ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக தனது முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ள ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்றைய ஆட்டத்தில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் சென்னை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் பணிந்தது. அதைத் தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 210 ரன்கள் குவித்தும் வெற்றி பெற முடியவில்லை. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி தனது முதல் இரு ஆட்டங்களில் தோற்றிருப்பது இதுவே முதல்முறை. இன்று மீண்டும் ஏமாற்றினால் 'ஹாட்ரிக்' தோல்வியை சந்திக்க நேரிடும். எனவே சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.
முந்தைய சீசனில் ரன் வேட்டை நடத்திய தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் முதல் 2 ஆட்டங்களில் 0 மற்றும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் ஃபார்முக்கு திரும்பி, இந்த போட்டியிலாவது சிறப்பாக செயல்பட வேண்டும் என ரசிகர்கள் காத்துள்ளனர். முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயத்தால் அவதிப்படுவதால், சரியான வேகப்பந்துவீச்சு கூட்டணி இல்லாமல் சென்னை அணி தவிக்கிறது. இதனால் தான் லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்க நேர்ந்தது. எனவே பந்துவீச்சை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளதால், இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியின் ஆடும் லெவனில் நிச்சயம் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 206 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து மிரட்டிய பஞ்சாப் அணி, அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 137 ரன்னில் சுருண்டு தோற்றது. பஞ்சாப் அணியில் கேப்டன் மயங்க் அகர்வால், ஷிகர் தவான், ஷாருக்கான், ஒடியன் சுமித், பானுகா ராஜபக்சே என்று அதிரடி சூரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ சில தினங்களுக்கு முன்பு பஞ்சாப் முகாமில் இணைந்தார். ஆனாலும் அவர் இன்றைய ஆட்டத்தில் இறக்கப்படுவாரா? என்பது கேள்விக்குறி தான். பந்து வீச்சை பொறுத்தவரை காஜிசோ ரபடா, ராகுல் சாஹர் கட்டுக்கோப்புடன் வீசுவதில் கில்லாடிகள். அதனால் சென்னை அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
பனிப்பொழிவின் தாக்கம் அதிகம் இருப்பதால் 2-வது பேட்டிங்குக்கே ஆடுகளம் சாதகமாக இருக்கிறது. அதனால் வெற்றியை தீர்மானிப்பதில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இதையும் படிக்க: பட்லரின் சதத்தால் மும்பையை வென்று முதலிடத்தில் ராஜஸ்தான் - திலக், இஷானின் அரை சதம் வீண்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்