Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பாதரியார் ஜார்ஜ் பொன்னையா கைதை அடுத்து அருமனை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் கைது

இந்து மத நம்பிக்கை குறித்து இழிவாக பேசிய குற்றச்சாட்டில் பாதரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்ட நிலையில், அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீஃபன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜார்ஜ் பொன்னையா என்ற பாதரியார், இந்து மத நம்பிக்கைகளை கேலி செய்ததுடன், அமைச்சர்கள் சேகர்பாபு, செஞ்சி மஸ்தான், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக மதங்களுக்கிடையே விரோதத்தை உருவாக்குதல், மத நம்பிக்கைகளை அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாதரியார் ஜார்ஜ் பொன்னையாவை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாளையங்கோட்டை சிறையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த முதல் குற்றவாளியான ஸ்டீஃபனை தமிழக கேரள எல்லையான மாங்கோடு பகுதியில் வைத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து குளித்துறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக ஸ்டீஃபன் அழைத்துவரப்பட்ட நிலையில், மருத்துவமனை நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு ஸ்டீஃபன், குளித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்