Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சி: வெளிநாடு வாழ் தமிழர்கள் அளித்த நிவாரண உதவி

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சி மூலம் உதவிகள் கிடைத்துள்ளன.

புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சியின் எதிரொலியாக, தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு, நலிந்தோருக்கு உதவிட வெளிநாடு வாழ் தமிழர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். அந்த வகையில், அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திகேயன் முனியப்பன் குடும்பத்தினர் 50 ஆயிரம் ரூபாய் அளித்தனர். மேலும் குவைத்தில் உள்ள முரளிபாபு சந்த் குடும்பத்தினர் 6 ஆயிரம் ரூபாயும் வெளிநாடுவாழ் தமிழரான சதீஷ் குமார் 10 ஆயிரம் ரூபாயும் துளிர்க்கும் நம்பிக்கைக்கு நிவாரண உதவியாக வழங்கி உள்ளனர்.

புதுக்கோட்டையில் வேலை இல்லாததால் மாற்றுத்திறனாளியான மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் வாழ்வாதாரம் இன்றி தவித்துவந்த லேத் பட்டறை தொழிலாளி குடும்பத்திற்கு துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சி மூலம் உதவி கிடைத்துள்ளது. சர்வஜித் அறக்கட்டளை மற்றும் மை டீம் என்ற தன்னார்வ அமைப்பினர் இணைந்து தொழிலாளி கணேசன் குடும்பத்திற்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை அளித்தனர். மேலும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவு, வீட்டு வாடகையை செலுத்துவதாகவும் அவர்கள் உறுதி அளித்ததோடு வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 12 குடும்பங்களுக்கு துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சி மூலம் மருத்துவர் ரூபேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் உதவி செய்தனர். அக்குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் 15 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்களை நேரில் அளித்தனர்.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்