Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனா தடுப்பூசி காப்புரிமை தற்காலிக தடை கோரிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு

கொரோனா தடுப்பூசி மீதான தற்காலிக காப்புரிமை தடைகளுக்கு, அமெரிக்கா ஆதரவு ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த நிபுணர்கள், கொரோனா தடுப்பூசி மீது இருக்கும் காப்புரிமை நிபந்தனைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்க தொடர்ந்து கடந்த அக்டோபரில் இருந்து அறிவுறுத்தி வருகின்றனர். தற்காலிக தடை மட்டுமே, ஏழை நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கான வழியை ஏற்படுத்தும் என்றும், தடுப்பூசி விநியோகத்தில் பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகள் இருக்காது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக மக்கள்தொகையில் 16% அளவை பணக்கார நாடுகள் கொண்டிருக்கின்றன. இந்த 16 சதவிகித நாடுகள், 53% தடுப்பூசி உற்பத்தியை ஏற்கெனவே வாங்கி தயார் நிலையில் வைத்திருக்கின்றன. ஜூலை மாத கடைசிவரை தேவைப்படும் 30 கோடி தடுப்பூசிகளுக்கான மருந்து அமெரிக்காவிடம் கையிருப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

image

உலகம் முழுவதும் இதுவரை தடுப்பூசி போடப்பட்ட மக்களில், 50 சதவிகிதத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் ஐரோப்பிய நாடுகளிலும், வடக்கு அமெரிக்காவிலும்தான் போடப்பட்டிருக்கின்றன. மீதம் உலக மக்கள்தொகையில் 80% காணப்படும் ஏழை நாடுகளுக்கு, இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசிகளில் மூன்றில் ஒரு பங்குகூட கிடைக்கவில்லை. இதை முன்னிறுத்திதான், இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் தடுப்பூசி காப்புரிமை மீதான தற்காலிக தடையை வலியுறுத்தின.

காப்புரிமைக்கான தற்காலிக தடை பற்றி அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி கத்ரீன் தாய், நேற்று அளித்த பேட்டியில், தாங்களும் இதற்கு ஆதரவு தருகிறோம் எனக்கூறியுள்ளார். பைடன் தலைமையிலான அரசு, தாங்கள் எப்படி இந்த தள்ளுபடிக்கு ஆதரவளித்தமோ, அதேபோல பிற நாடுகளும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் கத்ரீன் குறிப்பிட்டிருக்கிறார். இதுபற்றிய விவாதங்கள், நிச்சயம் நீளுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த முடிவுக்கு, இந்தியா வரவேற்பு தெரிவித்து மகிழ்ந்துள்ளது.

"விரைந்து தடுப்பூசியை விநியோகிப்பதென்பது, உலக வணிக நிறுவனத்தின் உறுப்பினர்களை பொறுத்தது. ஒரேநேரத்தில் பெரியளவு விநியோகம் செய்வது, மிக மிக கடினமான காரியமாக அவர்களுக்கு இருக்கப்போகின்றது. உலக வணிக நிறுவனத்தின் பொது இயக்குநர் கோசி, மிகவிரைந்து செயல்பட்டு, தங்கள் உறுப்பினர்களின் திறனை நிரூபிப்பதாக கூறியிருக்கிறார். அவரின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை கொள்வோம்"எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகள் மட்டுமே தடுப்பூசி விநியோகத்தில் காப்புரிமை நிபந்தனைகளுக்கு தற்காலிக தடை விதிக்க அறிவுறித்தி வருகிறது. அதேபோல அப்படி செய்தால் மட்டுமே, ஏழை நாடுகளுக்கும் எளிதில் தடுப்பூசி கிடைக்கும் என்றும் இவ்விரண்டு நாடுகளும் கூறிவந்தது.

image

ஆனால் அமெரிக்கா இதற்கு முதலிலிருந்து எதிர்ப்பு முகத்தையே காட்டி வந்தது. அமெரிக்கா மட்டுமன்றி, ஐரோப்பியா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, பிரேசில், நார்வே ஆகிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், அமெரிக்கா இந்த எதிர்ப்பிலிருந்து பின்வாங்கியதால், அதைத்தொடர்ந்து பிற நாடுகளும் பின்வாங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி மீதான இந்த காப்புரிமைக்கான தற்காலிக தடை விதிக்கும் கோரிக்கையை, மருந்து உற்பத்தியாளர்கள் சிலர் எதிர்க்கின்றனர் என்பதும் இங்கே மறுப்பதற்கில்லை. அவர்கள் இதுபற்றி பேசுகையில், "சில நாடுகளுக்கு காப்புரிமை இருக்கிறது. ஆனாலும், மருந்துத் தயாரிப்புக்குத் தேவையான மூலக்கூறுகள் இல்லாததாலும் தொழில் நுட்ப உதவி கிடைக்காததாலும் அவர்களால் தடுப்பூசி மருந்துகளைத் தயாரிக்க முடியவில்லை. அந்த தொழில்நுட்ப உதவி கிடைக்க வெகுகாலம் ஆகும். அப்படியிருக்கும்போது, காப்புரிமையை தற்காலிகமாக தடை செய்வதால், பெருமளவில் லாபம் இருக்காது" எனக்கூறியுள்ளனர்.

இருப்பினும், இது அசாதாரணமான சூழல் என்பதால், அசாதாரணமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் இந்த முடிவுக்கு, உலக சுகாதார நிறுவனமேவும் பாராட்டு தெரிவித்துள்ளது. 'இந்த பெருந்தொற்று நேரத்தில், இது மிகமுக்கியமான முடிவு' என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்