Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

”என் புள்ளையவிட நல்லா படிக்குறான்” -பொறாமையில் சிறுவனுக்கு விஷம் கொடுத்த சக மாணவியின் தாய்

பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக சக மாணவியின் தாயார் மீது புகார் கூறப்பட்ட நிலையில், கூல்ட்ரிங்ஸ் குடித்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோக நிகழ்வு காரைக்காலில் நடந்திருக்கிறது.

காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். காரைக்கால் நியாய விலை கடையில் பணிபுரியும் இவருக்கு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது மகன் பால மணிகண்டன் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். அதன்படி, நேற்று அப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சிக்காக காலையில் மாணவன் சென்றிருக்கிறான்.

image

மதியம் வீடு திரும்பிய சிறுவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பெற்றோர் விசாரித்தபோது பள்ளியில் காவலாளி குளிர்பானம் கொடுத்ததாகவும் அதை சாப்பிட்டதிலிருந்து வாந்தி வருவதாகவும் தெரிவித்துள்ளான். உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவனை பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். மேலும் இது குறித்து பள்ளிக்கு சென்று விசாரித்தபோது, குளிர்பானம் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இதனையடுத்து பள்ளி காவலாளி தேவதாஸ் என்பவரிடம் விசாரித்தபோது. மாணவன் பால மணிகண்டன் உறவினர் எனக்கூறி ஒருவர் குளிர்பானம் வழங்கியதாக தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கு பொறுத்தியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மாணவன் பயிலும் அதே வகுப்பை சேர்ந்த சக மாணவியின் தாயார் தான் குளிர்பானத்தை காவலாளியிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார் என்பது உறுதியானது.

image

இதனையடுத்து காரைக்கால் நகர காவல் நிலையத்தில் சிறுவனின் தாயார் மாலதி, மகனின் படிப்பில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக தனது மகனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்த சகாய ராணி விக்டோரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். புகாரின் பேரில் காரைக்கால் நகர போலீசார் சகாய ராணி விக்டோரியாவை அழைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவன் பாலமணிகண்டன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறான். இது குறித்து தகவலறிந்து மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவனுக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை எனக்கூறி மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினர்.

image

இதனையடுத்து மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டார்கள். மேலும் மருத்துவமனைக்குள் சென்ற உறவினர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த வழக்கில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் சென்னை நாகை நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து மாற்றப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் மாணவனுக்கு விஷம் கொடுத்ததாக புகார் கூறப்பட்ட சகாய ராணி விக்டோரியாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவனின் உடல் உடற்கூறாய்விற்காக பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்