Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இஃப்தார் - மாணவர்கள் போராட்டத்தால் பதற்றம்

வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி நகரில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழங்களில் ஒன்றாக இது விளங்கி வருகிறது. இதனிடையே, இந்த பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

image

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு (விரதம்) இருக்கும் முஸ்லிம் மாணவர்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதிர் கே. ஜெயின் கலந்து கொண்டார்.

மாணவர்கள் போராட்டம்

இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த மற்றொரு தரப்பு மாணவர்கள், பல்கலைக்கழக வளாகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இஃப்தார் நிகழ்ச்சியை நடத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னிப்பு கேட்கக் கோரி அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். போராட்டத்தின் ஒருபகுதியாக, துணைவேந்தரின் கொடும்பாவியையும் மாணவர்கள் எரித்தனர். இந்தப் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றமான சூழல் எழுந்துள்ளது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக நூற்றுக்கணக்கான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

image

இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பனாரஸ் இந்து பல்கலைக்கழகமானது அனைத்து தரப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய கல்வி நிறுவனம். அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் எங்கள் நோக்கம். இங்கு பாரபட்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதன் அடிப்படையில் தான், முஸ்லிம் மாணவர்களின் ரம்ஜான் கால சடங்கான இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியை துணைவேந்தர் ஒருங்கிணைக்கவில்லை. மாணவர்கள் தான் ஏற்பாடு செய்தனர். இஃப்தாருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவது என்பது பல்கலைக்கழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் ஆகும். எனவே, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புறைகளுக்கு செல்ல வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறுகையில், "இதுவரை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது கிடையாது. தற்போது இந்நிகழ்ச்சி நடைபெற்றதுடன், அதற்கான செலவையும் பல்கலைக்கழகமே ஏற்றிருக்கிறது. இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. குறிப்பிட்ட தரப்பினரை திருப்திப்படுத்துவதற்காக துணைவேந்தர் இந்த செயலில் ஈடுபட்டிருக்கிறார். தனது செயலுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லையென்றால், போராட்டத்தை நாங்கள் நிறுத்த மாட்டோம்" என்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்