Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை: தமிழர் பெருமை சொல்லும் காஞ்சிபுர கல்வெட்டு

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்களின் சேவையும், அர்ப்பணிப்பும் பாராட்டப்பட்டுக்கொண்டிருக்கும்நிலையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அறுவை சிகிச்சையும், பிரசவமும் பார்த்த பெருமைக்குரிய இடமாக தமிழகம் இருந்திருக்கிறது. அதற்கான ஆதாரமாக நிற்கிறது காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரு கோயில்.

வீடியோவில் வறண்டு பாலையாக காட்சியளிக்கும் இந்த இடம் முக்கூடல். பாலாறு, செய்யாறு, வேகவதியாறு என மூன்று ஆறுகள் கூடும் நகர் திருமுக்கூடல். காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் அருகே மூன்று ஆறுகளும் ஓன்று கூடும் இடத்தில்தான் அப்பன் வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் அமைந்துள்ளது. வெறும் கோயில் மட்டுமல்ல இந்த இடம். இங்கு கி.பி.1068 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டில், இங்கு மருத்துவமனை செயல்பட்டது தெரியவருகிறது.

வீர ராஜேந்திர சோழ மன்னனின் கல்வெட்டு படி, இந்த மருத்துவமனை வீர சோழன் ஆதுலர் சாலை என்று அழைக்கப்பட்டது. 15 பேர் இங்கு உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறும் அளவுக்கு வசதிகள் இருந்தன. நாடி பார்த்து சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை செய்யும் நபர், மருந்துகளை கையாளும் மருந்தாளுநர், பெண் செவிலியர்கள், நாவிதர், உதவியாளர்கள் பணிபுரிந்துள்ளனர். இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருத்துவர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட ஊதியம் போன்றவை கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 20 மருந்துகளில் ஒன்றிரண்டு நீங்கலாக மற்றவை அனைத்தும் இப்போதும் பயன்பாட்டில் உள்ளன என்பது ஆச்சரியமான உண்மை. மருத்துவமனை மட்டுமின்றி வேதம் பயிற்றுவிக்கும் கல்லூரி, உணவு வசதியுடன் கூடிய மாணவர் விடுதி, நடனசாலை போன்றவையும் செயல்பட்ட இடமாக இருந்துள்ளது. பண்பட்ட சமூகமாக இருந்ததோடு, மருத்துவ வசதிகளுடன் கூடிய மேம்பட்ட இனமாகவும் தமிழர்கள் வாழ்ந்திருப்பதற்கு சான்றாக இருக்கும் இந்த திருமுக்கூடல் அப்பன் வெங்கடேஸ்வர பெருமாள் கோயில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மருத்துவமனை என்பது இத்தருணத்தில் நினைவுகூரத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்