Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஹாட்ரிக் விக்கெட் சாதனை: தென்னாப்பிரிக்க அணியில் அசத்தும் இந்திய வம்சாவளி கேஷவ் மகராஜ்!

தென்னாப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு சூறாவளியாக உருவாகியுள்ளார், இந்திய வம்சாவளியை சேர்ந்த கேஷவ் மகராஜ். 31 வயதான இவர் 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 129 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி லைம் லைட்டுக்குள் வந்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னராக உருவெடுத்துள்ளார்.  

யார் இவர்? - தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் 1990-இல் பிறந்தவர் கேஷவ் மகராஜ். அவரது முன்னோர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். 19 மற்றும் 20-ம் நூற்றாண்டில் மதராஸ், கொல்கத்தா, குஜராத், மகாராஷ்டிரா, கேரளா என கடலோர இந்திய மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தென்னாப்பிரிக்காவின் விவசாய நிலங்களில் பணி செய்வதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நாடு கடத்தப்பட்டனர். நாளடைவில் தொழில், குடும்பம் என இந்தியர்கள் அனைவரும் அங்கேயே தங்கினர். பல வலிகளுக்கும், புறக்கணிப்புகளுக்கும் பிறகு இந்திய வம்சாவளியினரை தங்களில் ஒருவராக தென்னாப்பிரிக்க அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. 

image

அப்படி பிரிட்டிஷ்காரர்களால் ஒரு தொழிலாளியாக இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், கேஷவ் மகராஜின் முன்னோர்கள்.

16 வயதில் கிரிக்கெட்! - சிறு வயது முதலே கிரிக்கெட் மீது தீரா காதல் கொண்ட கேஷவ் 16 வயதில் கவசுலு நேட்டால் மாகாண கிரிக்கெட் அணியில் இடம்பெற்று உள்ளூர் கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார். இடது கை ஆர்தோடெக்ஸ் சுழற்பந்து வீச்சாளரான அவர், உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார். அதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். 

கடந்த 2016-இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அயலக மண்ணில் பெர்த் மைதானத்தில் தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களம் இறங்கினார் கேஷவ். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் வீசிய 150-வது பந்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்தினார். அது சர்வதேச கிரிக்கெட்டில் அவர் வீழ்த்திய முதல் விக்கெட்டும் கூட. அன்று முதலே தென்னாப்பிரிக்க அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார். இந்தியாவுக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் அறிகமுகமான முதல் ஆண்டில் அவர் விளையாடிய முதல் 12 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் மூலம் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 2018-இல் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இலங்கையின் ஹெராத்தை தொடர்ந்து ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை அள்ளிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். 2019-இல் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது 100-வது டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டை வீழ்த்தினார் கேஷவ். அவரது 100-வது விக்கெட், இந்தியாவின் ரஹானே. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக்: அதன் பிறகு கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆக்டிவாக கிரிக்கெட் போட்டிகளில் அதிகம் விளையாடாமல் இருந்த கேஷவ் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அந்த நாட்டின் மண்ணிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 60 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்க நாட்டு வீரர் ஒருவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

image

மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது. 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது மேற்கிந்திய தீவுகள் அணி. நான்காம் நாள் ஆட்டத்தின் 37வது ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் வீசிய அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் கெய்ரான் பாவெல் விக்கெட்டை பறிகொடுத்தார். அதற்கு அடுத்த இரு பந்துகளில் ஜேசன் ஹோல்டரையும், ஜோஸ்வா டி சில்வாவையும் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். 

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் இரண்டாவது தென்னாப்பிரிக்க வீரர் மற்றும் முதல் தென்னாப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த 1960-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தென்னாப்பிரிக்க வீரர் கிரிஃபின் முதன்முதலில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். 60 ஆண்டுகளுக்கு பிறகு கேஷவ் இந்த சாதனையை படைத்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்