Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தனித்துவ உடல்மொழி... பன்முகக் கலைஞர் பாண்டுவின் திரைப் பயணம்

பிரபல நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் என புகழ்பெற்ற பாண்டு கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார். தனித்துவமான உடல்மொழி மூலமாக முத்திரை பதித்த இவர் நடிகர் மட்டுமல்ல, சிறந்த ஓவியருமாவார்.

74 வயதான பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். கொரோனா தொற்றின் காரணமாக அவரது மனைவியும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

image

நடிகர் பாண்டுவின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம். பாண்டு - அமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு, பிண்டு என்ற மூன்று மகன்கள் உள்ளனர். நடிகர் இடிச்சபுளி செல்வராஜின் சகோதரரான  பாண்டு, ’கரையெல்லாம் செண்பகப்பூ’ என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு நூற்றுக்கணக்கான திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

நாட்டாமை, காலமெல்லாம் காதல் வாழ்க, சின்னத்தம்பி, காதல்கோட்டை, ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் சிறப்பான நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் நடிகர் பாண்டு. இவரது தனித்துவமான உடல்மொழி மற்றும் பேச்சு அனைவரிடமும் வரவேற்பை பெற்றது. 1981 ஆம் ஆண்டில் ‘கரையெல்லாம் செண்கப்பூ’ என்ற படம் மூலமாக நகைச்சுவை நடிகராக அறிமுகமான பாண்டு, அதன் பின்னர் 40 ஆண்டுகளாக தமிழ்சினிமாவில் அனைத்து நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து முத்திரை பதித்தார்.

image

நடிகர் பாண்டு சிறப்பான ஓவியராகவும் இருந்தவர். அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்தவர் இவர்தான். திமுகவிலிருந்து எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கியபோது அதிமுக கொடி மற்றும் சின்னம் வடிவமைக்கும் பணியை செய்ததை எப்போதும் பெருமையுடன் நினைவுகூர்வார் பாண்டு.  திறமைமிக்க ஓவியரான பாண்டு, நடிகர்கள், பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்பலகையை அழகுற வடிவமைத்தவர் . ‘கேப்பிட்டல் லெட்டர்ஸ்’ என்ற பெயரில் பெயர் பலகைகளை வடிவமைக்கும் தொழிலை வெற்றிகரமாக நடத்தியவர் பாண்டு, தற்போது இத்தொழிலை அவரின் மகன்கள் நடத்தி வருகிறார்கள். நடிப்பு மட்டுமின்றி ஓவியர், தொழில் முனைவோர் என்ற இரண்டு தளத்திலும் வெற்றிகரமாக பயணித்தவர் பாண்டு.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்