சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 26ஆம் தேதி முதல் டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். தற்போது அந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு விதமான ஊதியமும், 2009 மே மாதத்திற்கு முன்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரு விதமான ஊதியம் வழங்கப்படுவதாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆசிரியர்கள் தொடங்கினர். சென்னை டி.பி.ஐ நுங்கம்பாக்கம் வளாகத்தில் தொடங்கிய இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் 6 வது நாளாக இன்றும் நீடித்தது. இதுவரை 144 ஆசிரியர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டனர். ஏற்கனவே துறை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது.
சம ஊதியம் எப்போது வழங்கப்படும் எம தமிழக அரசு உறுதியாக அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் அறிவித்து இருந்தனர். சில ஆசிரியர்கள் குழந்தைகள் உடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பலர் உடல் நலக்குறைவு பாதிக்கப்படுவதால் கூடுதலான ஆம்புலன்ஸ் வாகனம் வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் இன்று தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து அறிய நிதித்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்படும் என அறிவித்தது. இதனை அடுத்து தற்போது போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்