Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

”நிறைய பசங்க வரிசையில் காத்துக்கிட்டு இருக்காங்க”- ரோகித் விடுக்கும் எச்சரிக்கை! யாருக்கு?

”திறமையான இளம் வீரர்கள் காத்திருப்பதாலேயே சிலருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை” என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில், காயம் காரணமாக ஷ்ரேயாஸ் அய்யர் விலகியதை அடுத்து மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரஜத் படிதார் சேர்க்கப்பட்டிருந்தார். இவ்விரு அணிகளுக்கான மூன்றாவது போட்டி, கடந்த ஜனவரி 24ஆம் தேதி மத்தியப் பிரதேசம் இந்தூரில் நடைபெற்றது. ஏற்கெனவே முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியதால், கடைசிப் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

அப்போது முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டனர். ஆனால், அம்மாநிலத்தைச் சேர்ந்த ரஜத் படிதார் கடைசிப் போட்டியில் சேர்க்கப்படுவார் எனப் பலரும் நம்பியிருந்தனர். ஆனால், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

image

இதுகுறித்து அன்றைய போட்டி முடிந்ததும் பேட்டியளித்த கேப்டன் ரோகித் சர்மா, “இளம் திறமையான வீரர்களால் இந்திய அணி நெருக்கடியில் உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிட்டனர். கோலி 3வது இடத்திலும், இஷான் கிஷான் 4வது இடத்திலும் இறங்கி விளையாடி வருகின்றனர்.

இதில் இஷான் வங்கதேச தொடரில் இரட்டைச் சதம் அடித்தும் அவருக்கு இலங்கை தொடரில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அடுத்து சூர்யகுமார் யாதவ் 5வது இடத்தில் இறங்கி விளையாடுகிறார். அவர் எப்படி விளையாடுகிறார் என்று உலகத்துக்கே தெரியும். அடுத்து, 6வது இடத்தில் ஹர்திக் பாண்டியா விளையாடி வருகிறார். ஆக, எல்லோரும் விளையாட வேண்டும் என்றுதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

image

ஆனால் ரஜத் படிதாருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தும் அவர் களமிறக்கப்படவில்லை. அவருக்கு வாய்ப்பு உருவாகும்போது அவரை விளையாட வைப்போம். இந்தூரில் அவரை விளையாட வைத்திருக்கலாம் என்று எனக்குத் தெரியும். ’ராஞ்சியில் நடக்கும் போட்டியில் நான் ராஞ்சியைச் சேர்ந்தவன். என்னை இங்கே விளையாட விடுங்கள்’ என இஷானும் என்னிடம் சொல்வார். ஆனால் அப்படி நடப்பது கிடையாது. சில திட்டங்களின்படியே நாங்கள் செயல்படுகிறோம். அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதைத்தான் நாங்கள் சொல்லி வருகிறோம்.

எங்களால் முடிந்தவரை இளம் வீரர்களுக்கு விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்க வேண்டும். காரணம், நிறைய இளம் வீரர்கள் இந்த வரிசையில் காத்திருக்கிறார்கள். ஆகையால், அவர்களுக்கான இடத்தைக் கண்டுபிடிக்கும் வரை எங்களால் அந்த வாய்ப்பை வழங்க முடியாது. மேலும், உலகக் கோப்பைக்கு முன்னதாக அணி நிர்வாகம் வகுத்திருக்கும் திட்டத்தின்படியே செயல்பட வேண்டி உள்ளது. இதன் காரணமாகவே, சில வீரர்கள் வாய்ப்புகளை இழக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்