Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

காஞ்சிபுரம்: 20 நாட்களில் 258 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அதிர்ச்சி

காஞ்சிபுரத்தில் கடந்த 20 நாட்களில் ஒரு வயது குழந்தை முதல் 15 வயது சிறுவர்கள் வரை 258 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையானது வேகமெடுத்து நோய் தொற்றானது கடந்த இரண்டு மாதங்களில் அதிக அளவில் பரவி பெரும் பாதிப்பையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வந்தது. இதனால் தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசானது தொற்றினை குறைக்கும் வகையில் கொரோனா பரிசோதனை முகாமினை அதிகபடுத்தியும், பாதிப்புடையவர்களுக்கு சிகிச்சைகள் அளித்தும் படிப்படியாக தொற்றினை குறைந்துள்ளது. அதேபோல் முன்னச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. கடந்த முதல் அலையில் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களிடையே அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா, தற்போது இரண்டாம் அலை 50 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

image

ஆனால் சமீப நாட்களாக 1 வயதுடைய குழந்தைகளுக்கே கொரோனா தொற்று அதிகம் உறுதியாகி வருகிறது. கடந்த 29ஆம் தேதி முதல் இம்மாதம் 19ஆம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 முதல் 15 வயதிற்கு உட்பட்ட 258 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது சுகாதாரத்துறையின் அறிக்கைமூலம் உறுதியாகியுள்ளது. மேலும் அதில் 1 வயது முதல் 5 வயதுக்குட்பட்ட 48 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை எனவும், இதன்காரணமாகவே குழந்தைகளுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.

image

மேலும் குழந்தைகளுக்கென தற்போதுவரை பிரத்யேகமாக சிறப்பு வார்டு எதுவும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தவில்லை. அதேபோல் குழந்தைகளுடன் தங்கும் பெற்றோர்களுக்கும் முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை சராசரியாக நாள் ஒன்றுக்கு 300க்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் சராசரியாக நாள்தோறும் 13லிருந்து 15 குழந்தைகள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த எண்ணிக்கை 18 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையைவிட சற்று அதிகமாகவே இருக்கிறது. பெற்றோர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்திக்கொண்டால் மட்டுமே குழந்தைகளுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

image

இதுகுறித்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, ’’குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகரித்துவரும் காரணத்தினால் ஆக்சிஜன் வசதிகொண்ட 200 படுக்கை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு, குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து உரிய பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்று கூறுகின்றனர்.

- பிரசன்னா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்