் ரிசர்வ் செய்யப்பட்ட வீரர்களும் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், அபிமன்யு ஈஸ்வரன் மாதிரியான வீரர்கள் ரிசர்வ் வீரர்களாக அணியில் இடம் பிடிக்கலாம். 

வரும் 26-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 23 வரை இந்திய அணி தென்னாப்பிரிக்க நாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்