இந்தியாவில், தொடர்ந்து ஒருவாரமாக 2 லட்சத்துக்கும் குறைவான தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,34,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28,441,986 என்று உயர்ந்துள்ளது. இவர்களில், 1,713,413 கொரோனாவில் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மூன்றாவது நாளாக இந்த எண்ணிக்கை 20 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணிநேரத்தில், இந்தியாவில் கொரோனாவால் 2,887 உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. முந்தைய நாளோடு ஒப்பிடுகையில், 320 மரணங்கள் குறைவாகவே பதிவாகியுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை, 3,37,989 என்றாகியுள்ளது.
நேற்று ஒரே நாளில், 2,11,499 பேர் கொரோனாவிலிருந்து மீண்டிருக்கின்றனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 26 மில்லியனை கடந்துள்ளது. குணமடைவோர் விகிதம், 92.48 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
நேற்று ஒருநாளில், இந்தியாவில் 21.59 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கிறது. மொத்தமாக இதுவரை 35.37 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்று உறுதிசெய்யப்படுவோர் விகிதம், 6.21 சதவிகிதம் என்றாகியுள்ளது. தொடர்ந்து பத்தாவது நாளாக, இந்த சதவிகிதம் 10 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ளது.
கடந்த சில தினங்களாகவே இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துதான் வருகின்றது.
கொரோனாவுக்கான தீர்வான தடுப்பூசி விநியோகத்தை பொறுத்தவரை, இதுவரை 22.10 கோடி கொரோனா தடுப்பூசிகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதில், முதல் டோஸ் பெற்றவர்கள் எண்ணிக்கை 17.55 கோடி என்றும், இரண்டாவது டோஸ் எடுத்தவர்கள் எண்ணிக்கை 4.53 கோடியும் உள்ளது. இவற்றில் கடந்த 24 மணி நேரத்தில், 24,26, 265 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்