Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"நான் 100% தெலுங்கானாவின் மகள்!" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா https://ift.tt/2PPmTKo

தெலங்கானாவில் தனது புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ஒய்.எஸ்.ஷர்மிளா, "நான் 100% தெலுங்கானாவின் மகள்" என்றார். அவரது பொதுக்கூட்டத்தில் கவனிக்கத்தக்க பல விஷயங்கள் அரங்கேறின.

ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வரின் மகள் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளா தற்போது ஒரு புதிய அரசியல் கட்சியை துவங்க தீர்மானித்துள்ளார். ஆனால், இவர் அரசியல் கட்சி துவங்க இருப்பது ஆந்திராவில் அவரின் அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டியை எதிர்த்து அல்ல, தெலங்கானாவில் சந்திரசேகர ராவை எதிர்த்துதான்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தெலங்கானாவில் ஒரு மாநில பிரிவு ஒன்றை வைத்திருந்தாலும், கட்சி முக்கியமாக ஆந்திராவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனினும் தெலங்கானாவில் பெரும்பாலும் செயலற்ற நிலையில் உள்ளது. இதற்கிடையே, ஷர்மிளா தனது குடும்பத்தினரிடையே உள்ள வேறுபாடுகள் காரணமாக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இருந்து பிரிந்து தனிக்கட்சி துவங்க இருக்கிறார் என்று ஆந்திர மாநில ஊடகங்கள் கூறுகின்றன. சமீபகாலமாக ஜெகனுடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கவே தற்போது ஷர்மிளா இந்த முடிவுக்கு வந்திருப்பதாக அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், 'அண்ணனை எதிர்க்க வேண்டாம்' என்றே தெலங்கானாவில் கவனம் செலுத்த ஷர்மிளா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படியே அவரின் பேச்சும் அமைந்தது.

2023 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர் தனது சொந்த அரசியல் கட்சியை உருவாக்கி, ஷர்மிளா தெலங்கானா அரசியலில் இறங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், தெலங்கானாவின் கம்மம் பகுதியில் வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டம் நடத்தி, அவர் அதில் கட்சியின் பெயர், கொடி உள்ளிட்ட விவரங்களை வெளியிடுவார் என பேசப்பட்டது. இதற்கிடையே, கட்சி தொடங்கும் முன்பாகவே எதிர்ப்புகளை சம்பாதித்தார். அவரின் கூட்டத்துக்கு ஆளும் தெலங்கானா தடைகள் பல விதித்தாக அறியப்படுகிறது.

image

தற்போது கொரோனா காலம் என்பதால், கம்மத்தில் நடந்த ஷர்மிளாவின் பொதுக்கூட்டத்துக்கு 6,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கியது தெலங்கானா காவல்துறை. அதுவும், அந்த 6000 பேரும் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஷர்மிளாவின் கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக கம்மம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஒரு மாதத்துக்கு முன்பு இதற்கு அனுமதி கொடுத்த போலீஸ் இப்போது அந்த அனுமதியை திருத்தி 6000 பேருக்கு அனுமதி கொடுத்துள்ளனர்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட ஷர்மிளாவின் நெருங்கிய உதவியாளர் கோண்டா ராகவா ரெட்டி, "கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்றுவதாக உறுதியளித்த பின்னர், கடந்த மாதமே பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கு கம்மம் காவல்துறையிடம் இருந்து அனுமதி பெறப்பப்பட்டுவிட்டது. ஆனால், உள்ளூர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர்கள் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை என்ற பெயரில் கூட்டத்திற்கு இடையூறுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். உண்மையில், கம்மத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனாலும், நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்போம்" என்றார்.

ஷர்மிளாவின் கூட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள தெலங்கானா காவல்துறை, ஏப்ரல் 14-ம் தேதி நாகார்ஜுன்சாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள ஹாலியாவில் டி.ஆர்.எஸ் தலைவரும், முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் பொதுக் கூட்டத்திற்கு அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர் அவரின் ஆதரவாளர்கள்.

இது ஒருபுறம் இருக்க, பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஷர்மிளா கம்மம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்த வாகனங்கள் அவரின் வாகனத்தில் மோத, சிறிய விபத்து ஒன்று நடந்ததாக 'டைம்ஸ் ஆப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஷர்மிளா உடன் அவரின் தாயாரும் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயம்மா கலந்துகொண்டார்.

இந்த நிலையில், கம்மத்தில் வெள்ளிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில், தான் அரசியலில் நுழைவதை அதிகாரபூர்வமாக அறிவித்த ஷர்மிளா, ஜூலை 8 ஆம் தேதி தெலுங்கானாவில் தனது சொந்தக் கட்சியின் பெயர், கொடி உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

image

மேலும், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய அவர், "ராஜண்ணா ராஜ்ஜியம் வேண்டி நாம் புதிய கட்சி தொடங்க போகிறோம். தெலுங்கானா உருவானபோது பலர் உயிரை இழந்தனர். அதன்பின் மற்றவர்களின் நன்றாக இருக்கட்டும் என்றுதான் அந்த தியாகத்தை அவர்கள் செய்தார்கள். ஆனால், தெலுங்கானா உருவான பின்னர் இன்னும் பலர் தங்கள் உயிரை விட்டுக்கொண்டுள்ளனர். ஏழைகள் மட்டுமல்ல, எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட முதல்வரை சந்திக்க வாய்ப்பில்லை. இங்குள்ள முதல்வரை எதிர்க்க ஒரு கட்சி இல்லை. காங்கிரஸ் கட்சியால் கே.சி.ஆரை கேள்விக் கேட்க முடியாது. பாஜக கொடுத்த வாக்குறுதிகளைக் கூட இங்கு நிறைவேற்றவில்லை.

எங்கள் கட்சி தெலுங்கானா மக்களுக்காக மட்டுமே செயல்படும். நான் 100% தெலுங்கானாவின் மகள். நான் இந்தக் காற்றை சுவாசித்தேன், இந்த நிலத்தில் வளர்ந்தவள். என் மகளும் மகனும் இங்கு பிறந்தார்கள். எனவே, இந்த நிலத்திற்கு நன்றியைக் காட்டுவதும், இங்குள்ள மக்களின் நலனுக்காக உழைப்பது எப்படி தவறாகும்?

நான் மக்களால் விடுவிக்கப்பட்ட அம்பு. டி.ஆர்.எஸ், பாஜக அல்லது காங்கிரஸ் காரணமாக நான் வரவில்லை. நான் மக்கள் நலனுக்காக வருகிறேன். எனது கட்சி எந்தவொரு கட்சியின் கீழும் செயல்படாது" என்றார் ஷர்மிளா.

தெலங்கானாவில் உள்ள அரசு வேலைவாய்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கூறி 3 நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

முன்னதாக, பொதுக்கூட்டத்தில் சில விஷயங்கள் கவனம் ஈர்த்தன. அது, ஷர்மிளா தனது கையில் கட்டியிருந்த கடிகாரம். கருப்பு பட்டையுடன் கூடிய பழைய பாணியிலான மணிக்கட்டு கடிகாரமான அது, அவரின் தந்தை ராஜசேகர ரெட்டி கட்டியிருந்தது. சென்டிமென்ட் அடிப்படையில் அவர் அதைக் கட்டியிருந்தார். இதேபோல் தெலங்கானா பெண்கள் மட்டுமே உடுத்தும் பிரத்யேக டைப்பிலான சேலையையும் அணிந்து வந்து கவனம் ஈர்த்தார் ஷர்மிளா.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்