Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒழுகும் ஓட்டை வீட்டில் தொடங்கி ஐ.ஐ.எம் - ராஞ்சி வரை... உத்வேகம் தரும் ரஞ்சித்தின் பயணம்! https://ift.tt/3wN4v5C

ரஞ்சித் ராமச்சந்திரன்... இந்தப் பெயர்தான் இரண்டு நாள்களாக நெட்டிசன்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், அவர் இணையத்தில் பகிர்ந்த அவரது வாழ்க்கைக் கதை. அந்த கதை, கனவு காணும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஓர் உத்வேகம் கொடுக்கும். ஆம், அத்தனை கஷ்டங்களையும், வலிகளையும் கடந்துதான் அவரின் கனவு நிறைவேறியிருக்கிறது. ஒழுகும் ஓட்டை வீட்டில் வசித்தபடி, இரவுநேர செக்யூரிட்டி பணி செய்துகொண்டே பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு, ஐ.ஐ.எம் - ராஞ்சியில் உதவிப் பேராசிரியராக பாடம் சொல்லித் தரும் இளைஞரின் உத்வேகப் பயணம் இது...

ரஞ்சித்தின் சொந்த கேரள மாநிலம் காசர்கோடு அருகில் உள்ள மலைப்பகுதி. தந்தை ராமச்சந்திரன் நாயக் தைய தொழிலாளி. தாய் பேபி கூலித் தொழிலாளி. இந்த தம்பதியினரின் அதிகபட்ச படிப்பே 5-ம் வகுப்புதான். ஆனாலும் ரஞ்சித்தை படிக்கவைக்க வேண்டும் என்று அவர்களுக்கு தீரா கனவு.

அவர்களின் கனவு எப்படி நனவானது என்பதை தனது ஓடு பதிந்த வீட்டுடன் பகிர்ந்துள்ளார் ரஞ்சித். இதற்கு அடுத்த கதைகளை ரஞ்சித் உதிர்த்த வார்த்தைகளில் இருந்தே கேட்போம்...

"நீங்கள் காணும் இந்த வீட்டில்தான் நான் பிறந்தேன். இங்கு இருந்துதான் வளர்ந்தேன். இங்குதான் இன்னுமும் வசிக்கிறேன். நான் தற்போது சொல்லப்போகும் எனது கதை, என்னைப் போன்ற கனவுகளுடன் இருக்கும் யாரேனும் ஒருவருக்கு உத்வேகம் கொடுத்தால், அதுவே எனக்கு கிடைத்த வெற்றி.

10-ம் வகுப்பு வரை, காசர்கோடு வெல்லாச்சல் பகுதியில் உள்ள பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்காக அரசு நடத்தும் மாதிரி குடியிருப்புப் பள்ளியில் சேர்த்து படித்தேன். பள்ளிப் படிப்புக்கு தேவையான அனைத்தையும் அரசாங்கம் கவனித்து கொண்டது. அந்தக் காலகட்டத்தில் எனது குடும்பத்தின் நிதிச் சூழல்கள் பற்றி எனக்கு தெரியாது. ஒருவழியாக பள்ளிப்படிப்பை நல்ல மதிப்பெண்கள் உடன் முடித்து கல்லூரிக்கு செல்ல இருந்த சமயம்.

ஆனால், குடும்பத்தின் நிதிச்சுமை காரணமாக கல்லூரிப் படிப்பை தொடர முடியாது உணர்ந்த காலகட்டம் அது. அதனால் கல்லூரி படிப்பை நிறுத்த முடிவு செய்தேன். சுவாரஸ்யமாக ஒருநாள் பனத்தூரில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இரவுநேர வாட்ச்மேன் விளம்பரம் கண்ணில் பட, அதற்கு விண்ணப்பித்தேன். உண்மையில், எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. நான் விண்ணப்பித்த வேலை எனக்கு கிடைத்தது. இரவுநேர வாட்ச்மேன் பணியில் இணைத்துக்கொண்டு காலையில் கல்லூரி, இரவில் வேலை பார்த்து கொண்டிருந்தேன்.

