Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒளிப்பதிவு திருத்த மசோதா: இந்திய திரையுலகை ஒருங்கிணைக்க தமிழ் திரையுலகினர் திட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக இந்திய திரையுலகத்தை ஒருங்கிணைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஒன்றி அரசு சமீபத்தில் ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு மசோதாவை கொண்டுவந்துள்ளது. அதில் தணிக்கை செய்யப்பட்ட படத்திற்கு ஆட்சேபனை வந்தால் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தலாம். திருட்டு வீடியோவிற்கு எதிராக அதிக தண்டனை உள்ளிட்ட வரைவுகளை சேர்த்துள்ளது.  இந்த சட்டத் திருத்த மசோதாவிற்கு தமிழ் திரையுலகில் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலரும் எதிரிப்பு தெரிவித்துள்ளனர். இந்த சட்டத் திருத்த மசோதாவில் உள்ள ‘தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தலாம்‘ என்ற வரைவு மிகவும் ஆபத்தானது என்று திரையுலகினர் கூறுகின்றனர். மேலும் அது கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்கும் விதத்தில் உள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பாரதிராஜா தலைமையிலான நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் காணொலி வாயிலாக இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில் பாரதிராஜா, எஸ்.ஆர்.பிரபு, டி.சிவா, தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி, சத்யஜோதி தியாகராஜன் உள்ளிட்ட தயாரிப்பாளர்களும், ஆர்.கே.செல்வமணி, அமீர், வசந்தபாலன், தங்கர்பச்சான் உள்ளிட்ட இயக்குநர்களும் பங்கேற்றனர்.

அதில், பெரும்பாலானோர் இந்த சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியதுடன், இந்தியாவில் உள்ள அனைத்து திரையுலகத்தினரையும் ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறினர். அதேபோல் இந்த சட்டத் திருத்த மசோதாவில் உள்ள திருட்டு வீடியோவிற்கு (Piracy) எதிரான சட்ட வரைவை மட்டும் ஆதரிக்கலாம் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்தார்.

அப்போது பேசிய இயக்குநர் அமீர், இந்த விவகாரத்தில், தென்னிந்திய திரையுலகை உள்ளடக்கிய South Indian Film Chamber தலையிட்டிருக்க வேண்டும். அவர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அமைதியாக உள்ளனர். பெயர் அளவிற்கே செயல்படும் அந்த அமைப்பை நீக்கிவிட்டு தமிழ் திரையுகிற்கு தனி சேம்பரை உருவாக்க வேண்டும் என்று காட்டமாக கூறினார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ் திரையுலகினர் ஒற்றுமையுடன் குரல் கொடுத்துவருகின்றனர். ஆனால் மற்ற திரையுலகினர் அமைதியாக உள்ளனர். எனவே அவர்களை ஒருங்கிணைப்பது அவசியம் என தமிழ்  தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர். இதற்காக ஒவ்வொரு மொழிகளில் உள்ள திரைத்துறை அமைப்பிற்கும், All India Federation அமைப்பிற்கும் கடிதம் எழுதவுள்ளனர். இதன் மூலம் ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவிற்கான எதிர்ப்பை தீவிரமாக்க முடியும் என்று தமிழ் திரையுலகினர் உறுதியாக நம்புகின்றனர்.

-செந்தில்ராஜா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்