1963ஆம் ஆண்டு முதல் நாகாலாந்தில் அமலில் உள்ள ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகார சட்டத்தை, மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ள மத்திய அரசு, அம்மாநிலத்தை ‘தொந்தரவு நிறைந்த பகுதி’யாக அறிவித்திருக்கிறது.
நாகாலாந்து அமைதி குலைந்த மற்றும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கருதுவதாக தெரிவித்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம், "நாகாலாந்து மாநிலம் முழுவதையும் உள்ளடக்கிய பகுதி மிகவும் குழப்பமான மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று மத்திய அரசு கருதுகிறது, மக்களுக்கு உதவியாக இங்கு ஆயுதப்படைகளைப் பயன்படுத்துவது அவசியம். ஆகவே, 1958 ஆம் ஆண்டின் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தின் பிரிவு 3 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, நாகாலாந்து மாநிலம் முழுவதும் ஆறு மாத காலத்திற்கு 'தொந்தரவுகள் நிறைந்த பகுதி' என்று மத்திய அரசு இதன்மூலம் அறிவிக்கிறது. இந்தச் சட்டம் 2021 ஜூன் 30 முதல் டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும்”என்று கூறியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில், தனிநாடு கோரிக்கையை முன்வைத்து போராடிவரும் நாகா படையினருக்கும், இந்திய அரசுக்கும் இடையே பல்லாண்டு காலமாக மோதல் நீடித்துவருகிறது. இதனால் அம்மாநிலத்தில் 1963 முதல் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது. இந்த சூழலில் ஆகஸ்ட் 3, 2015 அன்று மத்திய அரசு மற்றும் நாகா கிளர்ச்சிக் குழுவின் என்.எஸ்.சி.என்-ஐ.எம் பொதுச் செயலாளர் துங்கலெங் முய்வா ஆகியோருக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆனால் அதன்பின்னரும் இச்சட்டம் இதுவரை திரும்பப் பெறப்படவில்லை.
இச்சட்டம் மூலம் உள்ளூர் போலீஸுடன் இணைந்து ஆயுதப்படைகள் ரோந்து நடத்த அனுமதிக்கிறது. மேலும் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அதிகாரமும் ராணுவத்திடமே இருக்கும். இதனால் அப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடினால் கைதுசெய்ய முடியும், இச்சட்டத்தை மீறும் நபருக்கு அவர்கள் எச்சரிக்கை கொடுத்தும் இணங்காவிட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தலாம். சோதனை ஆணை இல்லாமலே எந்த இடத்திலும் சோதனை செய்யலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்