ஆரம்பத்தில் நான் வேலைக்குச் சேரும்போது எனக்கு கிடைத்த சம்பளம் மாதத்திற்கு ரூ.3,500. அதுவே ஐந்தாம் ஆண்டில் மாதத்திற்கு ரூ.8,000 ஆக உயர்ந்தது. ஆம், ஐந்து ஆண்டுகள் அந்த வேலையில் தொடர்ந்தேன். அதாவது, அந்த வேலையை பார்த்துக்கொண்டே இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளை முடித்தேன். இரண்டு பட்டப் படிப்புகள் படித்த கல்லூரியும் வாழ்க்கையின் படிப்பினையை உணர்த்தியது. இளநிலைப் படிப்பு படித்த செயின்ட் பியஸ் எக்ஸ் கல்லூரி எனக்கு மேடைகளில் எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தது என்றால், காசர்கோடு பகுதியை தாண்டியும் உலகமும், வாழ்க்கையும் இருக்கிறது என்று உணர்த்தியது, நான் முதுநிலை படிப்பு படித்த சென்ட்ரல் யூனிவர்சிட்டி ஆஃப் கேரளா.

image

இங்கு கிடைத்த வாழ்க்கை மற்றும் கல்வி அனுபவங்களால் ஐஐடி மெட்ராஸ் என்ற வேறு ஒரு உலகத்தை அடைந்தேன். ஐஐடி என்பது ஒரு வித்தியாசமான இடம். ஐஐடியில் சேர்ந்தபோது ஒரு கூட்டத்தின் நடுவில் தனி மனிதனாக இருப்பதைப் போல முதல்முறையாக உணர்ந்தேன். சென்னைக்கு வரும் முன்பு, எனக்கு மலையாளத்தில் மட்டுமே பேசத் தெரியும். அதனால் ஐஐடியில் சேர்ந்தபோது நான் பேசக்கூட பயந்தேன். இனி என்னால் இங்கு இருக்க முடியாது என எண்ணி என் பிஎச்டியை கைவிட முடிவு செய்தபோது எனது வழிகாட்டி டாக்டர் சுபாஷ் சசிதரன் மீண்டும் ஒரு வாழ்க்கைப் பாடத்தை எனக்கு கற்றுக்கொடுத்தார்.

ஒருநாள் மதிய உணவிற்கு என்னை வெளியே அழைத்துச் சென்ற அவர், தோல்வியை ஒப்புக்கொள்வதைவிட அதை எதிர்த்து போராட வேண்டும் என்ற உணர்த்தினார். அவர் கொடுத்த உத்வேகம் மீண்டும் ஒருமுறை வாழ்க்கையை எதிர்த்து போராட வேண்டும் என்ற எண்ணத்துக்கு என்னை வர வழிவகுத்தது. அந்தத் தருணத்தில் இருந்து நான் வெற்றிபெற வேண்டும் என முடிவெடுத்தேன்.

சுபாஷ் சாரின் மாணவர்கள் பலரும், பெரிய கம்பெனிகளில் பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அவர்களை போன்று நானும் உயர்ந்த இடங்களுக்குச் செல்ல சிக்கல்களை எதிர்த்து போராடினேன்.

விளைவு, நான்கு ஆண்டுகளில் எனது பிஎச்டியை முடித்தேன். கடந்த அக்டோபர் மாதம், ஐ.ஐ.எம்-ராஞ்சியில் உதவிப் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தேன். அதேநேரத்தில் எனது பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு ஒரு வீடு கட்ட கடன் வாங்க வங்கிகளில் விண்ணப்பித்தேன். இந்தக் கடன் கிடைக்கும் முன்பே எனக்கு ஐ.ஐ.எம் - ராஞ்சியில் உதவிப் பேராசிரியர் பணி கிடைத்தது. பனத்தூர் மலைப்பகுதியில் தொடங்கிய என்னுடைய இந்த பயணம், இதோ தற்போது ராஞ்சியில் நிற்கிறது.

பூச்சு கூட இல்லாத சுவர், ஒழுகும் ஓடுகள் மேயப்பட்ட கூரை, ஓட்டையால் மழையில் வீடு ஒழுகாமல் இருக்க பொருத்தப்பட்டிருக்கும் தார்ப்பாய், கதவில்லாத வாசல், வீட்டின் வெளிப்புறத்தில் இருக்கும் சிலிண்டர், ஓரமாக இருக்கும் டிடிஹெச் குடை, ஒரு ஜோடி செருப்பு என படத்தில் நீங்கள் பார்க்கும் குடிசையில் இருந்து ஐஐஎம் ராஞ்சி வரையான எனது இந்த பயணம் அவ்வளவு சுலபமானதாக இல்லை.

எனது வீடு போன்று ஆயிரம் குடிசைகளில் இருக்கும் பல கனவுகள் தொடங்குவதற்கு முன்பாகவோ அல்லது நிறைவேறுவதற்கு முன்பாக மரணித்துள்ளது. இனி அதுபோன்று நடக்க கூடாது என்பதற்காக எனது பயணத்தை இங்கே பதிவிடுகிறேன்" என்று தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

ரஞ்சித்தின்ஹ் இந்தப் பதிவை கேரள அமைச்சர் தாமஸ் ஐசக் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட லைக்குகளை, ஷேர்களை அள்ளிவருகிறது. கூடவே, பலருக்கும் உத்வேகத்தைத் தவறாமல் கொடுத்து வருகிறது.

- மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்