மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஒரு வேட்பாளரை களமிறக்க உள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு அந்த இடத்தை ஒதுக்க காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை இறுதி கட்ட ஆலோசனை நடத்தி வருகிறது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் தமிழகத்தில் கைவசம் உள்ள ஒரே வாய்ப்பு தங்களுக்கு கிடைக்க வேண்டும் என போட்டியிடும் சூழலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சிதம்பரம் ஆலோசனை நடத்தியுள்ளார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரிக்கு அந்த இடத்தை ஒதுக்க வேண்டும் என ஒரு சாரார் வலியுறுத்தி வந்தாலும், சிதம்பரத்துக்கு அந்த வாய்ப்பு கேட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கார்த்தி சிதம்பரம் மீது சமீபத்தில் சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ப. சிதம்பரத்துக்கு வாய்ப்பு கிட்டாது என முன்பு பேசப்பட்டது. சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து சிதம்பரத்தை களமிறக்க காங்கிரஸ் ஆலோசனை நடத்தியதாகவும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசி வந்தனர். ஏற்கனவே மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து சிதம்பரம் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என அவர்கள் குறிப்பிட்டு வந்தனர்.
சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஆலோசனை மகாநாட்டில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என ஆலோசனை நடத்தப்பட்டதால், மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு கிட்டுமா என்ற கேள்விகுறியும் எழுந்தது. சமீபத்தில் கபில் சிபல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கூட்டணிக் கட்சியான திமுகவிடம் ஆலோசனை நடத்தி தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என கட்சித் தலைமை வலியுறுத்தியது. அதன்படியே திமுக 3 வேட்பாளர்களை களமிறக்கி, மீதமுள்ள வாக்குகளை காங்கிரஸ் கட்சிக்கு அளிக்க முன்வந்துள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள அந்த ஒரே இடத்துக்கு தற்போது கட்சிக்குள் கடும் போட்டி நிலவுகிறது.
கே.எஸ். அழகிரி டெல்லியிலேயே தங்கியிருந்து கட்சித் தலைவர்களை சந்தித்து வரும் நிலையில், சிதம்பரமும் கட்சித் தலைமையுடன் பல்வேறு ஆலோசனைகளை நடத்தியுள்ளார். இளைய தலைவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் பிரவீன் சக்கரவர்த்தி போன்ற புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கட்சியில் ஒரு சாரார் வலியுறுத்தி வருகிறார்கள். இறுதி முடிவு சோனியா காந்தி இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய பிறகு எடுக்கப்படும் என கட்சியை சேர்ந்தவர்கள் கருதுகிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்