Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வயதோ 99... சபரிமலைக்கு தொடர்ச்சியாக 49 ஆண்டுகள்... - ஆச்சரியப்படுத்திய மூதாட்டி

கடந்த 49 ஆண்டுகளாக தொடர்ந்து சபரிமலை வந்து ஐயப்பனை தரிசனம் செய்யும் 99 வயது மூதாட்டியை பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். 99 வயதிலும் திடகாத்திரமான உடல் ஆரோக்கியத்துடன் வந்த அந்த மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்தும் பக்தர்கள் உற்சாகமடைந்தனர்.

சபரிமலையில் தற்போது மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி முதல் நடை திறக்கப்பட்டு தினசரி 60 ஆயிரம் முதல் ஒரு லட்சத்தை நெருங்கும் வரையிலான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் அதிக எண்ணிக்கையிலான பக்தர்களில் ஒரு சிலர் மட்டுமே, மற்ற பக்தர்களின் கவனம் ஈர்த்து வருகின்றனர்.

அந்த வரிசையில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரிட்டி பகுதியைச் சேர்ந்த 99 வயது தேவ் என்ற மூதாட்டி, பிற பக்தர்கள் துவங்கி போலீசார், நம்பூதிரிகள் வரை அனைவரையும் உற்று நோக்க வைத்தார். 99 வயதிலும் மூக்குக் கண்ணாடி அணிய தேவையில்லாத பார்வை குறையாத கண்கள், மெல்ல பேசினாலும் கேட்கும் செவித்திறன், வயதைக் காட்டிக் கொடுக்காத நா பிறழாத தங்கு தடையற்ற பேச்சு, தள்ளாடியோ, கூன் விழுந்தோ, கம்பு ஊன்றி நடக்கத் தேவையில்லாத கை, கால்கள் என ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் குத்தகையாய் உருமாறி, சபரிமலை தரிசனத்திற்கு வந்ததால் தான் அந்த மூதாட்டி அனைவரையும் விழி உயர்த்த வைத்தார்.

image

ஐயப்பனுக்கு மாலையிட்டு அவரை தரிசிக்க வேண்டும் என்று சிறு வயது முதலே ஆசை இருந்தாலும் சபரிமலையின் கட்டுப்பாடுகளால் அந்த ஆசை, மூதாட்டிக்கு 50 வயது கடந்து தான் நிறைவேறியது. 51வது வயதிலிருந்து 99 வயதாகும் தற்போது வரை 49 ஆண்டுகள் தொடர்ச்சியாக சபரிமலை ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதம் இருந்து தரிசனம் செய்து வருகிறார் இந்த மூதாட்டி.

மூதாட்டியின் ஐயப்பன் மீதான பற்றுக்கும் அசராத உடல் ஆரோக்கியத்திற்கும் அடிபணிந்த போலீசார் மற்றும் தேவஸ்வம் போர்டு பணியாளர்கள், அவருக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். திடகாத்திரமாக நடக்க முடியும் என்றாலும் பக்தர்கள் கூட்ட நெரிசலால் அவரது பாதுகாப்பை கருதி, அவருக்கு வீல் சேர் ஒதுக்கப்பட்டு மூதாட்டி சன்னிதான முகப்பு வரை அழைத்து வரப்பட்டார்.

image

அவருக்கு ஐயப்பன் விக்ரகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பிரசாதத்தை நம்பூதிரி வெளியில் வந்து அவரிடம் வழங்கி சிறப்பித்தார். மூதாட்டியைக் கண்டு உற்சாகமடைந்த இதர ஐயப்ப பக்தர்கள் அவருடன் செல்ஃபி எடுத்தும் விபரங்கள் கேட்டும் மகிழ்ந்தனர். ஐயப்பன் தரிசனம் சுகமானதாக இருந்ததாகவும், ஐயப்பனை சுகமாக கண்டு தொழுததாகவும் கூறி போலீசார் உள்ளிட்ட பலரிடம் நீண்ட நேரம் உரையாடி விட்டு சென்றார்... பக்தர்களின் கண்ணுக்குள்ளேயே தங்கிப் போன இந்த கண்ணூர் மூதாட்டி தேவ்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்