Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மென்மையான போக்கு எதற்காக? - முழு ஊரடங்கை கடுமையாக்க எழும் கோரிக்கை

முழு ஊரடங்கை கடுமையாக்கினால் மட்டுமே கொரோனா தொற்று சங்கலியை அறுக்க முடியும் என்கின்றனர் முன்களப் பணியாளர்கள். 

கொரோனா தொற்று 2-வது அலை சுனாமி போல அதிவேகமாக வீசி கொண்டிருக்கிறது. இதனை தடுக்க புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடித்தாலே கொரோனா தொற்றை தடுக்க முடியும் என்று அரசு தெரிவித்தது. அதன்படி கடந்த திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 24.05.2021 அன்று காலை 4 மணி வரை, தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. பாதுகாப்பு பணிக்காக மொத்தம் 10 ஆயிரம் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
200 இடங்களில் சட்டம்- ஒழுங்கு போலீசாரும், 118 இடங்களில் போக்குவரத்து போலீசாரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை முழுவதும் சுமார் 360 ரோந்து வாகனங்கள் பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால் முழு ஊரடங்கு தொடங்கிய நாளான திங்கட்கிழமை அன்று மட்டுமே காவல்துறையினர் சென்னையின் பல பகுதிகளில் தீவிர வாகன சோதனையை மேற்கொண்டு அத்துமீறி செல்பவர்களை பிடித்தனர். ஆனால் இன்று காவல்துறையினரின் வாகன சோதனை என்பது மிகவும் குறைவாக காணப்பட்டது.

image
சாலைகளில் வாகன போக்குவரத்து என்பது சர்வசாதாரணமாக சென்று கொண்டிருக்கிறது. 318 வாகன சோதனை சாவடிகளை அமைத்தாலும் கூட அத்துமீறும் வாகனங்களை தடுப்பதும் வழக்கு போடுவதும் என்பதும் மிகவும் குறைவாகத்தான் காணப்பட்டு வருகிறது. சென்னையின் முக்கிய சாலைகளில் குறைந்து 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று கொண்டே தான் இருக்கிறது. சிறிய சாலைகளிலும் தெருக்களிலும் பொதுமக்கள் வெளியே சுற்றுவதும் சாதாரணமாக இருக்கிறது. இதனை காவல்துறை தடுக்கவில்லை என்பதற்கு முக்கிய காரணம் வாகனங்களை பறிமுதல் செய்யக்கூடாது, பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற டிஜிபி திரிபாதியின் உத்தரவே.

வாகன சோதனையில் வாகனங்களை நிறுத்தினால் மருத்துவ தேவைக்காக செல்வதாகவும் உடல் நிலை சரியில்லை என்றும் வாகன ஓட்டிகள் கூறி வருவதால் காவல்துறையினரால் எதுவும் செய்ய முடியவில்லை.

கடந்த ஆண்டு முழு ஊரடங்கின் போது வரக்கூடிய வாகனங்களை போலீசார் சோதனை செய்த பின்பே அனுப்பி வைத்தனர். அத்தியாவசிய தேவையின்றி வரக்கூடிய வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர். சாலைகளில் பொதுமக்கள் சுற்றினாலும் வழக்குப்பதிவு செய்தனர். பிறகு வழக்குகள் வாபஸ் பெற்று அரசு அறிவித்தது.

அதைப்போல மீண்டும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் கொஞ்சம் கடுமையானால் மட்டுமே கொரோனா தொற்று சங்கலியை அறுக்க முடியும் என்பதே காவல்துறையினரின் கருத்தாக இருக்கிறது. சென்னையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தான் காவல்துறை கடும் நடவடிக்கையை கையில் எடுக்க யோசிப்பதாகவும் கூறப்படுகிறது.
"கடந்த முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகள் கூட இல்லாமல் முழுவதுமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதனால் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தாலே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை 12 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி என்பதால் அனைவரது வாகனங்களை நிறுத்தியும் அடையாள அட்டை கேட்க முடியவில்லை. மேலும் இந்த முறை கொரோனாவின் பரவல் அதிகமாக இருப்பதால் விசாரிக்க தயங்குவதாகவும், கொரோனா நோயாளிகளுக்கு மருந்து, உணவு போன்றவற்றை உறவினர்கள் தொடர்ந்து கொண்டு சென்று கொண்டிருப்பதால் நிறுத்தி விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள் கூறுகின்றனர். 

- சுப்ரமணியன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்