உத்தராகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத், பதவியேற்று 4 மாதங்களேயான நிலையில் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அரசியலமைப்பு நெருக்கடி காரணமாக, தன் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியிருக்கிறார் அவர்.
இதற்கு முன்னர் உத்தராகண்டில் முதல்வராக இருந்த திரிவேந்திர ராவத், தன் மீது எழுந்த கடுமையான அதிருப்தியை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்று அவர் பதவியை ராஜினாமா செய்திந்தார். அவரை தொடர்ந்தே, மார்ச் மாதத்தில் தீரத் சிங் ராவத் முதல்வராகியிருந்தார்.
பதவியேற்றபோது தீரத் சிங், நாடாளுமன்ற எம்.பி.யாக மட்டுமே இருந்ததால், செப்டம்பர் 10-ம் தேதிக்குள் உத்தராகண்ட் மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட வேண்டுமென்ற விதி அவருக்கு சொல்லப்பட்டது. அப்படி தேர்வுசெய்யப்பட்டால் மட்டுமே, அவர் பதவியை தொடர முடியும் என்ற நிலையிருந்தது. ஆனால், கொரோனா நேரத்தில் இடைத்தேர்தலை நடத்துவது மிகவும் சவாலான காரியமென்பதால், தற்போது தானே ராஜினாமா செய்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறார் தீரத் சிங்.
மட்டுமன்றி ஏற்கெனவே 5 மாநில தேர்தல்தான் கொரோனா இரண்டாவது அலைக்கான காரணம் என விமர்சனம் எழுந்திருப்பதாலும், இரண்டாவது அலை இன்னும் முழுமையாக தனியாமல் இருப்பதாலும் இந்த நேரத்தில் மற்றுமொரு இடைத்தேர்தல் வைப்பது சிரமம் என தேர்தல் ஆணையமும் நினைப்பதாக தெரிகிறது. இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை எனும்போது, தீரத் சிங் எம்.எல்.ஏ.வாக முடியாது என்பதால், தற்போது அவருக்கு ராஜினாமா செய்வதை தவிர வேறுவழியில்லை என்றே தெரிகிறது.
ராஜினாமா செய்வதற்கு முன்னராக, மூன்று நாள்களுக்கு டெல்லியிலுள்ள பாஜக தலைமை நிர்வாகிகளை சந்தித்து, ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் தீரத் சிங். அந்த ஆலோசனை கூட்டத்தில், தீரத் சிங்கை பதவிவிலக பாஜக மேலிடம் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆலோசனை கூட்டம் முடிந்த பின், உத்தராகண்ட் மாநில ஆளுநர் ராணி மௌரியாவை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருந்தார், தீரத் சிங். ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுநர் சந்திப்புக்கு முன்னரே திடீரென நேற்று இரவில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவிடம் தனது ராஜினாமாவை அளித்தார் தீரத் சிங்.
தொடர்ந்து, உத்தராகண்டில் உள்ள பாஜக எம்.எல்.ஏ.க்கள், தங்களுக்கான புதிய தலைவரை தேர்ந்தெடுப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டம், இன்று கூடுமென எதிர்ப்பார்க்கபப்டுகிறது. அடுத்த வருடம் தான் உத்தராகண்ட்டில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்பதால், இப்போதைக்கு அடுத்த முதல்வரை உடனடியாக தேர்ந்தெடுக்கும் கட்டாயத்தில் உள்ளனர் பாஜக எம்.எல்.ஏ.க்கள்.
கட்சிக்குள், தீரத் சிங்குக்கு எதிராகவும் எதிர்ப்பு கிளம்பியதே, அவரின் இந்த பதவி விலகலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தீரத் சிங் -க்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்ப முக்கிய காரணமாக இருந்தது, அவரின் கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகள்தாம். குறிப்பாக கும்பமேளா கொண்டாட்டத்துக்கு இவர் அனுமதித்தது, அதுவும் ஆர்.டி.பி.ஆர். பரிசோதனைக்கூட தேவையில்லை என அறிவித்திருந்தது கடுமையான விவாதத்துக்கு உள்ளானது. அவரின் அந்த அலட்சியமே, இரண்டாவது அலை கொரோனாவுக்கு மிக முக்கிய காரணமென சர்ச்சை உருவானது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்