Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“சக அணி வீரர்கள் புறப்பட்ட பிறகே நான் வீட்டுக்கு திரும்புவேன்!”- பண்பால் வியக்கவைத்த தோனி

தலைமை பண்பு என்பது சிலருக்கு அனுபவத்தின் மூலம் கிடைக்கும். அப்படியான அனுபவத்தைத் தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது வெளிப்படுத்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சக அணி வீரர்கள்  புறப்பட்ட பிறகே நான் வீட்டுக்கு திரும்புவேன் என திட்டவட்டமாக சொல்லி விட்டாராம். அதனால் இப்போது அவர் தலைநகர் டெல்லியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். 

பயோ பபுளில் உள்ள வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால் 8 அணியின் வீரர்களும் அவரவர் வீடு திரும்பி வருகின்றனர். இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வெளிநாட்டு வீரர்கள் தங்களது தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களை பத்திரமாக அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை ஐபிஎல் நிர்வாகமும், பிசிசிஐயும் மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில்தான் தோனி எடுத்துள்ள முடிவு அனைவரையும் வியக்க வைத்துள்ளது. வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பத்திரமாக கிளம்பிய பிறகே தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில் இருந்து கிளம்புவேன் என காத்திருக்கிறார் தோனி. 

“நாங்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து கேப்டன் தோனி கடைசியாக வெளியேறும் சென்னை அணியின் உறுப்பினராக இருப்பார் என எங்களிடம் அவரே தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்ததால் முதலில் அணியில் இடம் பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் முதலில் செல்வார்கள் என சொல்லி உள்ளார். அதன் பின்னர் இந்தியாவை சேர்ந்த வீரர்களும். பின்னர் நாங்கள் எல்லோரும் பத்திரமாக வீட்டுக்கு திரும்பினோம் என்ற செய்தியை அறிந்துக் கொண்டதும் தோனி ஹோட்டலில் இருந்து புறப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது” என சென்னை அணியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

டைட்டானிக் படத்தில் கப்பல் மூழ்க போகிறது என தெரிந்ததும் பயணிகள் மற்றும் சக ஊழியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை பத்திரமாக வெளியேற்றும் கப்பல் கேப்டன் போல தோனி நிஜ வாழ்க்கையில் செயல்பட்டுள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்